ஆவிக்குரிய போராயுதங்கள் - இரண்டு தலைக்கவசம்
1தெச-5: 8
இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக் கொண்டிருக்கக்கடவோம்.
'கவசம்' என்ற வரிசையில் இரண்டு ஆயுதங்கள் வருவதை நாம் பார்க்கிறோம் முதலாவது மார்க்கவசத்தைக் குறித்துப் பார்த்தோம். இப்பொழுது தலைக்கவசத்தைக் குறித்துப் பார்க்கலாம். போர்ச்சேவகர்கள் யுத்தத்திற்குச் செல்லும்போது தலையிலே ஒரு பாதுகாப்பின் ஆயுதத்தை உடையவர்களாக இருப்பார்கள்.
முழு சரீரத்தின் செயல்பாட்டையும் இயக்குகிற மூளைப்பகுதி தலையிலே இருப்பதால், அது தாக்கப்படாமல், காயப்பட்டுவிடாமல், அடிபட்டுவிடாமல் காக்கப்படுதல் மிகவும் அவசியமானதாக இருக்கிறது. எதிரி எப்பொழுதுமே தலையைத் தான் குறிவைக்கிறவனாக இருக்கிறான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நம்முடைய எதிரி யார் என்றும், அவன் அதிகமாக தன்னுடைய யுத்தத்தை நம்மிலே எந்தப் பகுதியிலே செய்கிறவனாயிருக்கிறான் என்றும் நாம் அறிந்துகொண்டு, அதற்கேற்ப அவனோடு யுத்தம்செய்து அவனை ஜெயிப்பதற்கு ஆயத்தமானவர்களாக இருக்கவேண்டும்.
சாத்தானாகிய பிசாசைக் குறித்து தேவனுடைய வார்த்தை இவ்வாறு சொல்கிறது. 1பேதுரு-5: 8 தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள், ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
அவன் அதிகமாக நம்முடைய சிந்தைப் பகுதியைத் தாக்குகிறவனாக இருக்கிறான். எண்ணங்களில் அவனுடைய தாக்குதல் அதிகமாக இருப்பதை நாம் அறிவோம்.
மனதின் பகுதிகளாக இருப்பவைகள்:
- சிந்தை(Mentality),
- எண்ணங்கள்(Thoughts),
- கற்பனைகள்(Imaginations).
நமக்குள் அடிக்கடி எழும்புகிற:
- அவிசுவாசமான எண்ணங்கள்,
- அருவருப்பான எண்ணங்கள், தேவiயில்லாத கறடபனைகள்
- தீமையான, தவறான எண்ணங்கள்
- விரக்தியான எண்ணங்கள்
- இச்சை, பேராசை போன்ற எண்ணங்கள்
- மாம்சத்திற்கு ஏதுவான எண்ணங்கள் (ரோம-8: 6, 7)
- உலகப்பிரகாரமான, இம்மையைக் குறித்த அநித்தியமானவைகளைக் குறித்த எண்ணங்கள்
- பயம், கவலை, கலக்கம், குழப்பம், மறதி, மனஅழுத்தம், போராட்டம்.... இவைகளெல்லாம் சாத்தான் நம்முடைய தலைப்பகுதியைத் தாக்கும் செயல்களாக இருக்கின்றன.
மத்-16: 23 அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய், தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
இவைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்து, நாம் ஜெயிப்பதற்குத் தேவையான ஆயுதமாக தலைக்கவசத்தை தேவன் கொடுக்கிறார்.
தலைக்கவசம்:
'இரட்சிப்பின் நம்பிக்கை' நமக்கு தலைக்கவசமாக இருக்கிறது.
எபே-6: 17 இரட்சணியமென்னும் தலைச்சீராவையும்,
ஒரு நபர் முதன்முதலில் இரட்சிக்கப்படுவதை இந்த ஆயுதம் குறிக்கவில்லல. மாறாக கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது நம்முடைய சரீரம் மறுரூபமாக்கப்படுதலை, அல்லது உயிர்த்தெழுந்த சரீரத்தை நாம் பெறுவதை இது குறிக்கிறது. 1கொரி-15: 51, 52 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன், நாமெல்லாரும் நித்தியரையடைவதில்லை, ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள், நாமும் மறுரூபமாக்கப்படுவோம். பிலி-3: 21 அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார். ரோம-8: 23 அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.
தேவையற்ற எண்ணங்களும், திசைதிருப்புகிற கற்பனைகளும் வரும்போது அவைகள் அழிவிற்கு உரியவைகள், அழிவிற்கு நேராக நடத்துபவைகள் என்று அறிந்து, அழிவில்லாத, நித்தியத்திற்குரிய, மேன்மையான, மகிமையான சரீரத்தை பெற்று என்றென்றைக்கும் இயேசுவோடு இருப்போம் என்ற எண்ணத்தால் உங்கள் மனதையும் சிந்தையையும் கற்பனையையும் நிரப்பி ஜெயமெடுங்கள்.
Comments
Post a Comment