இயேசுவின் மீட்பின் செயல்
வெளி-5: 9 அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள்தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து: தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர், ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர், நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
ஆராதனைக்கும் மகிமைக்கும் உரியவர் யார் என்பதைக் குறித்து ஏற்கெனவே நாம் அறிந்திருக்கிறோம். பிதாவாகிய தேவனும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா? இந்த வசனத்தில் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து புதிய பாட்டைப் பாடினார்கள் என்று வாசித்தோம். அவர்கள் இயேசுவை ஆராதித்ததை இது காட்டுகிறது.
இயேசு யார்?
இயேசு என்ன செய்தார்?
இயேசு என்ன செய்துகொண்டிருக்கிறார்?
இயேசு என்ன செய்யவிருக்கிறார்?
இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் அவர் ஆராதிக்கப்படுவதற்கான காரணத்தையும் அவசியத்தையும் நமக்கும் உலகத்திற்கும் விவரித்துக் காட்டும் என்று நான் நம்புகிறேன். இதைக் குறித்து பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கற்றுக்கொடுப்பாராக!
இயேசு யார்?
திரித்துவத்தில் இரண்டாவது நபர் என்று அறியப்பட்டிருக்கும் இவர் தேவகுமாரன் என்று அழைக்கப்படுகிறார். மரியாளுக்கு அவருடைய பிறப்பைக் குறித்த காரியம் அறிவிக்கப்பட்டபோது, சொல்லப்பட்ட வார்த்தைகளில் ஒன்று லூக்-1: 35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும், உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும், ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
அவர் பூமிக்கு வந்தபோது மனிதனாக வந்தார், மனிதன் மூலமாகப் பிறந்தவரல்ல, பரிசுத்த ஆவியால் பிறந்தவர், பரிசுத்தமாக வாழ்ந்தவர், அவர் பரிசுத்தர்.
இயேசு என்ன செய்தார்?
- தனக்காக எதையும் செய்யவில்லை
- தனக்காக எதையும் சேர்க்கவில்லை
- தானாக எதையும் செய்யவில்லை
- தானாக எங்கும் செல்லவில்லை
நீர் அடிக்கப்பட்டு: இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார், கைவிடப்பட்டார், பாடுபட்டார், அவமானப்படுத்தப்பட்டார், சிலுவையில் அறையப்பட்டார், கொல்லப்பட்டார். தவறே செய்யாதவர் தண்டிக்கப்பட்டார், குற்றமே இல்லாதவர் குற்றவாளியாகத் தீரப்பிடப்பட்டார். மரணத்திற்கு ஏதுவான எதையுமே அவர் செய்யாதிருந்தும் மரணதண்டனை விதிக்கப்பட்டார்.
சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து: இந்த மீட்பின் செய்தி எல்லா கோத்திரத்தாருக்கும், மொழிபேசுபவர்களுக்கும், ஜனங்களுக்கும், தேசத்தாருக்கும் கொண்டு செல்லப்படவேண்டும் என்ற பாரத்தை தேவன் நமக்குக்கொடுக்க விரும்புகிறார். அறிந்தவர்கள். அனுபவிப்பவர்கள், அழைக்கப்பட்டவர்கள் அறிவிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். பலர் பலவகைப்பட்டு வேலையைச் செய்கிறார்கள், அது அவர்களுக்குரிய அழைப்பு. நமக்குரிய அழைப்பு எது என்பதை நாம் அறிந்து செய்லபடுவோமாக. சகலருக்கும் சென்று அறிவிக்கவேண்டும் என்ற பாரம் என்னை பாரம் அழுத்துகிறது.
தேவனுக்கென்று மீட்டார்: இயேசு எதையும் தனக்காகச் செய்யவில்லை, சேர்க்கவில்லை என்று சொன்னேன். தன்நலமற்ற, தேவனுக்காக வாழ்ந்திடும் இருதயம். நாம் எதைச் செய்தாலும் அதை அவருக்காகச் செய்வோமா? உமக்காகத்தானே ஐயா, நான் உயிர் வாழ்கிறேன் ஐயா!
Comments
Post a Comment