யாக்கோபு எழுதிய கடிதம்
பொதுக்குறிப்பு:
இனிமேல் நாம் பார்க்கவிருக்கிற 8 புத்தகங்களில், யாக்கோபிலிருந்து யூதாவரைக்கும் உள்ள 7 கடிதங்கள் பொதுவான கடிதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது இவைகள் சபையின் எல்லாவகைப்பட்ட மக்களுக்கும், பொதுவான விதத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. யோவானுக்கு எழுதப்பட்ட 3ஆவது கடிதம் மாத்திரம் காயு என்ற ஒரு தனிநபருக்கு எழுதப்பட்டிருக்கிறது. இதுவரைக்கும் நாம் பார்த்த கடிதங்கள் யாருக்கு எழுதப்பட்டது என்பதைத் தலைப்பாகக் கொண்டிருக்கின்றன. இனிமேல் நாம் பார்க்கவிருக்கும் கடிதங்கள் யாருக்கு எழுதப்பட்டது என்பதைவிட, யாரால் எழுதப்பட்டது என்பதைத் தலைப்பாகக் கொண்டிருப்பதைக் கவனிப்பீர்கள். இந்தப் கடிதங்களில் 3 அமைப்புக்களை நாம் பார்க்கலாம்.
யாக்கோபு எழுதிய கடிதம் குறித்த பார்வை:
I. முகவுரை (ஆசிரியர் மற்றும் அவருடைய வாழ்த்து)
II. கடிதத்தின் செய்தி (எழுதியதன் நோக்கம்)
III. முடிவுரை (வாழ்த்து, நன்றி)
∗பவுல் தன் கடிதங்களை குறிப்பிட்ட இடத்திலிருந்த சபையாருக்கும், சபையை நடத்தும் ஊழியர்களுக்கும் எழுதியருக்கிறார். ஆனால் இந்தப் பொதுக்கடிதங்கள் அவ்வாறு இல்லாமல், பல்வேறுபட்ட இடங்களில் இருப்பவர்களை உள்ளடக்கி எழுதப்பட்டிருக்கின்றன.
∗யாக்கோபு பல்வேறு தேசங்களில் சிதறியிருந்த யூதவிசுவாசிகளுக்கு எழுதுகிறார் (1 கடிதம்)
∗பேதுரு ஆசியா மைனர் எங்குமுள்ள விசுவாசிகளுக்கு எழுதுகிறார் (2 கடிதங்கள்)
∗யோவான் தனிநபர்களுக்கும், ஆசியாவிலுன்ள சபைகளுக்கும் எழுதுகிறார் (3 கடிதங்கள்)
∗யூதா கள்ளப்போதகர்களின் பிரச்சினையிருந்த, பெயர் குறிப்பிடப்படாத மாகாணத்திற்கு எழுதுகிறார் (1 கடிதம்).
முகவுரை (ஆசிரியர் மற்றும் அவருடைய வாழ்த்து):
†யாக்-1: 1 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது:
இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர், யாக்கோபு என்பது யாரைக்குறிக்கிறது என்பதில் பலகருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. புதியஏற்பாட்டிலே 4 யாக்கோபுகள் வருகிறார்கள். அவர்களில் இதை எழுதியது எந்த யாக்கோபு என்பது குறிப்பிட்டுக் காட்டப்படவில்லை.
1. யோவானின் சகோதரன் யாக்கோபு (செபதேயுவின் குமாரன்: மாற்-3: 17 இவர் அப்போஸ்தலர்,)
2. அல்பேயுவின் குமாரன் யாக்கோபு (மாற்-3: 18, லூக்-6: 15)
3. யூதாவின் சகோதரன் யாக்கோபு (லூக்-6: 16)
4. இயேசுவின் சகோதரன் யாக்கோபு (மத்-13: 55, மாற்-6: 3 கலா-1: 19 கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபு)
இந்தப் புத்தகத்தில் யாக்கோபு தன்னை அப்போஸ்தலன் என்று குறிப்பிடவில்லை. எனவே இயேசுவோடு நெருக்கமாக இருந்த 3 நபர்களாகிய பேதுரு, யோவான், யாக்கோபு என்ற அப்போஸ்தலர்களில் ஒருவராகிய யாக்கோபால் இது எழுதப்படவில்லை என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். அப்படியானால், இயேசுவின் சகோதரனாகிய யாக்கோபால் இது எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று கருதுகிறோம். இயேசுவுக்கு மேலும் பிறசகோதரர்கள் இருந்தார்கள் என்று வேதத்தில் வாசிக்கிறோம். இயேசுவைத் தவிர, மற்றவர்கள் யோசேப்புக்கும் மரியாளுக்கும் பிறந்தவர்களாவார்கள். இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு முன்புவரை அவருடைய சகோதரர்கள் இயேசுவை முழுமையாக விசுவாசிக்கவில்லை. ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதல் நிச்சயமான ஆதாரத்தை அவர்களுக்கு கொடுத்து, அவர்களை விசுவாசிக்கவைத்தது. இந்த யாக்கோபு பின்நாட்களில், ஆதிசபையில் ஒரு முக்கியமான தலவராகவும் மாறினார். இவர் கி.பி.62ல் இயேசுவுக்காக இரத்தசாட்சியாக மரித்தார். இந்தப் புத்தகம் கி.பி.45ல் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.
†அப்-12: 17 அவர்கள் பேசாமலிருக்கும்படி அவன் கையமர்த்தி, கர்த்தர் தன்னைக் காவலிலிருந்து விடுதலையாக்கின விதத்தை அவர்களுக்கு விவரித்து, இந்தச் செய்தியை யாக்கோபுக்கும் சகோதரருக்கும் அறிவியுங்கள் என்று சொல்லி, புறப்பட்டு, வேறொரு இடத்திற்குப் போனான்.
†அப்-15: 13 அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி: சகோதரரே, எனக்குச் செவிகொடுங்கள்.
இந்த யாக்கோபு சபையின் தூண்களில் ஒருவராகவும் அழைக்கப்படுகிறார். இவர் எருசலேமிலிருந்த சபைக்கு ஆயராக (மேயப்பர்), சிறந்த முழங்கால் ஜெபவீரனாக இருந்தார் என்றும் சரித்திரம் கூறுகிறது.
†கலா-2: 9 தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும்,
எழுதப்பட்ட மக்கள்:
•யாக்-1: 1 - சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் எழுதுகிறதாவது. 2. என் சகோதரரே! (யூத விசுவாசிகள்).
இது கி.பி.40களில், அதாவது இயேசுவின் மரணத்திற்குப் பிறகு சுமார் 15 ஆண்டுகளில் எழுதப்பட்டிருக்கலாம். தன்னுடைய கடிதத்தை வாசிக்கும் நபர்களை (விசுவாசிகளை) என் சகோதரரே என்று யாக்கோபு அழைக்கிறார். சகோதரரே என்ற வார்த்தையை 19 முறை இந்தப் புத்தகத்தில் யாக்கோபு பயன்படுத்தியிருக்கிறார்.
யாக்கோபு புத்தகத்தின் தலைப்பு:
†பொறுமை
†ஞானம்
†ஜெபம்
†ஐசுவரியமும் தரித்திரமும்
†தேவனோடு உறவு
†நம்முடைய நாவு
†நம்முடைய செய்கை
யாக்கோபின் புத்தகம்:
•இயேசுவின் மலைப்பிரசங்கத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
•விசுவாசத்திற்கும் கிரியைக்கும் உள்ள தொடர்பை முக்கியப்படுத்திக் காட்டுகிறது.
•சோதனைகள் வருவது பாவமல்ல, ஆனால் சோதனைக்கு உட்படுவது பாவம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
•சோதனைகள்மூலம் நம்முடைய விசுவாசம் புடமிடப்படுகிறது.
•கிரியைகள் மூலம் நம்முடைய விசுவாசம் நிரூபிக்கப்படுகிறது.
சோதனைகளுக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கவேண்டும் என்பதை இந்தப் புத்தகம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. விசுவாசத்தின் செய்கையைக்குறித்த பிரசங்கமாக யாக்கோபின் புத்தகம் நமக்கு இருக்கிறது. நமது வாழ்விற்கான ஊக்கப்படுத்துதலை இப்புதகம் கொடுக்கிறது. யாக்கோபின் கடிதம் ‘புதியஏற்பாட்டின் நீதிமொழிகள்’ என்றும் அழைக்கப்படுகிறது.
∗யாக்கோபு 3: 2ல் நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம் என்று சொல்கிறார்.
∗யாக்கோபு-1: 14ல் அவனவன் தன்தன் இச்சையினாலே இழுக்கப்பட்டு சோதிக்கப்படுகிறான் என்று குறிப்பிடுகிறார்.
∗யாக்கோபு 1: 21ல் நம் உள்ளத்தில் நாட்டப்பட்டதாக இருக்கிற தேவவசனத்தை நாம் சாந்தமாய் ஏற்றுக்கொண்டால், அது நம்முடைய ஆத்துமாவை இரட்சிக்க வல்லதாக இருக்கிறது என்று பதிலளிக்கிறார்.
யாக்கோபின் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பதில்கள்:
1. சோதனைகளை எவ்வாறு கையாளுவது? (1: 2-4)
2. ஞானத்திற்காக எவ்வாறு ஜெபிப்பது? (1: 5-8)
3. தரித்திரத்தையும், ஐசுவரியத்தையும் எவ்வாறு கையாளுவது? (1: 9-11)
4. சோதனைகளுக்கான பிறப்பிடம் எங்கே இருக்கிறது? (1: 13-16)
5. நம்முடைய நாவைவைத்து நாம் என்ன செய்யவேண்டும்? (1: 19, 3: 1-12, 4: 11-12)
6. தேவவசனத்தை நாம் என்ன செய்யவேண்டும்? (1: 21-25)
7. உண்மையான தேவபக்தியின் சுபாவம் என்ன? (1: 26-27)
8. மற்றவர்களை எவ்வாறு நடத்தவேண்டும்? (2: 1-13)
9. விசுவாசத்தில் கிரியையின் இடம் எது? (2: 14-26)
10. உண்மையான ஞானத்தின் சோதனை என்ன? (3: 13-18)
11. ஏன் நம்முடைய பல ஜெபங்கள் பதிலளிக்கப்படுவதில்லை? (4: 1-5)
12. தேவனை நம்மிடத்தில் சமீபிக்கச்செய்வது எப்படி? (4: 7-10)
13. நமது வாழ்வில் திட்டமிடுதல் எப்படி இருக்கவேண்டும்? (4: 13-17)
14. ஐசுவரியத்தைக்குறித்து என்ன? (5: 1-6)
15. பாடுகளைக்குறித்து என்ன? (5: 7-11)
16. சத்தியம்பண்ணுதலைக்குறித்து என்ன? (5: 12)
17. துன்பப்பட்டால் என்ன செய்யவேண்டும்? (5: 13)
18. மகிழ்ச்சியாயிருந்தால் என்ன செய்யவேண்டும்? (5: 13)
19. வியாதிப்பட்டால் என்ன செய்யவேண்டும்? (5: 14-18)
20. சத்தியத்தை விட்டுவிலகி மோசம்போவோரைக்குறித்து என்ன? (5: 19-20)
யாக்கோபு புத்தகத்தின் தொகுப்பு:
I. அதிகாரம் 1: 1 முகவுரை
II. அதிகாரம் 1: 2-11 சோதனையை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்
1. சோதனை மிகுந்த பொறுமையை உண்டாக்குகிறது (1: 2-4)
•பொறுமைக்கும் விசுவாசத்திற்கும் எப்போதுமே ஒரு தொடர்பு இருக்கிறது. நாம் கேட்டவுடனே தேவன் நமக்குப் பதில்கொடுத்துவிட்டால், நாம் விசுவாசத்தில் வளரமாட்டோம். பதில் வரத்தாமதிக்கிறபோது பொறுமையோடு காத்திருக்கப் பழகுதல், நம்முடைய விசுவாசத்தில் வளருவதற்குக் கற்றுக்கொடுக்கிறது.
2. சோதனை ஞானத்துக்கு கதவைத் திறக்கிறது (1: 5-8)
3. சோதனை மனிதனின் வாழ்வில் மாற்றத்தை உண்டாக்குகிறது (1: 9-11)
•தரித்திரனை உயர்த்துகிறது, ஐசுவரியவானைத் தாழ்த்துகிறது.
4. சோதனை நீதியின் கிரீடத்தைப் பெற்றுக்கொடுக்கிறது (1: 12)
•யாக்-1: 12 சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான், அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
5. ஆனால், சோதனைகள் தேவனிடமிருந்து வருபவைகள் அல்ல (1: 13-16)
•யாக்-1: 13-14 சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக, தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. 14. அவனவன் தன்தன் சுயஇச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
6. தேவன் நன்மையான கொடைகளைக் கொடுக்கிறார் (1: 17-18)
•யாக்-1: 17 நன்மையான எந்த ஈவும், பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது, அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.
III. அதிகாரம் 1: 19-27 நீதியான வாழ்வைக்குறித்து யோசியுங்கள்
1. மனிதனுடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாது (1: 19-20)
2. திருவசனத்தின்படி செய்வோமாக (1: 21-25)
3. உண்மையான தேவபக்தி என்பது வாழ்வதும், செய்வதும் (1: 26-27)
பின்வரும் அதிகாரங்களில் 1ஆவது அதிகாரத்தின் சத்தியங்கள் விவரிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்
IV. அதிகாரம்-2: 1-13 ஏற்றத்தாழ்வு காட்டவேண்டாம் (1: 9-11ன் விரிவாக்கம்)
•யாக்-2: 2-4 பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒரு மனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது, 3. மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும், தரித்திரனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால், 4. உங்களுக்குள்ளே பேதகம்பண்ணி, தகாத சிந்தனைகளோடே நிதானிக்கிறவர்களாயிருப்பீர்களல்லவா?
V. அதிகாரம்-2: 14-26 விசுவாசம் கிரியைகளால் நிரூபித்துக் காட்டப்படுகிறது (1: 22-27ன் விரிவாக்கம்)
•யாக்-2: 14,17,21,26 என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? 17. அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும். 21. நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்? 26. ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.
VI. அதிகாரம்-3: 1-12 நாவைக்குறித்து ஜாக்கிரதையாக இருப்போமாக (1: 19-21ன் விரிவாக்கம்)
•யாக்-3: 2,8-10 நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம், ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக் கூடியவனுமாயிருக்கிறான். 8. நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது, அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. 9. அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம், தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். 10. துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.
VII. அதிகாரம்-3: 13-18 பரலோக ஞானத்தை வேறுபடுத்துவோமாக (1: 5-8ன் விரிவாக்கம்)
•யாக்-3: 14-15,17 உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமை பாராட்டாதிருங்கள், சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள். 15. இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லௌகிகசம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது. 17. பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.
VIII. அதிகாரம்-4: 1-10 தேவன் எரிச்சலுள்ள தேவன் (1: 12-18ன் விரிவாக்கம்)
•யாக்-4: 6-10 அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. 7. ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள், பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். 8. தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள், இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். 9. நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள், உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது. 10. கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.
IX. அதிகாரம்-4: 11-17 நம்முடைய பேச்சு தெய்வீகப்பார்வையோடு இணைந்திருப்பதாக (1: 19-21ன் விரிவாக்கம்)
•யாக்-4: 13-15 மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒருவருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம் பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். 14. நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே... 15. ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.
X. அதிகாரம்-5: 1-6 பணக்காரர்களுக்குரிய எச்சரிப்பு (1: 9-11ன் விரிவாக்கம்)
XI. அதிகாரம்-5: 7-12 ஒடுக்கப்படுவோருக்குரிய உற்சாகப்படுத்துதல் (1: 2-4ன் விரிவாக்கம்)
•யாக்-5: 7 இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான்.
XII. அதிகாரம்-5: 13-18 ஊக்கமான ஜெபம் (1: 6-8ன் விரிவாக்கம்)
1. 5: 13 ஜெபித்தல்
2. 5: 14 எண்ணைய் பூசி ஜெபித்தல்
3. 5: 15 விசுவாசத்துடன் ஜெபித்தல்
4. 5: 16 ஒருவருக்காகஒருவர் ஜெபித்தல்
5. 5: 16 ஊக்கமாக ஜெபித்தல்
6. 5: 17 கருத்தாக ஜெபித்தல்
7. 5: 18 மறுபடியும் ஜெபித்தல்
XIII. அதிகாரம்-5: 19-20 மற்றவர்களைக் கவனித்தல் (1: 19-21ன் விரிவாக்கம்)
•யாக்-5: 20 தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.
Comments
Post a Comment