யூதா எழுதிய கடிதம்


யூதா எழுதிய கடிதம் குறித்த பார்வை:

I. முகவுரை (ஆசிரியர் மற்றும் அவருடைய வாழ்த்து)
II. கடிதத்தின் செய்தி (எழுதியதன் நோக்கம்)
III. முடிவுரை (வாழ்த்து, நன்றி)

1. முகவுரை (ஆசிரியர் மற்றும் அவருடைய வாழ்த்து)

யார் இந்த யூதா? புதியஏற்பாட்டிலே மொத்தம் 5 யூதாக்கள் குறிப்பிடப் பட்டுள்ளார்கள்.
1. அப்-9: 11. தமஸ்கு பட்டணத்து யூதா - அப்பொழுது கர்த்தர்: நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சு பட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு.
2. அப்-15: 22, 27, 32. பர்சபா என்று மறுபேர்கொண்ட யூதா - அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவுக்கு அனுப்புகிறது அப்போஸ்தலருக்கும் மூப்பருக்கும் சபையாரெல்லாருக்கும் நலமாகக்கண்டது. அவர்கள் யாரென்றால், சகோதரரில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்று மறுபேர்கொண்ட யூதாவும் சீலாவுமே.
3. மத்-10: 4. இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதா ஸ்காரியோத்து - அவரைக் காட்டிக்கொடுத்த யூதா ஸ்காரியோத்து என்பவைகளே.
4. யோவா-14: 22. அப்போஸ்தலனாகிய யூதா - ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி.
5. மத்-13: 55, மாற்-6: 3. இயேசுவின் சகோதரனாகிய யூதா - இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?
இந்த யூதாக்களில், ஆதிசபையின் நாட்களில் இயேசுவின் சகோதரனாகிய யூதா பிரபல்யமானவராக இருந்தார். இவர் எருசலேமிலிருந்த சபைக்குத் தலைவராகவும் இருந்தார். இந்தப் புத்தகத்தை இயேசுவின் சகோதரனாகிய யூதா எழுதியிருக்கிறார். தனது கடிதத்தில் யூதா தன்னை அப்போஸ்தலர்களில் இருந்து பிரித்துக் காட்டி இருப்பதை நாம் பார்க்கிறோம்.
யூதா-1: 17 நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூருங்கள்.
இயேசுவின் சகோதரர்கள் ஊழியத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதைக்குறித்து 1கொரிந்தியரில் குறிப்பிடப் பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.
1கொரி-9: 5 மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா?
முதல் வசனத்தில் யூதா, தன்னை யாக்கோபின் சகோதரன் என்றும் இயேசுவின் அடிமை ஊழியன் என்றும் அறிமுகப் படுத்தியருப்பதைக் கவனியுங்கள்.
யூதா-1: 1 இயேசு கிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாய் இருக்கிற யூதா.
மத்தேயு-13: 55 மற்றும் மாற்கு-6: 3ல் யாக்கோபு இயேசுவின் சகோதரன் என்றும், அந்தப் பட்டியலில் யூதாவின் பெயரும் குறிப்பிடப் பட்டிருப்பதையும் பார்த்தோம். தன்னை யாக்கோபின் சகோதரன் என்று சொன்னவர், தான் இயேசுவின் சகோதரனாக இருந்தும், தன்னை இயேசுவின் சகோதரன் என்று அறிமுகப் படுத்தவில்லையே, காரணம் என்ன?
1. தன்னை ஒரு பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ள யூதா விரும்பவில்லை.
2. யூதாவின் உண்மையான தாழ்மையை நாம் பார்க்கிறோம்.
3. தன்னையே இயேசுவுக்கு மனப்பூர்வமான அடிமையாக்கிக் கொண்டிருந்தார்.

கடிதத்தின் செய்தி (எழுதியதன் நோக்கம்):

முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில், சபைகளுக்குள்ளே கள்ளப் போதகர்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் ஊடுருவிக் கொண்டிருந்த நாட்களில் யூதா இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார். குறிப்பிட்டு யாருக்கு எழுதினார் என்பது நமக்குக் கொடுக்கப்படவில்லை, ஆனாலும் இது விசுவாசிகளுக்கு எழுதப்பட்டுகிறது.
யூதா-1: 1 பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப் பட்டவர்களும், இயேசு கிறிஸ்துவினாலே காக்கப் பட்டவர்களுமாகிய அழைக்கப் பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
அ. பரிசுத்தமாக்கப் பட்டவர்கள்
ஆ. இயேசு கிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்கள்
இ. அழைக்கப் பட்டவர்கள்
இந்தப் புத்தகம் 2பேதுருவின் 2ஆம் அதிகாரத்தோடு இசைந்திருக்கிறது. இரண்டுமே கள்ளப் போதகர்களைக் குறித்த எச்சரிப்பை நமக்குக் கொடுக்கின்றன. வேறொரு காரியத்தைக் குறித்து எழுத வேண்டுமென்று நினைத்த யூதா, கள்ளப் போதகர்களைக் குறித்த எச்சரிப்பை சபைக்கு எழுதவேண்டும் என்று உந்தப்பட்டு, அது அவசரமானதாகப் பார்த்ததால் இதை எழுதியருக்கிறார். விசுவாசிகள், தேவபக்தியற்ற மனிதர்களுக்கு விரோதமாக, விசுவாசத்திற்காக உறுதியாக நின்று போராடுவதற்கான அழைப்பை இது கொடுக்கிறது. இது கி.பி 65 முதல் 80ற்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப் பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
யூதா-1: 3 பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக் குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்து உள்ளவனாய் இருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராட வேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.
I. முகவுரை (யூதா 1: 1-2 )
1: 2 உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகக்கடவது
II. எழுதப்பட்டதன் நோக்கம் (யூதா 1: 3-4)
1: 3-4 பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்து உள்ளவனாய் இருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராட வேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது. 4. ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக் கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தி அற்றவர்களாகிய சிலர் பக்கவழியாய் நுழைந்தி இருக்கிறார்கள் (சபைக்குள்), அவர்கள் இந்த ஆக்கினைக்கு உள்ளாவார்கள் என்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.
இரட்சிப்பைக் குறித்து எழுதுவது அல்லது பேசுவது என்பது நம்பிக்கை மற்றும் சந்தோஷத்தின் செய்தியாகும். ஆனாலும் அதைவிட, தேவனுடைய கிருபையைப் பயன்படுத்தி, எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று காமவிகாரத்திற்கும், பாவத்திற்கும் அதை ஒரு உரிமத்தைப்போல (License) பயன்படுத்துகிற உபதேசத்தை சபைமக்களிடையே கொண்டு வந்தவர்களைக் குறித்து எச்சரித்து, முதன்முதலில் ஒப்புவிக்கப் பட்ட விசுவாசத்தைவிட்டு விலகாதவாறு அதிலே நிலைத்திருக்கப் போராடவேண்டும், யுத்தம் செய்திடவேண்டும் என்பதைக் குறித்து எழுதுகிறார்.

விசுவாசம் எதற்கு?

1. பரிசுத்தமாக்கப்பட
2. நீதிமானாக்கப்பட
3. தேவனோடு உறவில் இணைக்கப்பட

விசுவாசத்தை எதற்குப் பயன் படுத்திட வேண்டும்?

1. மரணத்திற்கும் பாதாளத்திற்கும் தப்புவிக்கப்பட
2. நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள
3. தீமையினின்று பாதுகாக்கப்பட
மாம்சத்திற்கும் சுயநலத்திற்கும் உரிய காரியங்களைப் பெற்று உல்லாசமாக வாழ்வதற்காக அல்ல.
III. கள்ளப் போதகர்களைக் குறித்த விவரித்தல்: (யூதா 1: 5-16 )
1. கடந்தகாலத்தில் கள்ளப் போதகர்கள் மீதான நியாயத் தீர்ப்புகள் (1: 5-7)
அ. தேவனுக்கு விரோதமாக முரட்டாட்டம்செய்த இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் அழிக்கப்பட்டார்கள்.
1: 5 நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறது என்னவெனில், கர்த்தர் தமது ஜனத்தை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசு வாசியாதவர்களை அழித்தார்.
ஆ. ஆதிமேன்மையைக் காக்காமல் தங்கள் வாசஸ்தலத்தைவிட்ட தூதர்களைக் கட்டி, அந்தகாரத்திலே அடைத்து வைத்திருக்கிறார்.
1: 6 தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக் கொள்ளாமல், தங்களுக் குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத் தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்.
இ. விபச்சாரப்பாவம் செய்த சோதோம் கொமோரா பட்டணத்தாரை அக்கினியால் சுட்டெரிக்கப் பட்டார்கள்.
1: 7 அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப்போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப் பட்டிருக்கிறார்கள்.
2. நிகழ்காலத்தில் கள்ளப்போதகர்களின் சுபாவங்கள் (1: 8-11)
1: 11 இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச்செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.
3. கள்ளப் போதகர்களின் விளைவுகள் (1: 12-13)
Ψ1: 12-13 இவர்கள் காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ்செத்து வேரற்றுப்போன மரங்களும், 13. தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாய் இருக்கிறார்கள், இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப் பட்டிருக்கிறது.
4. கள்ளப் போதகர்களுக்கு உரிய வருங்கால நியாயத்தீர்ப்பு (1: 14-16)
1: 14-15 ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவ பக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளின் நிமித்தமும், 15. தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகள் எல்லாவற்றின் நிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடு கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.

சபைக்குள் நுழையும் கள்ளமனிதர்களின் தன்மைகள்:

1. பக்கவழியாக நுழைபவர்கள் (1: 4)- நேர்வழியாக வரமாட்டார்கள்
2. காம விகாரமுடையவர்கள் (1: 4)- இச்சை
3. பாவத்திற்கு ஏதுவாக, கிருபையைப் புரட்டுபவர்கள் (1: 4)
4. தேவனையும், இயேசு கிறிஸ்துவையும் மறுதலிப்பவர்கள் (1: 4)
5. சொப்பனக்காரர்கள் (1: 8)
6. மாம்சத்தை அசுசிப்படுத்துபவர்கள் (1: 8)- கரைப்படுத்துதல்
7. அதிகாரத்தை அசட்டை பண்ணுபவர்கள் (1: 8)
8. மகத்துவத்தைத் தூஷிப்பவர்கள் (1: 8)- தேவனால் படைக்கப்பட்டவைகள் (தூதர்கள்...)
9. தங்களுக்குத் தெரிந்தி இருப்பவைகளைக் கொண்டு தங்களையே கெடுத்துக் கொள்பவர்கள் (1: 10)
10. தங்களுக்கென ஒரு பக்திமுறையை ஏற்படுத்திக் கொள்பவர்கள் (1: 11-காயீனின் வழி - வெறுப்பு)
11. தங்கள் பக்திமுறையை ஆதாயத்திற்காகப் பயன்படுத்துபவர்கள் (1: 11-பிலேயாமின் வஞ்சம் - பணஆசை)
12. தேவன் ஏற்படுத்திய தலைவர்களுக்கு தங்களைச் சமமாக்கிக் கொள்பவர்கள் (1: 11-கோராவின் எதிர்த்தல் - பொறாமை)
13. விருந்துகளில் கறைகளாய் இருப்பவர்கள் (1: 12)- உணவுப்பிரியர்கள்
14. பயமற்றவர்கள் (1: 12)
15. தங்களைத் தாங்களே மேய்த்துக் கொள்பவர்கள் (1: 12)
16. காற்றுகளால் அடியுண்டு ஓடுகிற தண்ணீரற்ற மேகங்கள் (1: 12)
17. இரண்டுதரம் வேர் செத்துப்போன கனியற்ற மரங்கள் (1: 12)
18. தங்கள் அவமானங்களை நுரையாகத் தள்ளுகிற அலைகள் (1: 13)
19. வழிதப்பி அலைகிற நட்சத்திரங்கள் (1: 13)
20. முறுமுறுக்கிறவர்கள் (1: 16)
21. முறையிடுகிறவர்கள் (1: 16)
22. தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்கள் (1: 16)
23. இறுமாப்பு ஆனவைகளைப் பேசுபவர்கள் (1: 16)
24. தற்புகழுக்காக முகஸ்துதி செய்பவர்கள் (1: 16)
25. பரியாசக்காரர்கள் (1: 18)
26. பிரிந்துபோகிறவர்கள் (1: 19)-பிரிவினைகளை உண்டாக்குபவர்கள்
27. ஜென்ம சுபாவத்தாரும் (1: 19)-உலகத் தன்மைக் குரியவர்கள்
28. ஆவியில்லாதவர்கள் (1: 19)
IV. கள்ளப்போதகர்களுக்கு விரோதமாக நிலைத்துநின்றிட செய்ய வேண்டியவைகள்: (யூதா1: 17-23)
1. கற்றுக் கொடுக்கப்பட்ட வார்த்தைளை நினைவில் கொள்ளுங்கள் (1: 17-18)
1: 17-18 நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன்சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூருங்கள். 18. கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.
2. உங்கள் மகாபரிசுத்தமான விசுவாசத்தில் உங்களை உறுதிப்படுத்துங்கள் (1: 20)
3. பரிசுத்தஆவிக்குள் ஜெபம்பண்ணுங்கள் (1: 20)
4. தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொள்ளுங்கள் (1: 21)
5. இயேசுகிறிஸ்துவின் இரக்கத்தைப் பெறக்காத்திருங்கள் (1: 21)
6. பிறரைக்குறித்த இரக்கம் உடையவர்களாக வாழுங்கள் (1: 22-23)
1: 22-23 அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவு உள்ளவர்களாய் இருந்து, சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து, 23. மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள்.
V. வாழ்த்து (யூதா 24-25)
1: 24-25 வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், 25. தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.

Comments