புலம்பல்


முகவுரை:

புலம்பல் என்றால் கண்ணீர்வடித்தல், அழுதல் என்று அர்த்தமாகும். குறிப்பாக மரித்தோரின் அடக்கநேரத்தோடு தொடர்புடைய வார்த்தையாக இது இருக்கிறது. ஒரு நகரம் (எருசலேம்) அடக்கம் பண்ணப்பட்டதை புலம்பலின் புத்தகம் விவரிக்கிறது.
1. எருசலேம் அழிக்கப்படுகிறது
எருசலேமின் அழிக்கப்படுதல் என்பது யாருக்கும் தெரியாமல் சடிதியில் வந்த ஒன்றல்ல, தீர்க்கதரிசிகள் மூலமாக ஏற்கெனவே பலவருடங்களாக முன்அறிவிக்கப்பட்ட ஒன்றுதான்.
2. எரேமியாவின் இருதயம் உடைக்கப்படுகிறது:
தீர்க்கதரிசனமாக பலவருடங்கள் முன்னறிவித்தும், யாரும் செவி கொடுக்கவில்லை. அதை யாரும் நம்பவில்லை, இயேசு கிறிஸ்து எருசலேமைப் பார்த்து கண்ணீர்விட்டதுபோல, எரேமியாவும் எருசலேமிற்காகக் கண்ணீர்வடித்துப் புலம்புகிறார். நம்முடைய பகுதியில் அழிவு வரும்போது நாம் வேடிக்கை பார்க்கிறோமா அல்லது வேதனைப் படுகிறோமா? விலகிநிற்கிறோமா அல்லது விண்ணப் பிக்கிறோமா?
3. எரேமியாவிற்குள் பெருமைக்கான ஒன்றையும் நாம் காணவில்லை:
நான் சொன்னேன், நீங்கள் கேட்கவில்லை, பாருங்கள் இப்பொழுது நான் சொன்னபடியே நடந்திருக்கிறது என்று எரேமியா ஆணவமாகவோ, சினத்துடனோ காணப்படாமல், அழுது புலம்புவதையே பார்க்கிறோம்.
4. நகரம் அழிக்கப்பட்டபோது தன் சொந்தக் கண்களால் அவர் பார்க்க வேண்டியிருந்தது:
எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும்! இந்தப் புத்தகத்திலே அந்த வேதனையை எரேமியா ஊற்றுகிறார். ஒலிவமலையில் அமர்ந்துகொண்டு, எருசலேமிற்கு நடக்கிற சம்பவங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் இதை எழுதியிருக்கிறார். இதை எரேமியாதான் எழுதியிருக்க வேண்டும் என்று பலர் ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்தான் எழுதினார் என்பதற்கு ஆதாரமாக பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. புலம்பல் 3ஆவது அதிகாரம் எரேமியாவின் 38: 1-13 அதிகாரத்தோடு ஒத்துவரக்கூடியதாக இருக்கிறது.
புல-3: 52-57 முகாந்தரம் இல்லாமல் என்னைப் பகைக்கிறவார்கள் என்னை ஒரு பட்சியைப்போல வேட்டையாடினார்கள். 53. காவற்கிடங்கிலே என் பிராணனை ஒடுக்கி, என்மீதில் கல்லை வைத்தார்கள். 54. தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது, நாசமானேன் என்றேன். 55. மகாஆழமான கிடங்கிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப்பற்றிக் கூப்பிட்டேன். 56. என் சத்தத்தைக் கேட்டீர், என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக் கொள்ளாதேயும். 57. நான் உம்மை நோக்கிக் கூப்பிட்ட நாளிலே நீர் அணுகி: பயப்படாதே என்றீர்.
எரே-38: 1-10 இந்த நகரத்திலே தாித்திருக்கிறவன், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவான், கல்தேயரிடத்துக்குப் புறப்பட்டுப் போகிறவனோ உயிரோடிருப்பான், அவனுடைய பிராணன் அவனுக்குக் கிடைத்த கொள்ளை உடைமையைப் போலிருக்கும், அவன் பிழைப்பானென்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்றும், 2. இந்த நகரம் பாபிலோன் ராஜாவினுடைய இராணுவத்தின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படும், அவன் அதைப் பிடிப்பானென்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்றும், 3. எரேமியா எல்லா ஜனத்தோடும் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகளை மாத்தானின் குமாரனாகிய செப்பத்தியாவும், பஸ்கூரின் குமாரனாகிய கெதலியாவும், செலேமியாவின் குமாரனாகிய யூகாலும், மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரும் கேட்டார்கள். 4. அப்பொழுது பிரபுக்கள் ராஜாவை நோக்கி: இந்த மனுஷன் கொல்லப்பட உத்தரவாகவேண்டும், அதேனென்றால், இந்த நகரத்தில் மீதியாயிருக்கிற யுத்த மனுஷாிடத்திலும், மற்றுமுள்ள சகல ஜனங்களிடத்திலும், இவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறதினாலே அவர்களுடைய கைகளைத் தளர்ந்து போகபண்ணுகிறான், இவன் இந்த ஜனத்தின் சேஷமத்தைத் தேடாமல், அவர்கள் கேட்டையே தேடுகிறான் என்றார்கள். 5. அப்பொழுது சிதேக்கியா ராஜா: இதோ, அவன் உங்கள் கைகளில் இருக்கிறான், உங்களுக்கு விரோதமாய் ராஜா ஒன்றும் செய்யக்கூடாது என்றான். 6. அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள், எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள், அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான். 7. அவர்கள் எரேமியாவைத் துரவிலே போட்டதை ராஜாவின் அரமனையில் இருந்த எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக் என்னும் ஒரு பிரதானி கேள்விப்பட்டான், ராஜாவோ பென்யமீன் வாசலிலே உட்கார்ந்திருந்தான். 8. அப்பொழுது எபெத்மெலேக் ராஜாவின் அரமனையிலிருந்து புறப்பட்டுப்போய், ராஜாவை நோக்கி: 9. ராஜாவாகிய என் ஆண்டவனே, இந்தப் புருஷர் எரேமியா தீர்க்கதரிசியைத் துரவிலே போட்டுச் செய்தது எல்லாம் தகாத செய்கையாயிருக்கிறது, அவன் இருக்கிற இடத்திலே பட்டினியினால் சாவானே, இனி நகரத்திலே அப்பமில்லை என்றான். 10. அப்பொழுது ராஜா எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியனை நோக்கி: நீ இவ்விடத்திலிருந்து முப்பது மனுஷரை உன்னுடனே கூட்டிக்கொண்டுபோய், எரேமியா தீர்க்கதரிசி சாகாததற்குமுன்னே அவனைத் துரவிலிருந்து தூக்கிவிடு என்று கட்டளையிட்டான்.
இந்தப் புத்தகம் எருசலேமின் வீழ்ச்சியை மையமாகக்கொண்ட 5 புலம்பல்களாக இருக்கின்றன. எபிரேய வேதாகமத்தில் பாவத்தின் பேதமையை விவரிக்கிற பிரசங்கியின் புத்தகத்திற்கு அடுத்ததாக, மக்களின் பாவத்தின்மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பின் சோகத்தை இது விவரிக்கிறது. 5 புலம்பல்களும் 5 சோகப்பாடல்களாக இருக்கின்றன. எபிரேயத்தில் 22 உயிரெழுத்துக்கள் இருக்கின்றன. அதைப் பிரதிபலிப்பதற்கு ஏதுவாக 3ஆவது அதிகாரத்தைக் தவிர மற்ற 1, 2, 4, 5 அதிகாரங்களில் எபிரேய எழுத்தின் வரிசையில், ஒவ்வொரு அதிகாரத்திலும் 22 வசனங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. தேவனுக்கு விரோதமான பாவத்திற்காக, நியாயமானவிதத்தில் மக்கள் தண்டிக்கப்பட்டதை இந்தப் புத்தகம் வெளிப்படுத்துகிறது. அநீதியும் அநியாயமும் அழிக்கப்படுதல் என்ற தண்டனைக்குக் காரணமாயிற்று. நீதியில்லாதது அநீதியாகும். தேவனுடைய வழிகள் நீதியானவைகளாக இருக்கின்றன. அவருடைய வழியல்லாத எதுவுமே அநீதிதான். நியாயமில்லாதது அநியாயமாகும். தேவனுடைய வார்த்தைகள் நியாயத்தை வெளிப்படுத்துகின்றன. தேவனுடைய வார்த்தைக்கு மாறானதாக இருக்கிற அனைத்துமே அநியாயமானதுதான்.
புல-1: 5 அவள் சத்துருக்கள் தலைமையானார்கள், அவள் பகைஞா; சுகித்திருக்கிறார்கள், அவளுடைய திரளான பாதகங்களினிமித்தம் கர்த்தர் அவளைச் சஞ்சலப்படுத்தினார், அவள் பிள்ளைகள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப் போனார்கள்.
புல-1: 8 எருசலேம் மிகுதியாய்ப் பாவஞ்செய்தாள், ஆதலால் தூரஸ்திரியைப் போலானாள், அவளைக் கனம்பண்ணினவார்கள் எல்லாரும் அவளை அசட்டை பண்ணுகிறார்கள், அவளுடைய மானத்தைக் கண்டார்கள், அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னிட்டுத் திரும்பினாள்.
புல-2: 14 உன் தீர்க்கதரிசிகசிகள் அபத்தமும் வியர்த்தமுமான தரிசனங்களை உனக்காகத் தரிசித்தார்கள், அவர்கள் உன் சிறையிருப்பை விலக்கும்படி உன் அக்கிரமத்தை எடுத்துக்காட்டாமல், அபத்தமானவைகளையும் கேடானவைகளையும் உனக்காகத் தரிசித்தார்கள்.
புல-3: 39 உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?
புல-4: 6 கைச்செய்கை இல்லாமல் ஒரு நிமிஷத்திலே கவிழ்க்கப்பட்ட சோதோமின் பாவத்துக்கு வந்த தண்டனையைப் பார்க்கிலும் என் ஜனமாகிய குமாரத்தியின் அக்கிரமத்துக்கு வந்த தண்டனை பெரிதாயிருக்கிறது.
புல-5: 16 எங்கள் தலையிலிருந்து கிரிடம் விழுந்தது, ஐயோ! நாங்கள் பாவஞ்செய்தோமே.
எருசலேமுக்கு வந்த அழிவு தேவனால்தான் வந்தது என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
Ψபுல-1: 5 கர்த்தர் அவளைச் சஞ்சலப்படுத்தினார்.
Ψபுல-1: 12 கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப் படுத்தினதினால் எனக்கு உண்டான என் துக்கம்.
Ψபுல-1: 17 கர்த்தர் யாக்கோபின் சுற்றுப்புறத்தாரை அவனுக்குச் சத்துருக்களாகக் கட்டளையிட்டார்.
Ψபுல-2: 17 கர்த்தர் தாம் நினைத்ததைச் செய்தார், பூர்வநாட்கள் முதற்கொண்டு தாம் கட்டளையிட்ட தமது வார்த்தையை நிறைவேற்றினார், அவர் தப்பவிடாமல் நிர்மூலமாக்கி, உன்மேல் பகைஞன் சந்தோஷிக்கும்படி செய்தார், உன் சத்துருக்களின் கொம்பை உயர்த்தினார்.
எருசலேம் தேவனுடைய தயவைப்பெற்ற நகரமாகும். ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடச்சென்று, ஆபிரகாமோடு தேவன் இடைப்பட்டு, பலிக்குரிய ஆட்டுக்குட்டியைக் கொடுத்த இடம் இதுதான். இது தாவீதின் ராஜநகரமாகும். இந்த இடத்தில் 300 ஆண்டுகளுக்கு மேலாக தேவாலயம் மகிமைபொருந்தியதாக ஸ்தபாபிக்கப் பட்டிருந்தது. இது தேவன் வாசம்பண்ணின இடமாக இருந்தது. அப்படிப்பட்ட எருசலேம், அழிக்கப்படுதலுக்குள் கடந்தபோகும் என்பது யூதர்களுக்கோ, சுற்றியிருந்த மற்றவர்களுக்கோ நினைத்தே பார்க்கமுடியாத, நம்பவேமுடியாத ஒன்றாக இருந்தது. தமது ஆலயம் அழிக்கப்பட தேவன் ஒருபோதும் விடவேமாட்டார் என்றுதான் யூதர்கள் எண்ணினார்கள்.
எரே-7: 13-14 நீங்கள் இந்தக் கிரியைகளையெல்லாம் செய்தீர்கள், நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிவந்திருந்தும், நீங்கள் கேளாமலும், நான் உங்களைக் கூப்பிட்டும், நீங்கள் உத்தரவுகொடாமலும் போனபடியினால், 14. என் நாமம் தரிக்கப்பட்டதும், நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறதுமான இந்த ஆலயத்துக்கும், உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த ஸ்தலத்துக்கும், நான் சீலோவுக்குச் செய்ததுபோலச் செய்வேன்.
இப்படி நடக்கும் என்று எரேமியா தீர்க்கதரிசனமாக அறிவிதத்போதும் யூதர்கள் அதை நம்ப மறுத்தார்கள். ஆனால் அவர் அறிவித்தபடியே நடந்தது.
புல-2: 6-7 தோட்டத்தின் வேலியைப்போல இருந்த தம்முடைய வேலியைப் பலவந்தமாய்ப் பிடுங்கிப்போட்டார், சபைகூடுகிற தம்முடைய ஸ்தலங்களை அழித்தார், கர்த்தர் சீயோனிலே பண்டிகையையும் ஓய்வு நாளையும் மறக்கப்பண்ணி, தமது உக்கிரமான கோபத்தில் ராஜாவையும் ஆசாரியனையும் புறக்கணித்துவிட்டார். 7. ஆண்டவர் தமது பலிபீடத்தை ஒழித்துவிட்டார், தமது பரிசுத்த ஸ்தலத்தை வெறுத்துவிட்டார். அதினுடைய அரமனைகளின் மதில்களைச் சத்துருவின் கையில் ஒப்புக்கொடுத்தார். பண்டிகைநாளில் ஆரவாரம் பண்ணுகிறதுபோல் கர்த்தரின் ஆலயத்தில் ஆரவாரம் பண்ணினார்கள்.

புதிய ஏற்பாட்டு சபை:

மத்-16: 18 மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்க்கொள்வதில்லை.
வெளி-3: 14-16 லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: 15. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ குளிருமல்ல அனலுமல்ல, நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். 16. இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப் பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்தி பண்ணிப்போடுவேன்.
ஐந்து புலம்பல்களிலும் ஒரு வரிசைக்கிரமம் இருப்பதை நாம் பார்க்கிறோம்.
அதிகாரம்-1: அழிவிற்கான ஒழுக்கநெறியின் காரணத்தை முக்கியப்படுத்துகிற புலம்பலாகும்- பாவம்.
அதிகாரம்-2: அழிவிற்கான உடனடிக் காரணத்தை முக்கியப்படுத்துகிற புலம்பலாகும்- தேவன்.
அதிகாரம்-4: அழிவின் விளைவை முக்கியப்படுத்துகிற புலம்பலாகும்- சோகம்.
அதிகாரம்-5: வேதனையைப் பார்த்து தேவன் மனதுருகுவார் என்ற நம்பிக்கையை முக்கியப்படுத்துகிற புலம்பலாகும்.
அதிகாரம்-3: இவைகளுக்கு இடையில் உள்ள 3ஆவது அதிகாரம் இவைகளோடு தனிப்பட்ட நபராக, தன்னுடைய சொந்தக் காரியத்தை தொடர்புபடுத்துகிற புலம்பலாக இருக்கிறது. தனக்கும் தன்தேசத்திற்கும் தேவன் இரங்கவேண்டும் என்று அவர் தன்னுடைய புலம்பலில் வெளிப்படுத்துகிறார். நம்முடைய தேசத்தைக்குறித்த, நாம் வாழ்கிற நமது பகுதியைக்குறித்த பாரம் நமக்குள் எவ்வளவு இருக்கிறது?
புல-3: 1,3 ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்ட புருஷன் நான். 3. அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார்.
புல-3: 31-33 ஆண்டவர் என்றென்றைக்கும் கை விடமாட்டார். 32. அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார். 33. அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப் படுத்துகிறதில்லை.
பாவத்திற்கான சீர்படுத்துதலில் தேவனுடைய நியாயத்தையும், பரிசுத்தத்தையும், நம்மை நடத்துகிற காரியத்தில் அவருடைய மனதுருக்கத்தையும், தேவனுடைய உண்மையையும், அவருக்காகக் காத்திருப்போருக்கு அவருடைய நற்குணத்தையும் இந்தப்புத்தகம் காட்டுகிறது.
புல-3: 22 நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
புல-3: 32 அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.
புல-3: 25 தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.

புலம்பலின் தொகுப்பு:

I. அதிகாரம்-1 பாவத்தினால் வந்த வேதனையான முடிவைக்குறித்த புலம்பல்.
II. அதிகாரம்-2 தேவனுடைய பாரமான கரத்தைக்குறித்த புலம்பல்.
III. அதிகாரம்-3 தனிப்பட்ட தன் வேதனையைக்குறித்த புலம்பல்.
1. தேவனுடைய தண்டிக்கும் கரம் (3: 1-21)
2. தேவனுக்குள்ளான நம்பிக்கை (3: 22-42)
3. செவிகொடுக்கும் தேவன் (3: 43-66)
IV. அதிகாரம்-4: தேவனுடைய தயவு இழக்கப் பட்டதைக்குறித்த புலம்பல்.
V. அதிகாரம்-5: தேவன் திரும்பவும் இரங்கவேண்டும் என்ற புலம்பல்.
பாவத்தில் தொடர்ந்து நிலைத்திருத்தல் வேதனையான முடிவைக்கொண்டுவரும் என்பதையும், ஆனால் அவரைத் தேடுபவர்களுக்கு தேவனுடைய மனதுருக்கம் நம்பிக்கையைக் கொண்டுவருகிறது என்பதையும் புலம்பின் புத்தகம் கற்பிக்கிறது.
புல-3: 22-26 நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. 23. அவைகள் காலைதோறும் புதியவைகள், உமது உண்மை பெரியதாயிருக்கிறது. 24. கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும், ஆகையால் அவாிடத்தில் நம்பிக்கைக ொண்டிருப்பேன். 25. தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். 26. கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.

பொதுவான கற்றுக்கொள்ளுதல்:

1. பாவம் வேதனைக்கும் துயரத்திற்கும் வழிநடத்துகிறது
2. துயரம் மனந்திரும்புதலுக்கும் ஜெபத்திற்கும் வழிநடத்துகிறது
3. ஜெபம் நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் வழிநடத்துகிறது
4. விசுவாசம் புதுப்பிக்கப்படுதலுக்கு வழிநடத்துகிறது.

Comments