சபையின் மத்தியிலே!



வெளி 1:13 அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.

ஆவிமண்டலத்திலும், பரலோகக் கண்ணோட்டத்திலும் சபை எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதைக் குறித்து அறிந்திருக்கிறோம். விளக்கைச் சுமந்துகொண்டிருக்கிற விளக்குத் தண்டிற்கு சபை ஒப்பிடப்பட்டுள்ளதைக் குறித்து வெளி-1: 12ல் நாம் பார்க்கிறோம். ஆவியானவர் இல்லாத சபையும், ஆவியானவரைப் பெற்றும் ஆவியானவரால் வழிநடத்தப்படாத சபையும் வெளிச்சம் கொடுக்காத பாரம்பரியமான, பயனற்ற சபையாகத்தான் இருக்கும் என்று நாம் அறிந்துகொண்டோம்.

அந்த விளக்குத் தண்டைக்குறித்த படத்தை மீண்டும் பாருங்கள். ஒரு மையத்தண்டு இருக்கிறது, அதிலிருந்து ஏழு கிளைகள் வருகின்றன, அந்தக் கிளைகளின் மேல் விளக்குகள் இருக்கின்றனவிளக்குகள் எரிந்து கொண்டிருக்க என்ன வேண்டும்? எண்ணெய் வேண்டும்! அதைக் குறித்தும் 10 கன்னிகைகளின் உவமையிலிருந்து நாம் பார்க்கிறோம். இந்த மையத்தண்டைக்குறித்து நாம் பார்க்கவிருக்கிறோம்.

வெளி-1: 10ன் படி யோவான் முதலாவது சத்தத்தைக் கேட்டார், சத்தம் கேட்ட யோவானுக்கு அந்த சத்தத்தைப் பேசியவர் யார் என்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. 'சத்தம் கேட்டதே போதும்' என்று அவர் திருப்தியடையவில்லை. 'யார் பேசியது' என்று, பேசிய நபரையும் பார்க்கவேண்டும் என ஆசைப்படுகிறார். அவர் திரும்பியபோது 'மத்தியிலே மனுஷகுமாரனுக்கு ஒப்பானவரைக் கண்டார்'.
யார் இந்த மனுஷகுமாரன்?

மனுஷகுமாரனைக் குறித்த சில குறிப்புகள்:

மாற்-13: 26 அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.

மத்-10: 23 ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள், மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்-17: 9 அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒரு வருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.

மத்-20: 18 இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார், அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து,

லூக்-19: 10 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

அப்-7: 56 அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.

இயேசு கிறிஸ்து பூமியில் வாழ்ந்தபோது தம்மைக் குறித்து மனுஷகுமாரன் என்ற தலைப்பில் அறிமுகப்படுத்துகிறதைக் குறித்தும், அவர் மரித்து உயிர்த்தெழுந்து பரலோகத்திற்குச் சென்ற பிறகு பரலோகத்தில் மனஷகுமாரனாக இயேசு தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதை ஸ்தேவான் தரிசனத்தில் பார்ப்பதைக் குறித்தும் மேலே உள்ள வசனங்களில் நாம் வாசிக்கிறோம்.

எபிரேயர்-2: 14ல் 'ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்' என்று வாசிக்கிறோம். தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து நம்மை மீட்பதற்காக, நம்மை விடுதலையாக்குவதற்காக, மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிப்பதற்காக பூமிக்கு மனிதனாக வந்தார்.

பிலிப்பியர்-2: 6-7 வசனங்களில் 'அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்' என்று பார்க்கிறோம்.

தரிசனத்தில் 'மனுஷகுமாரனுக்கு ஒப்பானவரைக் கண்டேன்' என்று யோவான் சொன்ன வார்த்தையைக்குறித்து நாம் கவனிக்கிறோம். அது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. பொன் குத்துவிளக்குகளின் மத்தியில் இயேசு இருப்பதன் முக்கியத்துவத்தைக் கவனியுங்கள். சபை என்பது இயேசுவை மையமாக வைத்து இயங்கவேண்டும். சபை இயேசுவைச் சார்ந்ததாக, இயேசுவில் நிலைத்திருக்கிறதாக இருக்க வேண்டும். தன்னிச்சையாகச் செயல்படுதல், மனிதத் தலைவர்களை முக்கியப்படுத்தி மேன்மைப்படுத்துதல், மனிதர்களைச் சார்ந்து இயங்குதல் போன்றவைகள் தேவனுடைய பார்வையில் ஏற்றுக்கொள்ளப்படுகிற சரியான ஒரு சபைமுறை அல்ல.

ஆராதனை முறைகள்:
இன்றைக்கு அநேக இடங்களில் ஆராதனை நடைபெறுவதை நாம் அறிவோம். ஆனால் பெரும்பாலான இடங்களில் HERO WORSHIP நடைபெறுகிறது, ஆனால் HERO -வை WORSHIP பண்ணுவது குறைவாக இருக்கிறது. தேவன் ஹீரோ WORSHIP அல்ல மாறாக இயேசு கிறிஸ்துவையே ஹீரோவாக ஆராதிக்கவேண்டும் என்று விரும்புகிறார், வலியுறுத்துகிறார். பழகிப்போன பாரம்பரிய ஆராதனை முறைகள், பார்வைக்காகவும் பாராட்டுக்காகவும் ஆராதிக்கும் முறைகள், திறமைகளைக் காட்டுவதற்காக. ஆதாயத்தைப் பெருவதற்காக ஆராதித்தல் போன்றவைகள் தேவனுக்குப் பிரியமான ஆராதனைகளாக இருக்க முடியாது.

திராட்சைச் செடியும் கொடியும்:
நானே மெய்யான திராட்சைச் செடி. நீங்கள் அதன் கொடிகள் என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

யோவான்-15: 5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான், என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. இயேசு கிறிஸ்துவோடு இணைந்திருக்கிற. இயேசுவில் நிலைத்திருந்து அவரிடமிருந்து சாரத்தைப்பெற்று கனிகொடுக்கிற சபையாக ஒவ்வொரு சபையும் திகழவேண்டும் என்று தேவன் வலியுறுத்துகிறார்அவரில்லாமல் நம்மால் ஒன்றும், ஆம் ஒன்றுமே செய்ய முடியாது.

வெளிப்பாடு-2: 1ல் 'எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன்குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது', நீங்கள் சபையாகக் கூடிவரும்போது உங்கள் மத்தியில், உங்கள் இதயநாயகனாக இயேசுவைக் காண்கிறீர்களா? உங்கள் வாழ்வின் மையமாக, சபையின் மையமாக இயேசு உலாவுகிறதை நீங்கள் அனுபவிக்க முடிகிறதா?
நீங்கள் இயேசுவை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கிற இரகசியம். இயேசுவின் சமூகத்தை முழுமையாக அனுபவிக்கிற பாக்கியம், இயேசுவின் சத்தத்தைக் கேட்கிற அனுபவம், இயேசுவுக்காக மிகுந்த கனிகொடுக்கிற வாழ்க்கை இவைபோன்ற அனைத்துமே இந்த உண்மைக்குள் மறைந்திருக்கிறது.

மத்தேயு-16: 18 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை'. 

சபை மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிற இயேசுதான் தம்முடைய சபையைக் கட்டுகிற வேலையைச் செய்கிறவராக இருக்கிறார். அவருடைய ஆலோசனைகள், அவருடைய நியமித்தல்கள், அவருடைய வழிநடத்துதல்கள் எந்தச் சபையில் முன்நிறுத்தப்பட்டு, முக்கியப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்படுகிறதோ அந்தச் சபையை பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்ள முடியாது. சுயத்தைக்கொண்டு. சுயபெலத்தைக் கொண்டு, பணத்தைக்கொண்டு, பணபலத்தைக்கொண்டு, படிப்பைக்கொண்டு, மற்றவர்கள் செய்கிற முறைகளைப் பின்பற்றிக்கொண்டு, சபையை நாம் கட்டுவோமானால் பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளாது என்று நிச்சயித்துக் கூறமுடியாது.

உங்கள் தனிப்பட்ட வாழ்விலும் சபையிலும் மத்தியிலே, சரீரத்தின் மத்தியில் எப்படி இருதயம் இருக்கிறதோ அதைப் போல, உங்கள் முழுமையையும் இயக்குபவராக, ஒரு கம்ப்யூட்டரில் CPU எப்படி முக்கியமான பகுதியாக இருக்கிறதோ அதைப்போல உள்ளிருந்துகொண்டு உங்களுடைய அனைத்து செயல்பாடுகளையும் நடத்திச் செல்பவராக இயேசு கிறிஸ்து இருக்கவேண்டும் என்று வாஞ்சியுங்கள்.

ஜெபிக்கலாம்!
அன்பின் பரலோகத் தகப்பனே!

சபைகளின் நடுவிலே உலாவுகிறவராக இயேசு கிறிஸ்துவை எங்களுக்கு வெளிப்படுத்திக் காட்டுகிற தேவனே! நாங்கள் ஒவ்வொரு நாளும் இயேசுவை எங்கள் வாழ்வின் மையமாக்கி, அவரோடு இணைந்து உறவாடுகிறவர்களாக, அவருக்குள் நிலைத்திருந்து அவருக்குள் வாழ்கிறவர்களாக, வளருகிறவர்களாக, கனிகொடுக்கிறவர்களாகக் காணப்பட எங்களுக்கு உதவி செய்வீராக! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் அன்பின் தகப்பனே, ஆமென்.

Comments