கொரிந்தியருக்கு எழுதப்பட்ட முதலாவது மற்றும் 2ஆவது கடிதங்கள்


கொரிந்தியருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் குறித்த பார்வை:

I. யார் எழுதியது? எழுதிய ஆசிரியர்
II. யாருக்கு எழுதப்பட்டது?
III. எதற்காக எழுதப்பட்டது? எழுதப்பட்டதன் நோக்கம்

1. எழுதிய ஆசிரியர்: பவுலும், சொஸ்தனேயும்:

1கொரி-1:1 தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலன் ஆகும்படி அழைக்கப் பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும்.
தேவனுடைய சித்தத்தினாலே (ஊழியம்செய்தல் என்பது மனித முயற்சியாலோ, மனுஷீக திட்டத்தாலோ அல்ல, தேவ சித்தத்தினாலே நடைப ெறவேண்டும்)
இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலன் ஆகும்படி அழைக்கப்பட்ட பவுல்.
இது பவுலால் எழுதப் பட்டவைகளில் 4ஆவது கடிதமாக இருக்கிறது. முதலாவது கலாத்தியருக்கு எழுதியது (கி.பி.49-50ல்), 2ஆவது மற்றும் 3ஆவது தெச லோனிக்கேயருக்கு எழுதியது (கி.பி.51ல்). 4ஆவதாக கொரிந்தியருக்குரிய கடிதத்தை எழுதியிருக்கிறார் (கி.பி 54 அல்லது 55ல்). இந்தக் கடிதத்தை எழுதியபோது, பவுல் எபேசு பட்டணத்தில் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
1கொரி-16: 8 ஆகிலும் பெந்தெகொஸ்தே பண்டிகை வரைக்கும் எபேசு பட்டணத்தில் இருப்பேன்.

எழுதப்பட்ட மக்கள்:

1கொரி-1: 2 கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப் பட்டவர்களாயும், பரிசுத்தவான்கள் ஆகும்படி அழைக்கப் பட்டவர்களாய் இருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:
கொரிந்துவிலிருக்குத் தேவனுடைய சபைக்கு, (சபை என்பது மனிதனுடைய அல்ல, அது தேவனுடையதாகும். சபையை இரத்தத்தினால் சம்பாதித்திருக்கிறார். அப்-20: 28 ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக் கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையும் குறித்தும், எச்சரிக்கையாய் இருங்கள்).
கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப் பட்டவர்கள் (ஆவியின் இரட்சிப்பு-உள்ளான மனிதனில்)
பரிசுத்தவான்கள் ஆகும்படி அழைக்கப்பட்டவர்கள் (ஆத்தும இரட்சிப்பு-அன்றாட வாழ்வில்)
இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் (உலகெங்குமுள்ள இரட்சிக்கப்பட்டு மக்கள்)
கொரிந்து பட்டணம் தீமைக்கும், ஒழுக்கக் கேட்டிற்கும் பெயர்போன பட்டணமாக இருந்தது. கிரேக்கத்தில் கொரிந்தியத் தன்மை என்பதற்கு ஒழுக்கக் கேடானதைச் செய்தல், குடிபோதைக் குரியவர்கள் என்று அர்த்தமாக இருந்தது. இந்தப் பட்டணம் முக்கியமாக அப்ரோதித் (Aphrodhite) என்ற ஒரு தெய்வத்தை ஆராதிப்பதை மையமாகக் கொண்டிருந்தது. இந்தக் கோவிலில் 1000 பெண் பூசாரிகள் அர்ப்பணிக்கப் பட்டவர்களாக இருந்து, விபச்சாரம் செய்து கொண்டி இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையிலிருந்த இந்த ரோம-கிரேக்கப் பட்டணத்திற்குள் கி.பி.51ல் பவுல் ஊழியம்செய்வதற்காக வந்தார். இங்கே 18 மாதங்கள் தங்கியிருந்து சபையை ஸ்தாபித்தார். இந்தநாட்களில் அநேகர் இரட்சிக்கப்பட்டார்கள். ஒருசிலருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். இங்கே யூதவிசுவாசிகளாகிய பிரிஸ்கில்லாவும் அப்போல்லோவும் பவுலுக்கு உதவிசெய்தார்கள். அதன்பிறகு, சீலாவும் தீமோத்தேயுவும் பவுலோடு சேர்ந்துகொண்டார்கள்.
அப்-18: 1, 11 அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தை விட்டு, கொரிந்து பட்டணத்துக்கு வந்து, 11. அவன் ஒரு வருஷமும் ஆறு மாதமும் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்குள்ளே உபதேசம் பண்ணிக் கொண்டு வந்தான்.
1கொரி-1: 14-16 என் நாமத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தேனென்று ஒருவனும் சொல்லாதபடிக்கு, 15. நான் கிறிஸ்புவுக்கும் (ஜெபஆலயத் தலைவனாவார்), காயுவுக்குமேயன்றி, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை, இதற்காகத் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். 16. ஸ்தேவானுடைய வீட்டாருக்கும் நான் ஞானஸ்நானங் கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் இன்னும் யாருக்காவது நான் ஞானஸ்நானம் கொடுத்தேனோ இல்லையோ அறியேன்.
சிலகாலம் கழித்து எபேசுவிலிருந்து விசுவாசிகள், எகிப்து தேசத்தின் அலெச்ந்திரியாவில் இருந்து வந்திருந்த அப்பொல்லோவை இந்தச் சபைக்கு அனுப்பிவைத்தார்கள். அவர் இந்த சபைக்கு மிகவும் உதவியாக இருந்தார். கொரிந்துவிலிருந்து சென்றபிறகு, கொரிந்து சபைக்கு ஒரு கடிதத்தை எழுதியிருந்திருக்கிறார். அதைக்குறித்து அதிகம் நமக்கு ஒன்றும் தெரியவில்லை. அதில் குறிப்பாக வேசித்தனம், விபச்சாரம் செய்பவர்களோடு ஐக்கியமாக இருக்கவேண்டாம் என்று எச்சரித்திருப்பதை நாம் பார்க்கிறோம்.
1கொரி-5: 9 விபசாரக்காரரோடே கலந்திருக்கக் கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன்.
பிறகு எபேசுவிலிருந்து அடுத்த கடிதத்தை எழுதினார். சபையில் காணப்பட்டுக் கொண்டிருந்த பிரச்சினைகளைக் குறித்து குலோவேயாள் வீட்டார் மூலம் கேள்விப்பட்டதால், அதை சரபடுத்துவதற்காக இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார். அதையே கொரிந்தியருக்கு முதல் கடிதம் என்று நாம் பார்க்கிறோம்.
1கொரி-1: 11 ஏனெனில், என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது.
இதற்குப்பிற்கு, எபேசுவிலிருந்து கொரிந்து பட்டணத்திற்குப் இரண்டாவதுமுறை பயணம்செய்தார். அது அவருக்கு மிகவும் வேதனையுண்டாக்கிய பயணமாக இருந்தது.
2கொரி-2: 1 நான் துக்கத்துடனே உங்களிடத்தில் மறுபடியும் வராதபடிக்கு எனக்குள்ளே தீர்மானித்துக் கொண்டேன்.
2கொரி-12: 14 இதோ, உங்களிடத்திற்கு மூன்றாந்தரம் வர ஆயத்தமாயிருக்கிறேன், நான் உங்களை வருத்தப் படுத்துவதில்லை, நான் உங்களுடையதையல்ல, உங்களையே தேடுகிறேன், பெற்றாருக்குப் பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றார்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க வேண்டும்.
2கொரி-13: 1-2 இந்த மூன்றாந்தரம் நான் உங்களிடத்திற்கு வருகிறேன், சகல காரியங்களும் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும். 2. நான் இரண்டாந்தரம் உங்களிடத்தில் இருந்தபோது சொன்னதுபோல, இப்பொழுது தூரமாயிருந்தும் உங்களிடத்தில் இருக்கிறவனாக, நான் மறுபடியும் வந்தால் தப்பவிட மாட்டேனென்று முன்பு பாவம் செய்தவர்களுக்கும் மற்ற எல்லாருக்கும் முன்னறிவித்து எழுதுகிறேன்.
இரண்டவாதுமுறை கொரிந்துவுக்குச் சென்றுவிட்டு எபேசுவுக்கு வந்தபிறகு, கி.பி.56ன் துவக்க நாட்களில், மறுபடியும் ஒரு கடிதத்தை கொரிந்து சபையாருக்கு எழுதியிருக்கிறார். அதைத் தீத்துவின் கையில் கொடுத்து அனுப்பிருக்கிறார். அது பவுல் கொரிந்தியருக்கு எழுதிய 3அவது கடிதமாக இருக்கிறது.
2கொரி-2: 3-4 என்னுடைய சந்தோஷம் உங்களெல்லாருக்கும் சந்தோஷமாய் இருக்குமென்று, நான் உங்களெல்லாரையும் பற்றி நம்பிக்கை உள்ளவனாயிருந்து, நான் வரும்போது, என்னைச் சந்தோஷப்படுத்த வேண்டியவர்களால் நான் துக்கமடையாதபடிக்கு, அதை உங்களுக்கு எழுதினேன். 4. அன்றியும், நீங்கள் துக்கப்படும் படிக்கு எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் மிகுதியை நீங்கள் அறியும்படிக்கே, மிகுந்த வியாகுலமும் மன இடுக்கமும் அடைந்தவனாய் அதிகக் கண்ணீரோடே உங்களுக்கு எழுதினேன்.
2கொரி-7: 8 ஆதலால் நான் நிருபத்தினாலே உங்களைத் துக்கப் படுத்தியிருந்தும், அந்த நிரூபம் கொஞ்சப் பொழுதாகிலும் உங்களைத் துக்கப் படுத்தினதென்று கண்டு நான் மனஸ்தாபப் பட்டிருந்தும், இப்பொழுது மனஸ்தாபப் படுகிறதில்லை.
பவுல் கொரிந்தியருக்கு எழுதிய 3ஆவது கடிதம் கொரிந்தியருக்குள் மனஸ்தாபத்தையும், மனந்திரும்புதலையும் உண்டுபண்ணியிருந்தது. அந்த மனமாற்றத்தைக் குறித்த செய்தியை தீத்து பவுலுக்குத் தெரியப் படுத்தினார்.
2கொரி-7: 5-12 எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிலே வந்தபோது, எங்கள் சாரிரத்திற்கு இளைப்பாறுதல் ஒன்றுமில்லாமல், எப்பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம், புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன. 6. ஆகிலும், சிறுமைப் பட்டவர்களுக்கு ஆறதல் செய்கிற தேவன் தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல்செய்தார். 7. அவன் வந்ததினாலே மாத்திரமல்ல, உங்கள் வாஞ்சையையும், உங்கள் துக்கிப்பையும், என்னைப்பற்றி உங்களுக்கு உண்டான பக்தி வைராக்கியத்தையும் அவன் கண்டு, உங்களால் அடைந்த ஆறுதலைத் தெரியப் படுத்தினதாலும், நானும் ஆறுதலடைந்து அதிகமாய்ச் சந்தோஷப்பட்டேன். 8. ஆதலால் நான் நிரூபத்தினாலே உங்களைத் துக்கப் படுத்தியிருந்தும், அந்த நிரூபம் கொஞ்சப் பொழுதாகிலும் உங்களைத் துக்கப் படுத்தினதென்று கண்டு நான் மனஸ்தாபப் பட்டிருந்தும், இப்பொழுது மனஸ்தாபப் படுகிறதில்லை. 9. இப்பொழுது சந்தோஷப்படுகிறேன், நீங்கள் துக்கப்பட்டதற்காக அல்ல, மனம் திரும்புகிறதற் கேதுவாகத் துக்கப் பட்டதற்காகவே சந்தோஷப் படுகிறேன், நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடிக்கு, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே. 10. தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப் படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது, லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது. 11. பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே, அது உங்களிடத்தில் எவ்வளவு ஜாக்கிரதையையும், குற்றந்தீர எவ்வளவு நியாயம் சொல்லுதலையும், எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும், எவ்வளவு ஆவலையும், எவ்வளவு பக்தி வைராக்கியத்தையும், எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கிற்று. இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைச் சுத்தவான்களென்று விளங்கப் பண்ணினீர்கள். 12. ஆதலால் நான் உங்களுக்கு அப்படி எழுதியிருந்தும், அநியாயம் செய்தவனிமித்தம் அல்ல, அநியாயம் செய்யப் பட்டவனிமித்தமும் அல்ல, தேவனுக்குமுன்பாக உங்களைக் குறித்து எங்களுக்கு உண்டாயிருக்கிற ஜாக்கிரதை வெளிப்படும் பொருட்டே அப்படி எழுதினேன்.
இதைத்தொடர்ந்து கி.பி.56ல் பவுல் எழுதிய 4ஆவது கடிதம், வேதாகமத்தில் நமக்கு கொரிந்தியருக்கு எழுதிய 2ஆவது கடிதமாக இருக்கிறது. அவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கவும், தன்னுடைய 3ஆவது வருதலுக்கு அவர்களை ஆயத்தப்படுத்தவும் அதை எழுதியிருக்கிறார்.

எழுதப்பட்டதன் நோக்கம்:

கொரிந்து பட்டணத்திலிருந்த சபை, தங்களுடைய பழைய வழிகளிலிருந்து வேறு பிரிக்கப்படுதலுக்கு மனமில்லாதிருந்ததில் இருந்து அவர்களை சரிபடுத்துவது பவுலுக்கு அவசியமாகத் தோன்றியது. கீழ்படியாமலும், மனந்திரும்பத் தவறுகிற மற்ற விசுவாசிகளுடனும் உள்ள ஐக்கியத்தை அகற்றும்படி மாத்திரமல்ல, அப்படிப்பட்டவர்களை சபையைவிட்டுத் தள்ளிவைக்குமாறும், உண்மையுள்ள விசுவாசிகளுக்குப் பவுல் எழுதுயிருக்கிறார்.
1கொரி-5: 9-13 விபசாரக்காரரோடே கலந்திருக்கக் கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன். 10. ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகா ஆராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக் கூடாதென்று நான் எழுதவில்லை, அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப் போக வேண்டியதாய் இருக்குமே. 11. நான் உங்களுக்கு எழுதினது என்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் (சபையில் உள்ள ஒருவன்) விபசாரக் காரனாயாவது, பொருளாசைக் காரனாயாவது, விக்கிரகாராதனைக் காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக் காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக் கூடாது, அப்படிப் பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது. 12. புறம்பே இருக்கிறவர்களைக் குறித்துத் தீர்ப்புச் செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக் குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச் செய்கிறீர்கள்? 13. புறம்பே இருக்கிறவர்களைக் குறித்துத் தேவனே தீர்ப்புச் செய்வார், ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களை விட்டுத் தள்ளிப் போடுங்கள்.
மொத்தம் 16 அதிகாரங்களில், 13ஆவது அதிகாரத்தைத் தவிர மற்ற அனைத்து அதிகாரங்களிலும், இயேசு கிறிஸ்துவைக்குறித்து 156 முறை பவுல் குறிப்பிட்டிருக்கிறார். 13ஆவது அதிகாரம் அன்பின் அதிகாரம் என்று அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவம், கிறிஸ்துவையே மையமாகக் கொண்டிருக்கிறது என்பதைப் பவுல் தெளிவுபடுத்துகிறார்.
இந்தக் கடிதத்தில் பிரிவினையிலிருந்து, விபச்சாரம் வரையிலான பல்வேறுபட்ட முக்கியமான காரியங்களுக்கு தெளிவைக் கொடுக்கிறார்.
பிரிவினை
விபச்சாரம், வேசித்தனம்
வழக்குகள் (சட்டரீதியானவைகள்)
விவாகம் (திருமண வாழ்வு)
சாந்தமான பராமரிப்பு
விக்கிரக ஆராதனை
கர்த்தருடைய இராபோஜனம்
ஆவியின் வரங்கள்
உயிர்த்தெழுதல்
கொடுத்தல், போன்ற பல காரியங்களை இந்தக் கடிதத்தில் விவரித்திருக்கிறார்.

கொரிந்தியருக்கு எழுதப்பட்ட முதலாம் கடிதத்தின் தொகுப்பு

I. அதிகாரம்-1: 1-9 முகவுரை
1. பவுலின் அறிமுகம் (1: 1-3)
2. பவுலின் ஜெபம் (1: 4-9)
முகவுரையைத் தொடர்ந்து, முதல் 6 அதிகாரங்களில் சபையில் காணப்பட்ட பிரச்சினைகளைச் சரிபடுத்துதலைப் பவுல் மேற்கொள்கிறார். அதைத்தொடர்ந்து, 7ஆவது அதிகாரத்திலிருந்து மற்ற பல காரியங்களைக் குறித்த கற்பித்தலைத் தொடருகிறார்.
II. அதிகாரம் 1: 10 முதல் 6 சபையில் காணப்பட்ட பிரச்சினைகள்
1. சபையிலே பிரிவினை என்ற பிரச்சினை (1: 10 முதல் 4: 21)
அ. சுவிசேஷத்தின் நிமித்தமான பிரிவினை அல்ல (1: 18-31)
ஆ. உபத்திரவத்தின் நிமித்தமான பிரிவினையும் அல்ல (2)
இ. மாறாக மாம்சத்தின் படியான பிரிவினை (3: 1-4)
ஈ. அவனவனுடைய வேலைப்பாடு வெளியரங்கமாக்கப் படும் (3: 5-17)
உ. பிறமனிதரைப் புகழவேண்டாம் (3: 18-23)
ஊ. உங்களைக் குறித்தும் மேன்மை பாராட்ட வேண்டாம் (4)
2. சபையிலே விபச்சாரம் என்ற பிரச்சினை (5-6)
அ. சிலருக்குள் இருக்கும் பாவம், பலரையும் கெடுக்கும் (5: 1-8)
ஆ. புளித்தமாவாகிய துர்குணத்தையும், பொல்லாப்பையும் அகற்றவேண்டும் (5: 9-13)
3. வழக்குகள் (6: 1-11)
அ. விசுவாசிகளுக் கிடையே எழும் பிரச்சினைகள் சபையிலே சரிபடுத்தப் படவேண்டும் (6: 1-6)
ஆ. நீதியாக வாழ்ந்து, அநியாயத்தைச் சகிக்கவேண்டும் (6: 7-11)
4. வேசித்தன அசுத்தம் (6: 12-20)
III. அதிகாரங்கள் 7 முதல் 16: 12 பிற காரியங்களைக் குறித்த போதனைகள்
1. திருமண வாழ்வு (7)
அ. பொதுவான கொள்கைகள் (7: 1-9)
ஆ. கணவன் மனைவியைவிட்டுப் பிரியாதிருத்தல் (7: 10-16)
இ. தேவன் அழைத்த நிலையில் நிலைத்திருத்தல் (7: 17-24)
ஈ. திருமணம் ஆகாதவர்களுக்கு (7: 25-40)
2. சபையில் கிறிஸ்தவ சுயாதீனம் (8: 1 முதல் 11: 1)
அ. உங்களுக்கிருக்கும் அறிவைப் பிறர் இடறுவதற்குப் பயன்படுத்த வேண்டாம் (8)
ஆ. பவுல் காண்பித்திருக்கும் முன்மாதிரி வாழ்வைப் பின்பற்றுங்கள் (9)
இ. பழைய ஏற்பாட்டு சம்பவ உதாரணங்கள் (10: 1-33)
i. நான் விழமாட்டேன் என்ற அகந்தை வேண்டாம் (10: 1-13)
ii. விக்கிர ஆராதனைக்கு விலகி ஓடுங்கள் (10: 14-22)
iii. சகலத்தையும் தேவன் மகிமைப்படும்படி செய்யுங்கள் (10: 23-11: 1)
3. சபைச் செயல்பாடுகள் (11: 2-34)
அ. ஆண்கள், பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் (11: 2-16)
ஆ. அவமானத்திற்குரிய காரியங்கள் சபையில் அனுமதிக்கப் படக்கூடாது (11: 17-22)
இ. கர்த்தருடைய பந்தியைக் கொண்டாடுதல் (11: 23-34)
4. ஆவியின் வரங்கள் (12-14)
அ. ஆவியானவரே வரங்களைக் கொடுக்கிறார; (12: 1-11)
ஆ. வெவ்வேறாக இருந்தாலும் ஒரே நோக்கத்திற்காகவே இருக்கிறது (12: 12-30)
விசுவாசிகளைப் பெலப்படுத்துதல், உற்சாகப்படுத்துதல், ஆறுதல்படுத்துதல்.
இ. அன்பே மேன்மையான வரமாக இருக்கிறது (12: 31 முதல் 13)
ஈ. ஞானவரங்களை விரும்புங்கள் (14)- தீர்க்கதரிசன வரம், அந்நியபாஷை
5. உயிர்த்தெழுதல் (15)
அ. சுவிசேஷத்தின் சுருக்கம் (15: 1-11)
ஆ. வருங்கால உயிர்த்தெழுதல் (15: 12-34)
இ. உயிர்த்தெழவிருக்கும் சரீரத்தின் தன்மைகள் (15: 35-49)
ஈ. உயிர்த்தெழுதலும் மறுரூபமாகுதலும் நடைபெறும் வேகம் (15: 50-58)
6. பரிசுத்தவான்களுக்குக் கொடுத்தல் (16: 1-4)
7. பிறகுறிப்புக்கள் (16: 5-12)
IV. அதிகாரம் 16: 13-24 முடிவுரை
1. இறுதி ஆலோசனை (16: 13-18)
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள். 14. உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.
2. இறுதி வாழ்த்து (16: 19-21)
3. இறுதி எச்சரிப்பு (16: 22)
ஒருவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்பு கூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாய் இருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார்.
4. இறுதி ஆசீர்வாதம் (16: 23-24)

கொரிந்தியருக்கு எழுதப்பட்ட இரண்டாம் கடிதத்தின் தொகுப்பு

கொரிந்தியருக்கு எழுதப்பட்ட 2ஆவது கடிதம், பாடுகள் மற்றும் சந்தோஷத்தைக்குறித்து உள்ளது. பாடுகளும், சந்தோஷமும் ஊழியத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கின்றன என்பதை இது நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
I. அதிகாரம்-1: 1-2 வாழ்த்து
2கொரி-1: 1-2 தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொரிந்து பட்டணத்திலுள்ள தேவனுடைய சபைக்கும், அகாயா நாடெங்குமுள்ள எல்லாப் பரிசுத்த வான்களுக்கும் எழுதுகிறதாவது: 2. நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
II. அதிகாரங்கள்-1: 3 முதல் 7: 16 மனம்திறந்து பேசுதல்
1. மிகுதியான உபத்திரவங்கள் (1: 3-11)
அ. உபத்திரவங்கள் ஆறுதலைப் பெற்றுக் கொடுக்கிறது
ஆ. உபத்திரவங்கள் பிறருடைய இரட்சிப்பு ஏதுவானதாகப் பயன்படுகிறது
இ. மற்றவர்களுடைய ஜெபத்தால் உபத்திரவத்தின் அளவு தணிக்கப்படுகிறது
2. சந்திக்க வரவேண்டும் என்ற விருப்பம் (1: 12 முதல் 2: 11)
அ. அவர்களுடைய பிரயோஜனத்திற் காகவே தாமதித்தது
ஆ. துக்கத்தோடு வரவிரும்பவில்லை (2: 1-11)
3. பவுலின் நோக்கம் (2: 12 முதல் 6: 10)
அ. தேவனுடைய வழிடத்துதல் (2: 12-17)
ஆ. ஊழியர்களின் கடிதங்கள் விசுவாசிகளே (3: 1-6)
இ. மகிமையான உடன்படிக்கை (3: 7-18) நீதியைக் கொடுக்கும் ஆவிக்குரிய ஊழியம்
2கொரி-3: 18 நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.
ஈ. மகிமையான ஒளி (4: 1-6) கிறிஸ்துவின் சுவிசேஷம்
2கொரி-4: 4 தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாய் இராதபடிக்கு, இப் பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
உ. தோற்கடிக்கப் படமுடியாத உள்ளான மனிதன் (4: 7-18)
2கொரி-4: 17 மேலும் காணப்படுகிற வைகளையல்ல, காணப் படாதவைகைள நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.
ஊ. நித்திய நம்பிக்கை (5: 1-8)
எ. கர்த்தருக்குப் பிரியமாயிருக்க நாடுதல் (5: 9-11)
2கொரி-5: 17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக் குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாய் இருக்கிறான், பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
2கொரி-5: 10 ஏனென்றால், சாPரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
ஏ. நெருக்கி ஏவுகிற அன்பு (5: 12-21)
ஐ. முழுமையான அர்ப்பணம் (6: 1-10)
4. பரிசுத்தமுள்ள வாழ்வு (6: 11 முதல் 7: 16)
அ. உலகத்தோடு சம்பந்தம் வேண்டாம் (6: 11 முதல் 7: 1)
ஆ. பரிசுத்தத்தைக் குறித்த கரிசனை (7: 2-12)
2கொரி-7: 9 இப்பொழுது சந்தோஷப்படுகிறேன், நீங்கள் துக்கப்பட்டதற்காக அல்ல, மனம் திரும்புகிறதற் கேதுவாகத் துக்கப் பட்டதற்காகவே சந்தோஷப் படுகிறேன், நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப் படாதபடிக்கு, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே.
இ. விசுவாசிகளைக் குறித்த நிச்சயம் (7: 13-16)
III. அதிகாரங்கள் 8-9: கொடுத்தலைக் குறித்த ஆலோசனை
1. மக்கெதோனியரின் கொடுக்கும் தன்மை (8: 1-7)
2கொரி-8: 2 அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப் படுகையில், கொடிய தரித்திரம் உடையவர்களாய் இருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தர்கள்.
2. கிறிஸ்து தம்மையே கொடுத்தது (8: 8-15)
3. கணக்கு ஒப்புவித்தலில் உண்மையாயிருத்தல் (8: 16-24)
4. கொடுப்பதற்கு ஆயத்தம்பண்ணுதல் (9: 1-5)
5. கொடுத்தலின் சந்தோஷம் (9: 6-15)
2கொரி-9: 7 அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன், உற்சாகமாய்க் கொடுக் கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
IV. அதிகாரங்கள் 10 முதல் 13: 10: பவுலின் சந்தித்தல்
1. கீழ்படியாமையைத் தண்டித்தல் (10: 1-6)
2. ஊன்றக் கட்டுவதற்குரிய அதிகாரம் (10: 7-18)
3. பவுலும், கள்ளப்போதகர்களும் (11: 1-15)
4. மாம்சத்தின் தன்மையில் பவுல் மேன்பாராட்டுதல் (11: 16-33)
5. பெலவீனங்களைக் குறித்து சந்தோஷப்படுதல் (12: 1-13)
2கொரி-12: 9 அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும், பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன்.
6. கொரிந்தியருக்கான பவுலின் கரிசனை (12: 14-21)
2கொரி-12: 15 ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்பு கூரப் பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக் காகச்செலவு பண்ணவும் செலவு பண்ணப்படவும் விரும்புகிறேன்.
7. சபைக்கு பவுலின் எச்சரிப்பு (13: 1-10)
IV. அதிகாரம் 13: 11-14: முடிவுரை
2கொரி-13: 11 கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள், ஏக சிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்.

திரியேக தேவனைக்குறித்த தொகுப்பு:

2கொரி-13: 14 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

Comments