பேதுரு எழுதிய முதல் மற்றும் 2ஆவது கடிதங்கள்


பேதுரு எழுதிய முதல் மற்றும் 2ஆவது கடிதங்கள்

I. முகவுரை (ஆசிரியர் மற்றும் அவருடைய வாழ்த்து)
II. கடிதத்தின் செய்தி (எழுதியதன் நோக்கம்)
III. முடிவுரை (வாழ்த்து, நன்றி)

முகவுரை:

1பேது-1: 1-2 இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு, எழுதுகிறதாவது.
2பேது-1: 1 இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலன் ஆகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது.
இந்தக் கடிதங்களை பேதுருதான் எழுதினார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், மீன்பிடிக்கும் தொழிலைச் செய்துகொண்டிருந்த ஒருவர் இவ்வளவு சிறப்பான விதத்தில் எழுதியிருக்கிறார் என்பது எல்லாருக்குமே ஆச்சரியமளிக்கிறது. இப்படிப்பட்ட தன்மை பேதுருவுக்கு எவ்வாறு வந்தது? இயேசுவோடு இருந்த 3 ஆண்டுகள், அவருக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. அவர் பேசுவதைக்கேட்டு அதிகாரிகளும் ஆச்சரியப்பட்டார்கள். இயேசுவோடுகூட இருத்தல் ஒரு நபரை மிகவும் புத்திசாலியாக மாற்றுகிறது என்பதற்கு இது சிறந்த அடையாளமாக இருக்கிறது.
அப்-4: 13 பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர் களென்றும், பேதைமையுள்ளவர் களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்று அறிந்து கொண்டார்கள்.
பவுலைப்போல, பேதுருவும் தன்னுடைய நாட்களில் சுமார் கி.பி.95 ஆண்டுகளில் இரத்தசாட்சியாக மரித்தார் என்று ரோமாபுரியின் கிளமெண்ட் குறிப்பிடுகிறார். அப்போஸ்தலர்களை அறிந்தவரும், அந்தியோகு சபையின் 3ஆவது மேய்ப்பராகவும் இருந்த இக்னேஷியஸ், அந்தியோகு சபைக்குரிய அஸ்திபாரத்தை பேதுருவும் பவுலும் இணைந்து போட்டார்கள் என்று தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டடிருக்கிறார். தீமோத்தேயு பவுலோடு இணைக்கப் பட்டதுபோல (சீடராக), கிளமெண்ட் பேதுருவோடு இணைக்கப்பட்டுக் காட்டப்படுகிறார். ரோமாபுரியின் நீரோ மன்னன்தான் பேதுருவையும், பவுலையும் சிலுவையில் அறைந்து கொன்றான் என்று சரித்திரம் தெரிவிக்கிறது.

பேதுருவைக்குறித்து:

சுவிசேஷங்களில் முந்திரிக்கொட்டை போல செயல்படுவதில் பேதுரு பெயர்போனவராக இருந்ததைப் பார்க்கிறோம். ஆனாலும், அவருடைய முதிர்ச்சியடைதல் சபைக்குத் தலவராக எழும்பச்செய்தது. தலைவராக இருந்தபோதிலும், பெருமைக்கோ அல்லது அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்தவதற்கோ இடம்கொடுக்கவில்லை. ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் போப் என்று பேதுருவை அவர்கள் குறிப்படுகிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. ரோமாபுரிக்கு பேதுரு செல்வதற்கு பல ஆண்டுகளுக்குமுன்பே பவுல் அங்குசென்றிருந்தார். பேதுரு பிற்காலங்களில் நம்பிக்கையின் அப்போஸ்தலர் என்று அறியப்பட்டார்.
பவுல் விசுவாசத்தின் அப்போஸ்தலன்
யோவான் அன்பின் அப்போஸ்தலன்
பேதுரு நம்பிக்கையின் அப்போஸ்தலன்

எழுதப்பட்ட மக்கள்:

1பேது-1: 1-2 பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா தேசங்களிலே சிதறி இருக்கிறவர்களில், 2. பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்த மாக்குதலினாலே கீழ்ப்படிதலுக்கும், இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தந் தெளிக்கப் படுதலுக்கும் தெரிந்து கொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது.
கி.பி.67ஆவது ஆண்டுகள் மிகவும் கடினமான நாட்களாக இருந்தன. கி.பி.64ல் நீரோ ரோமாபுரியின் மன்னனான். துவக்கத்திலிருந்தே அவன் கொடூரமானவனாகவும், துன்மார்க்கனாகவும் இருந்தான். தன்னுடைய இறுதிக்காலத்தில் அவன் பைத்தியம்பிடித்து, பிசாசினால் பிடிக்கப்பட்டிருந்தான். தன் விருப்பத்திற்கேற்ப ரோமாபுரியைப் புதுப்பித்துக் கட்டநினைத்தான். உதாரணத்திற்கு 1,30,000 பேர் அமரக்கூடிய அளவு இருந்த சர்க்கஸ் மைதானத்தை, இது போதாதென்று 3 லட்சம் பேர் உட்காருகிற அளவுக்கு இடித்துக் கட்டினான். பல இடங்களில் வேண்டுமென்றே தீவைத்துக் கொளுத்துவானாம். பலர் தங்களுடைய சொத்துக்களை இழக்கநேரிட்டது. மக்கள் மத்தியில் அவனுக்கு அவப்பெயர் பெருகி பலர் அவனுக்கு விரோதமாக எழும்ப ஆரம்பித்தபோது, பலியை கிறிஸ்தவர்கள் மேல்போட்டு அவர்களை சித்திரவதை செய்ய ஆரம்பித்தான். இதினிமித்தம் பல கிறிஸ்தவர்கள் ரோமாபுரியைவிட்டு பல்வேறு இடங்களுக்குத் தப்பி ஓடினார்கள். வேறு நாடுகளில்போய் தஞ்சம் புகுந்தார்கள். அப்படிச் சிதறிப்போய் பரதேசிகளாக இருந்த யூத கிறிஸ்தவர்களுக்கு பேதுரு இந்த முதல் கடிதத்தை எழுதினார். இதன் அடிப்படையில்தான் யூதர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்குமாறு பேதுருவை தேவன் பலப்படுத்தினார் என்று கலாத்தியருக்கு எழுதிய கடிதத்தில் பவுல் குறிப்பிடுகிறார்.
கலா-2: 7-8 அதுவுமல்லாமல், விருத்தசேதன முள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாய் இருக்கும்படி பேதுருவைப் பலப்படுத்தினவர், புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாய் இருக்கும்படி என்னையும் பலப் படுத்தினபடியால், 8. அதுவுமல்லாமல், விருத்தசேதன முள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாய் இருக்கும்படி பேதுருவைப் பலப்படுத்தினவர் புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாய் இருக்கும்படி என்னையும் பலப்படுத்தினார்.
இந்தப் பூமியிலே நாமும் பரதேசிகளாக இருக்கிறோம். நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் இருக்கிறது. நம்முடைய தாய்நாடு பரலோகம். நாம் இங்கே பரதேசிகளாக இருக்கிறபடியால், இது நமக்கும் எழுதப்பட்ட புத்தகமாக இருக்கிறது. இந்தப் புத்தகம் குறிப்பாக பாடுகளைக்குறித்து அதிகமாகப் பேசுகிறது. நம்முடைய பூமிக்குரிய வாழ்வு குறுகிய காலம்தான் என்பதைக்குறித்தும் (1பேது-1: 6), இயேசுவின் வருகையைக் குறித்தும் இதிலே விவரிக்கப் பட்டிருக்கிறது (1பேது-1: 7,13, 2: 12, 4: 5,7,13, 5: 1,4)

1 பேதுருவில் இயேசு:

1. நம்முடைய கர்த்தர் (1: 3)
2. விலையேறப்பெற்ற ஜீவனுள்ள கல் (2: 4)
3. மூலைக்கல் (2: 6-7)
4. பாவமில்லாதவர் (2: 22)
5. ஆத்துமாக்களுக்கு மேய்ப்பர், கண்காணி (2: 25)
6. பிரதான மேய்ப்பர் (5: 4)
7. நம்முடைய மாதிரி (2: 21)

1 பேதுருவில் உள்ள சில புதிரானவைகள்:

I. 1: 10-12ல் இயேசுவின் பாடுகள் மற்றும் மகிமையைக்குறித்து தீர்க்கதரிசிகளும் தேவதூதர்களும் விநோதமாகப் பார்த்தார்களாம்.
II. யோவா-5: 22ல் நியாத்தீர்ப்புக்குரிய அதிகாரம் முழுவதையும் பிதா இயேசுவுக்குக் கொடுத்திருக்கிறார் என்று சொல்லப் பட்டிருந்தாலும், 1: 17ல் பிதா நியாந்தீர்ப்பார் என்று சொல்லப் பட்டடிருக்கிறது
III. 3: 19-21ல் கிறிஸ்து, ஆவிகளுக்குப் பிரசங்கித்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு 4 வேறுபட்ட வியாக்கியானக் கருத்துக்கள் உள்ளன.
அ. கிறிஸ்து ஆவியிலே நோவாவோடு பேசினார் என்ற கருத்து.
ஆ. தனது மரணத்திற்குக்குப் பிறகு கிறிஸ்து தூதர்களுக்கும் மனிதர்களுக்கும், பிறந்து வாழ்ந்து மரித்துப்போன இராட்சத ஆவிகளுக்குப் பிரசங்கித்தார் என்ற கருத்து.
இ. விழுந்துபோன தூதர;களுக்குப் பிரசங்கித்தார் என்ற கருத்து.
ஈ. மரித்துப்போன சகல ஆவிகளுக்கும் பிரசங்கித்து மனிதர்களின் ஆவிகளை வெளியே அழைத்துவந்தார் என்ற கருத்து.
1பேதுரு4: 6ல் இதற்காக மரித்தோரானவர்கள், மனுஷர்முன்பாக மாம்சத்திலே ஆக்கினைக் குள்ளாக்கப் பட்டிருந்தும், தேவன் முன்பாக ஆவியிலே பிழைக்கும் படியாக, அவர்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது என்ற மற்றொரு குறிப்பும் கொடுக்கப் பட்டிருக்கிறது.
1. ஒருமுறைகூட சுவிசேஷத்தைக் கேட்காமல் போனவர்களுக்கு இரட்சிப்பைப் பெறுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்திட சுவிசேஷம் பிரசங்கிக்கப் பட்டது என்ற கருத்து.
2. அப்போஸ்தலர்கள் சரீரத்தில் உயிரோடு வாழ்பவர்களுக்கும், ஆவியில் மரித்திருப்போருக்கும் சுவிசேஷத்தை அறிவித்தார்கள் என்ற கருத்து.
3. இப்பொழுது சரீரப்பிரகாரமாக மரித்திருக்கிற, ஆனால் சுவிசேஷத்தை விசுவாசித்ததால் ஆவியில் பிழைத்திருப் பவர்களுக்கு அப்போஸ்தலர்கள் சுவிசேஷத்தை அறிவித்தார்கள் என்ற கருத்து.

பேதுரு எழுதிய முதல் கடிதத்தின் தொகுப்பு:

1பேது-5: 12 உங்களுக்குப் புத்திசொல்லும்படிக்கும், நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை தேவனுடைய மெய்யான கிருபைதானென்று சாட்சியிடும்படிக்கும், நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதி, எனக்குத் தோன்றுகிறபடி உண்மையுள்ள சகோதரனாகிய சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன்.
I. அதிகாரம்-1: 1-2 முகவுரை
1பேது-1: 2 கிருபையும், சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.
II. அதிகாரம்-1: 3-25 இரட்சிப்பின்மூலமாக மெய்யான கிருபை
1. இரட்சிப்பின் நம்பிக்கை (1: 3-5)
1பேது-1: 4-5 அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற் கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். 5. கடைசிக் காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப் பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப் பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்திரம் பரலோகத்தில் வைக்கப் பட்டிருக்கிறது.
2. இரட்சிப்பின் சந்தோஷம் (1: 6-9)
1பேது-1: 8-9 அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள், இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம்வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாய் இருக்கிற சந்தோஷ முள்ளவர்களாய் களிகூர்ந்து, 9. உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்.
3. இரட்சிப்பிற்குள்ளான ஆய்வு (1: 10-12)
4. இரட்சிப்பின் புதிய ஜீவன் (1: 13-16)
5. இரட்சிப்பின் மீட்பு (1: 17-21)
6. இரட்சிப்பின் புதுப்பிறப்பு (1: 22-25)
III. அதிகாரங்கள்- 2-3 பரிசுத்தமாக்கப் படுதல்மூலம் மெய்யான கிருபை
1. பரிசுத்தத்தின் ஆகாரம் (2: 1-3)
1பேது-2: 3 நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப் பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.
2. பரிசுத்தத்தின் அமைப்பு (2: 4-8)
1பேது-2: 5 நீங்கள் ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக் கூட்டமாகவும் கட்டப் பட்டுவருகிறீர்கள்.
3. பரிசுத்தத்தின் கூட்டம் (2: 9-10)
1பேது-2: 9 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
4. பரிசுதத்தின் பணிவிடை (2: 11-17)
மாம்ச இச்சைகளைவிட்டு விலகுதல், புறஜாதிகள் மத்தியில் நல்நடக்கை உள்ளவர்களாக வாழ்தல், அதிகாரிகளுக்குக் கீழ்படிதல்
5. பரிசுத்தத்தின் பாடுகள் (2: 18-20)
1பேது-2: 20 நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரிதியாயிருக்கும்.
6. பரிசுத்தத்தின் மேய்ப்பர் (2: 21-25)
7. பரிசுத்தத்தின் குடும்பக் கடமைகள் (3: 1-7)
மனைவியின் நடத்தை, அலங்காரம், கணவனின் கடமை.
1பேது-3: 4 அழியாத அலங்கரிப்பாய் இருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாய் இருக்கக்கடவது, அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.
8. பரிசுத்தத்தின் பேச்சு (3: 8-12)
1பேது-3: 10-11 ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டு மென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, 11. பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்.
9. பரிசுத்தத்தின் இருக்கை-பாடுகள் (3: 13-17)
10. பரிசுத்தத்தின் இரட்சகர; (3: 18-22)
1பேது-3: 18-19 ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதி உள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார், அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். 19. அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.
IV. அதிகாரம்-4 பாடுகள்மூலம் மெய்யான கிருபை
1. பாடுகளுக்கு பதிலளிக்க வேண்டியமுறை (4: 1-11)
1பேது-4: 2 ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்.
2. பாடுகளின் வருங்கால நம்பிக்கை (4: 12-19)
1பேது-4: 12-13 பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியொரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், 13. கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.
V. அதிகாரம்-5: 1-11 ஊழியம்செய்வதன் மூலம் மெய்யான கிருபை
1. மூப்பர்களுக்குரிய கட்டளை (5: 1-4)
1பேது-5: 1-3 உங்களிலுள்ள மூப்பருக்கு உடன் மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாய் இருக்கிற நான் புத்தி சொல்லுகிறது என்னவென்றால்: 2. உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், 3. சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.
2. பாடுபடும் சபைக்குரிய ஆலோசனைகள் (5: 5-11)
1பேது-5: 6-9 ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். 7. அவர் உங்களை விசாரிக்கிறவரான படியால், உங்கள் கவலைகளை எல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். 8. தெளிந்த புத்தி உள்ளவர்களாய் இருங்கள், விழித்திருங்கள், ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். 9. விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள், உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறி வருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.
VI. அதிகாரம்-5: 12-14 முடிவுரை
1பேது-5: 12-14 உங்களுக்குப் புத்தி சொல்லும்படிக்கும், நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை தேவனுடைய மெய்யான கிருபைதானென்று சாட்சியிடும்படிக்கும், நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதி, எனக்குத் தோன்றுகிறபடி உண்மையுள்ள சகோதரனாகிய சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன். 13. உங்களுடனேகூடத் தெரிந்து கொள்ளப் பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். 14. ஒருவரையொருவர் அன்பின் முத்தத்தோடே வாழ்த்துதல் செய்யுங்கள். கிறிஸ்து இயேசுவுக்குள்ளான உங்கள் அனைவருக்கும் சமாதானம் உண்டாவதாக. ஆமென்.
பேதுரு, இந்தக் கடிதத்தை பாபிலோனிலிருந்து எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. கிருபையைக்குறித்த நிச்சயப் படுத்துதலையும், பாடுகளினூடாக கிருபை நம்மை நடத்திச்செல்லும் என்பதையும் பேதுரு குறிப்பிடுகிறார்.

பேதுரு எழுதிய 2ஆவது கடிதத்தின் தொகுப்பு:

2பேது-1: 1 நம்முடைய தேவனும் இரட்சகருமாய் இருக்கிற இயேசு கிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலன் ஆகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:
பேதுரு எழுதிய 2ஆவது கடிதம் மிகுந்த சவால் நிறைந்ததாக இருக்கிறது. இது கி.பி.64ல் எழுதப் பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தப் புத்தகம் ஆதிநாட்களில் 66 புத்தகங்களில் ஒன்றாக சேர்க்கப் படாமலிருந்து, கி.பி.260 முதல் 340ல் வாழ்ந்த ஆரம்பகாலத்து சபை சரித்திரவாளர் ஜோசேப்பஸ்தான் முதலாவதாக இதையும் அங்கீகரிப்பிற்குரிய 66 புத்தகளுக்கு உட்படுத்தினார். இது "வல்லமையின் புத்தகம்" என்று அழைக்கப்படலாம்.
அதிகாரம்-1: தேவபக்தியுள்ள வாழ்விற்குரிய வல்லமை
1. பரிசுத்தமாக்கப் படுதலைக்குறித்த முக்கியமான அதிகாரமாக இது இருக்கிறது (மற்ற அதிகாரங்கள் ரோமர்-8, கொலோசேயர்-3).
2. இந்த அதிகாரத்தின் இறுதிப்பகுதி, சத்தம் கேட்பதைவிட வேதவசனம் அதிக நிச்சயமானதாக இருக்கிறது என்று கற்பிக்கிறது.
2பேது-1: 18-21 அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பர்வதத்தில் இருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம். 19. அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு, பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருள் உள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப் போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும். 20. வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளை உடையதாய் இராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. 21. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை, தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.
அதிகாரம்-2: துன்மார்க்க மனிதரிடமிருந்து விடுவிக்கப் படுவதற் குரிய வல்லமை
1. கள்ளப் போதகர்களும் இயேசு கிறிஸ்துவால் கிரயத்துக் கொள்ளப் பட்டவர்கள் தான் என்று தெளிவாகக் கூறுகிறது (இரட்சிக்கப்பட்டு பிறகு பின் மாற்றத்திற்குள் சென்றவர்கள்).
2பேது-2: 1 கள்ளத் தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள், அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக் கொள்ளுவார்கள்.
அதிகாரம்-3: அழிவு மற்றும் புதுசிருஷ்டிப்பின் வல்லமை
2பேது-3: 7,11,13 இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது. 11. இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாய் இருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்! 13. அவருடைய வாக்குத்தத் தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.
இந்தப் புத்தகத்தின் முக்கிய வாக்கியம், இயேசு கிறிஸ்துவைக் குறித்து அறிகிற அறிவு.
1: 2 தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் பெருகக்கடவது.
1: 3 தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும், தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினது.
1: 8 இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும், கனி அற்றவர்களுமாய் இருக்கவொட்டாது.
2: 20 கர்த்தரும் இரட்சகருமாய் இருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள், மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை, முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.
3: 18 நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும், அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
I. அதிகாரம்-1: 1-2 முகவுரை
II. அதிகாரம்-1: 3-21 மெய்யானவைகள்
1. கிறிஸ்தவ வாழ்வில் மெய்யானவைகள் (1: 3-11)
அ. வாழ்தலும், தேவபக்தியும் நம்முடையவைகள் (1: 3-4)
ஆ. வாழ்க்கையை ஜாக்கிரதையுடன் வாழவேண்டும் (1: 5-7)
கட்டியெழுப்பப் படவேண்டிய வளர்ச்சிப்படிகள் 7
நீங்கள் அதிக ஜாக்கிரதை உள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே
1. தைரியத்தையும்,
2. ஞானத்தையும்,
3. இச்சை அடக்கத்தையும்,
4. பொறுமையையும்,
5. தேவபக்தியையும்,
6. சகோதர சிநேகத்தையும்,
7. அன்பையும் கூட்டி வழங்குங்கள்.
2பேது-1: 11 இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.
2. நினைப்பூட்டுதலில் மெய்யானவைகள் (1: 12-15)
2பேது-1: 12 இதினிமித்தம், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை எப்பொழுதும் நினைப்பூட்ட நான் அசதியாயிரேன்.
3. சாட்சியின் நிச்சயத்தில் மெய்யானவைகள் (1: 16-18)
2பேது-2: 16-18 நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். 17. இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, 18. அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்தில் இருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.
III. அதிகாரம்-2 பொய்யானவைகள்
1. கடந்தகால உதாரணங்கள் (2: 1-22)
அ. கள்ளப் போதகர்களின் ஆபத்து (2: 1-3)
ஆ. கள்ளப் போதகர்களின் அழிவு (2: 4-9)
பாவம்செய்த தூதர்கள் (2: 4)
நோவாவின் நாட்களில் (2: 5)
சோதோம் கொமோரா பட்டணத்தார் (2: 6)
லோத் காக்கப்பட்டது (2: 7-8)
தேவ பக்தியுள்ளவர்கள் காக்கப்படுதல் (2: 9)
இ. கள்ளப் போதகர்களைக் குறித்த விவரித்தல் (2: 10-22)

கள்ளப் போதகர்களின் செயல்பாடுகள்:

2பேது-2: 12-22 இவர்களோ பிடிபட்டழிக் கப்படுவதற்கு உண்டான புத்தியற்ற மிருக ஜீவன்களைப் போலத் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷித்து, தங்கள் கேட்டிலே கெட்டழிந்து, அநீதத்தின் பலனை அடைவார்கள். 13. இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாய் இருந்து, உங்களோடே விருந்துண்கையில் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள், 14. விபசாரமயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தை விட்டோயாதவைகளுமாய் இருக்கிற கண்களைய உடையவர்கள், உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய்ப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள். 15. செம்மையான வழியைவிட்டுத் தப்பிநடந்து (பிலேயாமின் தவறு-கிருபையின்மை), (எண்-22) பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் (பிலேயாமின் வழி-பேராசை,) பின்பற்றிப் போனவர்கள், அவன் அநீதத்தின் கூலியை விரும்பி, 16. தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம் (பிலேயாமின் உபதேசம்-கலப்படப் போதனை) கடிந்து கொள்ளப்பட்டான், பேசாத மிருகம் மனுஷர்பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது. 17. இவர்கள் தண்ணீறில்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடியுண்டோடுகிற மேகங்களுமாய் இருக்கிறார்கள், என்றென்றைக்கும் உள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப் பட்டிருக்கிறது. 18. வஞ்சகமாய் நடக்கிறவர்களிடத்தில் இருந்து அரிதாய்த் தப்பினவர்களிடத்தில் இவர்கள் அகந்தையான வீண்வார்தைகளைப் பேசி, மாம்ச இச்சைகளினாலும், காம விகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாய்ப் பிடிக்கிறார்கள். 19. தாங்களோ கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம் பண்ணுகிறார்கள், எதினால் ஒருவன் ஜெயிக்கப் பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப் பட்டிருக்கிறானே. 20. கர்த்தரும் இரட்சகருமாய் இருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும். 21. அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப் பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்கள் ஆனால் அவர்களுக்கு நலமாயிருக்கும். 22. நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.
IV. அதிகாரம்-3: முடிவானவைகள்- நம்பிக்கை
1. கடைசி நாட்களில், பரியாசக்காரரின் வார்த்தைகள் (3: 1-4)
2பேது-3: 3-4 முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, 4. அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரை அடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாய் இருக்கிறதே என்று சொல்லுவார்கள்.
2. சிருஷ்டிகரின் வார்த்தை (3: 5-7)
2பேது-3: 5-6 பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலை கொண்டிருக்கிற பூமியும் உண்டாயின வென்பதையும், 6. அப்பொழுது இருந்த உலகம் ஜலப் பிரளயத்தினாலே அழிந்த தென்பதையும் மனதார அறியாமல் இருக்கிறார்கள்.
3. சிருஷ்டிகரின் திட்டம்: (3: 8-9)
2பேது-3: 8-9 பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள் போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக் கவேண்டாம். 9. தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத் தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமை உள்ளவராயிருக்கிறார்.
4. பூமியிலுள்ளவைகள் அழிக்கப்படுதல் (3: 10-13)
5. நாம் ஆயத்தமாக வாழவேண்டியமுறை (3: 14-18)
2பேது-3: 14-18 ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும், பிழை இல்லாதவர்களுமாய் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாய் இருங்கள். 15. மேலும் நம்முடைய கர்த்தரின் நீடியபொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள், நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான், 16. எல்லா நிரூபங்களிலும் இவைகளைக் குறித்துப் பேசியிருக்கிறான், அவன் சொன்னவைகளில் சிலகாரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது, கல்லாதவர்களும், உறுதி இல்லாதவர்களும் மற்ற வேத வாக்கியங்களைப் புரட்டுகிறது போலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள். 17. ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்தி இருக்கிறபடியால், அக்கிரமக் காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்து போகாதபடிக்கு எச்சரிக்கையாய் இருந்து,
V. அதிகாரம்-3: 18 முடிவுரை
2பேது-3: 18 நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும், அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.

Comments