தெசலோனிக்கேயருக்கு எழுதப்பட்ட கடிதங்கள்


தெசலோனிக்கேயருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் குறித்த பார்வை:

I. யார் எழுதியது? எழுதிய ஆசிரியர்
II. யாருக்கு எழுதப்பட்டது?
III. எதற்காக எழுதப்பட்டது? எழுதப்பட்டதன் நோக்கம்

எழுதிய ஆசிரியர்: பவுல்

1தெச-1: 1 பவுலும், சில்வானும், தீமோத்தேயும் எழுதுகிறதாவது.
2தெச-1: 1 பவுலும், சில்வானும், தீமோத்தேயும் எழுதுகிறதாவது.
இந்தக் கடிதங்களை எழுதுவதில் பவுலோடு சில்வானும், தீமோத்தேயுவும் இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள்.

எழுதப்பட்ட மக்கள்:

1தெச-1: 1 பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயா சபைக்கு.
2தெச-1: 1 நம்முடைய பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயா சபைக்கு.
கி.மு.315ல் மகாஅலெக்ஸாண்டர், தெசலோனிக்கேயா என்ற தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரியின் நினைவாக, அவளுடைய பெயரை இந்தப் பட்டணத்திற்கு வைத்தார். இப்பொழுது சலோனிக்கா அல்லது தெசலோனிக்கி என்று அழைக்கப்படுகிற பட்டணமாக இருக்கிறது. கி.பி.50ல் தன்னுடைய இரண்டாவது மிஷனரிப் பயத்தின்போது, பவுல் தெசலோனிக்கேயாவுக்குச் சென்றார். இந்தப் பட்டணம் அருவிகள் நிறைந்த பட்டணமாக இருந்ததால், ஒரு சுற்றுலாமையமாக இருந்தது. தெசலோனிக்கேயா, மக்கதோனியா நாட்டின் தலைநகராகும். பிலிப்பி பட்டணத்தின் ஊழியத்திற்குப் பிறகு பவுல் தெசலோனிக்கேயாவுக்கு வந்தார். பிலிப்பி பட்டணத்தில்தான் பவுலும் சீலாவும் சிறையிலிருந்தபோது பூமியதிர்ச்சி உண்டாகி கட்டுக்கள் அறுந்து, கதவுகள் திறவுண்டு, சிறைச்சாலைத் தலைவனும், குடும்பமும் இரட்சிக்கப்பட்ட சம்வம் நடைபெற்றிருந்தது. பவுல் தெசலோனிக்கேயா பட்டணத்தில் 3 வாரங்கள் தங்கயிருந்தார். 3 வாரத்திலே பவுல் இங்கே ஒரு சபையை உருவாக்கி, 3 வாரத்து மறுபடிபிறந்த நபர்களை (இளம் விசுவாசிகள்) மூப்பர்களாக ஏற்படுத்திவிட்டுச் சென்றார். மூப்பர்களை நியமித்தல் என்பது வருடத்தின் அடிப்படையிலோ அல்லது வயதின் அடிப்படையிலோ அல்ல, மாறாக ஆவிக்குரிய வளர்ச்சியின் அடிப்படையில் இருக்கவேண்டும். தீமோத்தேயுவும் இளைஞனாக இருந்தபோது மூப்பராக நியமிக்கப்பட்டார். உன் இளைமையக் குறித்து ஒருவரும் உன்னை அசட்டைபண்ணாதவாறு நடந்துகொள் என்று பவுல் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள்.
அப்-17: 1-3 அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்கு வந்தார்கள், அங்கே யூதருக்கு ஒரு ஜெபஆலயம் இருந்தது. 2. பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களிள் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து, 3. கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான்.
பவுல் தெசலோக்கேயா பட்டணத்தில் இருந்த நாட்களில் பிலிப்பு பட்டணத்து சபையார் காணிக்கை அனுப்பி அவருடைய ஊழியத்தைத் தாங்கினார்கள்.
பிலி-4: 16 நான் தெசலோனிக்கேயிலிருந்தபோதும், என் குறைச்சலை நீக்கும்படி நீங்கள் இரண்டொருதரம் அனுப்பினீர்கள்.

எழுதப்பட்டதன் நோக்கம்:

தெசலோனிக்கேயாவிலிருந்த சபை நன்றாக இயங்கிக்கொண்டிருந்தது. அந்த சபையைக்குறித்து பவுல் சந்தோஷப்பட்டு, பாராட்டுகிறார்.
1 தெச-1: 2 தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூருகிறோம்.
விசுவாத்தின் கிரியை - பிதாவால் அனுப்பப்பட்டவரை (இயேசு) விசுவாசித்தல் என்ற கிரியை. இரட்சிக்கப்படுவதற்கு இயேசுகிறிஸ்துவை விசுவாசித்த செயல்.
யோவா-6: 29 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.
அன்பின் பிரயாசம் - இந்த சபை அன்பின்நிமித்தம் வேலைசெய்வதில், ஊழியம்செய்வதில் பெயர்பெற்றதாக இருந்தது. இரட்சிக்கப்பட்டபின் அவர்களின் வாழ்வு, தேவனிடத்திலும் ஒருவர்ஒருவரிடத்திலும் அன்புகூருதலில் தொடர்ந்தது.
நம்பிக்கையின் பொறுமை - இயேசுவின் வருகைக்காக அவர்கள் பொறுமையோடு எதிர்பார்த்திருந்தார்கள்.
இந்த சபையிலே விசுவாசம், அன்பு, நம்பிக்கை என்ற மூன்றும் இருந்ததைப் பார்க்கிறோம்.
1கொரி-13: 13 இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது, இவைகளில் அன்பே பெரியது.
இவைகள் மத்தியில் உபத்திரவங்களைக்குறித்த கலக்கம் அவர்களுக்குள் எழும்பியது. போராட்டங்கள் அதிகரித்தன. எனவே:
முதலாம் கடிதத்தில் இப்படிப்பட்ட உபத்திரவங்கள் எதிர்பார்க்கப்படக் கூடியவைகள்தானா என்பதைக்குறித்தும்,
2ஆவது கடிதத்தில் கடைசிக்காலத்தைக் குறித்த குழப்பங்களுக்குப் பதிலளிப்பதைக்குறித்தும் பவுல் எழுதுகிறார்.
கடுமையான உபத்திரவங்கள் மத்தியில் பவுல் அவர்களைத் தேற்றிட விரும்பினார்.
உபத்திரப்படுத்துபவர்களை கர்த்தர் நியாயந்தீர்க்கவிருக்கிறார், எனவே நீங்கள் சோர்ந்துபோகவேண்டாம் என்று அவர்களை உற்சாகப்படுத்தினார்.
அவர்களுடைய பாடுகளைக்குறித்து தேவன் கண்டுகொள்ளாதவராக இல்லை என்ற நிச்சயத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.
கர்த்தருடைய நாள் ஏற்கெனவே வந்துவிட்டதோ என்று நினைத்து. குழப்பியவர்களுக்கு, அது இன்னும் வரவில்லை. இரண்டு காரியங்கள், முந்தி நடந்தால்தான் அவருடைய வருகையும், சபையின் எடுத்துக்கொள்ளப்படுதலும் நடைபெறும் என்று தெளிவுபடுத்தினார்.
1. விசுவாசத் துரோகம் நடைபெறுதல்
2. அந்திக்கிறிஸ்து வெளிப்படுதல்
கிறிஸ்துவை விசுவாசியாதவர்களுக்குத்தான் தேவனுடைய கோபாக்கினை, ஆகவே நீங்கள் அதற்குப் பயப்படவேண்டாம் என்பதை உறுதிப்படுத்தினார்.

தெசலோனிக்கேயருக்கு எழுதப்பட்ட முதலாம் கடிதத்தின் தொகுப்பு:

இந்தப் புத்தகம் 2 முக்கிய பாகங்களாகப் பிரிக்கப்படலாம்.
அ. அதிகாரங்கள் 1 முதல் 3 தெசலோனிக்கேய சபையாரோடு பவுலின் உறவு
ஆ. அதிகாரங்கள் 4 முதல் 5 தெசலோனிக்கேய சபையாருக்கு பவுலின் ஆலோசனைகள்
I. அதிகாரம் 1: 1 முகவுரை
II. அதிகாரம் 1: 2 முதல் 3: 13 சபையாரோடு பவுலின் உறவு
1. பவுலின் நன்றி (1: 2-10)
அவர்களுடைய ஆவிக்குரிய தன்மைக்காக
அவர்களுடைய முன்மாதிரிக்காக
அவர்களுடைய சாட்சிக்காக
2. சபையாருக்குமுன் பவுலின் நடத்தை (2: 1-12)
3. சபையார் சத்தியத்தை ஏற்றுக்கொண்ட விதம் (2: 13-16)
4. சபையாரைப் பார்க்கவேண்டுமென்ற பவுலின் விருப்பம் (2: 17-20)
5. தீமோத்தேயுவை அனுப்பிவைத்தல் (3: 1-10)
6. பவுலின் பெலப்படுத்துதல் (3: 11-13)
III. அதிகாரங்கள் 4-5 சபையாருக்கு பவுலின் ஆலோசனைகள் (ஆரோக்கியமான உபதேசங்கள்):
1. அதிகமதிகமாகத் தேறுங்கள் (4: 1-2)
2. விபச்சார பாவத்துக்கு விலகுங்கள் (4: 3-9)
3. அன்பிலே பெருகுங்கள் (4: 9-10)
4. அமைதியை நாடுங்கள் (4: 11-12)
5. மரித்தவர்களைக்குறித்த விஷயத்தில், கிறிஸ்துவின் வருகையை நினைத்து தேற்றப்படுங்கள் (4: 13-18)
அ. நம்பிக்கையுடனிருங்கள்
ஆ. கிறிஸ்து வரும்போது, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களைக் கொண்டுவருவார்
இ. உயிரோடிருப்பவர்கள் மறுரூபமாக்கப்பட்டு, எடுத்துக்கொள்ளப்படுவார்கள் (1தெச-4: 16-18, 1கொரி-15: 51-54)
6. கர்த்தருடைய நாளைக்குறித்து கலங்கவேண்டாம் (5: 1-11)
அ. இரட்சிக்கப்படாமல், அந்திக்கிறிஸ்துவுக்குட்பட்டிருப்பவர்கள்மேல் அழிவு சடிதியில் வரும்
ஆ. கிறிஸ்தவர்களாகிய நாம் விழிப்புடன் காத்திருக்கவேண்டும்
இ. தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்கவில்லை
7. உங்களை வழிநடத்துபவர்களை மதித்து, நேசியுங்கள் (5: 12-13)
8. கவனிக்கப்பட வேண்டியவைகள்: (5: 14-22)
மேலும் சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள். 15. ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள், உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள். 16. எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். 17. இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். 18. எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள், அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. 19. ஆவியை அவித்துப்போடாதிருங்கள். 20. தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள். 21. எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். 22. பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.
9. இறுதி வாழ்த்து (5: 23-28)
சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி, ஆத்துமா, சரிரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. 24. உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார். 25. சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். 26. சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள். 27. இந்த நிரூபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டுமென்று கர்த்தர்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன். 28. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

தெசலோனிக்கேயாருக்கு எழுதப்பட்ட 2ஆவது கடிதத்தின் தொகுப்பு:

முதலாவது கடிதம் எழுதியனுப்பட்ட சில மாதங்களில், 2ஆவது கடிதத்தையும் பவுல் எழுதியனுப்பினார். குறிப்பாக, உபத்திரவங்கள் அதிகரித்துக்கொண்டிருந்ததால், கர்த்தருடைய வருகை நடைபெற்றுவிட்டது, மகாஉபத்திரவகாலம் ஆரம்பித்து விட்டது என்று மக்களுக்குள் செய்திகள் பரப்பப்பட்டன. இதைக்குறித்த தெளிவைக்கொடுத்து, சபையாரைத் திடப்படுத்துவதற்காக பவுல் 2ஆவது கடிதத்தை எழுதினார். இந்தப் புத்தகத்தில் மொத்தம் 47 வசனங்களே உள்ளன. இது குறிப்பாக இயேசுகிறிஸ்துவின் 2ஆம் வருகையை முக்கியப்படுத்துகிறது. 16 வசனங்களில் வருகையைக்குறித்து எழுதப்பட்டிருக்கிறது.
இது 2 பகுதிகளாகப் பிரிக்கப்படலாம்:
அ. அதிகாரங்கள் 1-2: கிறிஸ்துவின் வருகையோடு தொடர்புபட்ட உற்சாகப்படுத்துதல்
ஆ. அதிகாரம்-3 நற்கிரியைகள் செய்து வாழ்வதற்கான ஆலோசனைகள்
I. அதிகாரம்-1: 1-2 முகவுரை
II. அதிகாரம் 1-2: கிறிஸ்துவின் வருகையோடு தொடர்புபட்ட உற்சாகப்படுத்துதல்
அ. பவுலின் நன்றி (1: 1-10)
1. அவர்களுடைய விசுவாசத்திற்காகவும், அன்பிற்காகவும் (1: 3)
2. பாடுகளின் மத்தியில் அவர்களுடைய உறுதிக்காக (1: 4-5)
3. தேவன் பிரதிபலனளிப்பார் (1: 5-8)
4. வருகையில் தேவனை அறியாதவர்களுக்கும், கீழ்படியாதர்களுக்கும் நடப்பது (1: 9-10)
ஆ. பவுலின் ஜெபம் (1: 11-12)
2தெச-1: 11-12 ஆகையால், நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும், நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படும்பொருட்டாக 12. நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும், விசுவாசத்தின் கிரியையையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.
இ. பவுலின் ஆலோசனைகள் (2: 1-12)
1. வருகை மற்றும் சபையின் எடுத்துக்கொள்ளப்படுதல்பற்றிய போதனைகளைக் குறித்த எச்சரிக்கை (2: 1-2)
2. முதலாவது விசுவாசத் துரோகமும், பாவமனுஷன் வெளிப்படுதலும் நடைபெற்றாக வேண்டும் (2: 3-5)
3. அவன் வெளிப்படுதலைத் தடைசெய்வது (தேவனுடைய கரம், அல்லது தேவனுடைய நேரம்) நீக்கப்படவேண்டும் (2: 6-8)
4. அக்கிரமக்காரனாகிய அந்திக்கிறிஸ்து வெளிப்படுதல் (2: 9-10)
5. அநியாயத்தில் பிரியப்படுவர்களுக்குள், தேவன் கொடியவஞ்சகத்தை அனுப்புதல் (2: 11-12)
ஈ. பரிசுத்தம் மற்றும் வரவிருக்கும் இரட்சிப்பைக்குறித்த சத்தியம் (2: 13-17)
III. அதிகாரம்-3 நற்கிரியைசெய்து வாழ்வதற்கான ஆலோசனைகள்:
1. ஜெபித்தல் (3: 1-2)
2. தேவனுக்குள் திடநம்பிக்கை (3: 3-5)
3. ஒழுங்கிண்மை மற்றும் சோம்பலுக்கு விரோதமாக (3: 6-15)
2தெச-3: 6, 10 மேலும், சகோதரரே, எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலக வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம். 10. ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.
2தெச-3: 14-15 இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள். 15. ஆனாலும் அவனைச் சத்துருவாக எண்ணாமல் சகோதரனாக எண்ணி, அவனுக்குப் புத்திசொல்லுங்கள்.
IV. அதிகாரம் 3: 16-18 முடிவுரை
சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக. 17. பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், நிருபங்கள்தோறும் இதுவே அடையாளம், இப்படியே எழுதுகிறேன். 18. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

Comments