லூக்கா சுவிசேஷம்


லூக்கா சுவிசேஷம் குறித்த பார்வை:

I. எழுதிய ஆசிரியர்
II. எழுதப்பட்ட மக்கள்
III. இயேசுவைக் குறித்த பார்வை
IV. எழுதப்பட்டுள்ள செய்தி

1. எழுதிய ஆசிரியர்: லூக்கா

லூக்கா ஒரு மருத்தவராக இருந்தார். இவர் யூதனல்ல, அந்தியோகியாவில் பிறந்து, இரட்சிக்கப்பட்ட ஒரு புறஜாதி நபராவார். புதியஏற்பாட்டுப் புத்தகங்களை எழுதியவர்களில் லூக்கா மாத்திரம்தான் புறஜாதியாராவர், மற்ற அனைவரும் யூதர்களாவார்கள். இவருக்கிருந்த கல்வி அறிவும், பிண்ணனியும் இவருடைய எழுத்துநடையில் தனிப்பட்ட விதத்தில் வெளிப்பட்டிருக்கிறது.
கொலோ-4: 14 பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
இதை லூக்காதான் எழுதினார் என்பதற்கேதுவாக, அவருடைய பெயர் எங்கும் கொடுக்கப்படவில்லை. இவர் பவுலோடு அதிகமாக ஊழியம்செய்தார். பவுல் மூலமாகக் கற்றுக் கொடுக்கப்பட்டு லூக்கா உருவாக்கப் பட்டிருந்தார்.
பிலே-1: 24 என் உடன் வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
பவுல் தன்னுடைய நிரூபங்களில் என் சுவிசேஷத்தின்படியே என்று அடிக்கடி குறிப்பிடும்போது லூக்கா சுவிசேஷத்தைக் குறிப்பிட்டே இவ்வாறு சொல்லியிருக்கிறார் என்றும் கருதப்படுகிறது.

உதாரணத்திற்கு:

ரோம-2: 16 என் சுவிசேஷத்தின் படியே, தேவன் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக் குறித்து நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.
ரோம-16: 26 இயேசுகிறிஸ்துவைப் பற்றிய பிரசங்கமாகிய என் சுவிசேஷத்தின் படியே!
2தீமோ-2: 8 தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின் படியே, மரித்தோரிலிருந்து எழுப்பப் பட்டவரென்று நினைத்துக்கொள்.

2. எழுதப்பட்ட மக்கள்: தேயோப்பிலு

இது தேயோப்பிலு என்ற ஒரு தனிநபருக்கு எழுதப்பட்டதாகும். இவர் யார் என்பதைக்குறித்த குறிப்புக்கள் நமக்குக் கொடுக்கப்படவில்லை. இது ஒரு கிரேக்கப் பெயராகும். இந்த சுவிசேஷம் மனந்திரும்புதலுக்குள் வந்துகொண்டிருந்த புறஜாதியாருக்கு எழுதப்பட்டதாக இருக்கிறது.
லூக்-1: 1-4 மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை, 2. ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பர் ஏற்பட்டபடியினால், 3. ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறிய வேண்டுமென்று, 4. அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.
புதிய ஏற்பாட்டின் 2 புத்தகங்களை லூக்கா எழுதினார் என்று நாம் ஏற்கெனவே அறிந்துகொண்டோம். லூக்காவின் ஆரம்பத்திலும், அப்போஸ்தலர் நடபடிகளின் ஆரம்பத்திலும் தேயோப்புலுவுக்கு எழுதப்பட்டது என்ற குறிப்பு கொடுக்கப் பட்டிருப்பதைக் கவனியுங்கள்.
அப்-1: 1-2 தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்தஆவியினாலே கட்டளையிட்ட பின்பு, 2. அவர் எடுத்துக் கொள்ளப்பட்ட நாள் வரைக்கும் செய்யவும், உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங் குறித்து, முதலாம் பிரபந்தத்தை (லூக்கா சுவிசேஷம்) உண்டுபண்ணினேன்.
கிரேக்கர்கள் மத்தியில் மனந் திரும்பியவர்களில் தேயோப்புலு என்பவரும் ஒருவராக இருந்தார். லூக்கா அவரை அதிகமாக நேசித்து, மதித்தார் என்று அவருடைய வார்த்தைகளால் நாம் அறியமுடிகிறது. தேயோப்பிலுவின் குடும்ப மருத்துவராக லூக்கா இருந்திருக்கலாம். கிறிஸ்துவின் சுவிசேஷத்தை லுக்கா முறைப்படுத்தி எழுதியிருக்கிறார்.

3. இயேசுவைக் குறித்த பார்வை: உலகத்தின் இரட்சகர்: (மனிதகுமாரன்)

இயேசு யூதருடைய மேசியா மாத்திரமல்ல, அவர் உலகத்தின் இரட்சகராகவும் இருக்கிறார் என்பதை லூக்கா அதிகமாக வலியுறுத்தி இருக்கிறார்.

4. எழுதப்பட்டுள்ள செய்தி:

இந்த சுவிசேஷத்தில் தாழ்மையும் மனதுருக்கமும் அதிகமாக முக்கியப் படுத்தப் பட்டிருக்கிறது. முக்கிய வனம்: லூக்கா-19: 10 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார். லூக்கா சுவிசேஷத்தில் மற்ற 3 சுவிசேஷங்களில் காணப்படாத அதிகமான குறிப்புகள், உவமைகள், சம்பவங்கள் உள்ளன. உதாரணத்திற்கு, யோவான் ஸ்நானகனின் பிறப்பைக் குறித்து சகரியாவுக்கு அறிவிக்கப்பட்டது, எம்மாவூஸ் சீடர்களோடு இயேசு நடந்துசென்றது போன்றவைகள். இதிலே 24 உவமைகள் எழுதப்பட்டுள்ளன (மத்தேயுவில் 22 உவமைகளும் மாற்குவில் 8 உவமைகளும் உள்ளன). தனித்தன்மைவாய்ந்த 13 உவமைகள் லூக்காவில் உள்ளது. புதியஏற்பாட்டிலே பெரிய புத்தகம் லூக்கா ஆகும் (அதிகாரங்களில் எண்ணிக்கையில் அல்ல).
இயேசு உயிர;த்தெழுந்தபிறகு, பரலோகத்திற்கு எழுந்தருளிச்சென்றதை லூக்கா சுவிசேஷம் மாத்திரமே விவரிக்கிறது!
இயேசுவின் வாழ்வில் பரிசு;தஆவியானவரின் நடத்துதலைக்குறித்த அதிகமான முக்கியப்படுத்துதல் கொடுக்கப்பட்டுள்ளது
இதிலே ஜெபத்தைக்குறித்து அதிகமான குறிப்புகள் முன்வைக்கப் பட்டிருக்கிறது.

லூக்கா சுவிசேஷத்தின் தொகுப்பு:

(மொத்தம் 24 அதிகாரங்கள், 7 பகுதிகளாகப் பிரிக்கலாம்)
I. அதிகாரம் 1: 1-4 முகவுரை
II. அதிகாரம்-1: 5 முதல் 2 பிறப்பின் விபரங்கள்
1. யோவான் ஸ்நானகனின் பிறப்பைக்குறித்த அறிவிப்பு (1: 5-25)
2. இயேசுவின் பிறப்பைக்குறித்த அறிவிப்பு (1: 26-38)
3. மரியாள் எலிசபெத்தைச் சந்திக்கச் செல்லுதல் (1: 39-56)
4. யோவானின் பிறப்பு (1: 57-80)
5. இயேசுவின் பிறப்பு (2: 1-21)
6. சுத்திகரிப்பின் பிரமாணம் நிறைவேற்றப்படுதல் (2: 22-40)
7. 12 வயதில் எருசலேமில் இயேசு (2: 41-52)
III. அதிகாரம்-3 இயேசுவை அறிமுகப்படுத்துதல்
1. யோவான் ஸ்நானகனின் ஊழியம் (3: 1-20)
2. இயேசு ஞானஸ்நானம் பெறுதல் (3: 21-22)
3. இயேசுவின் வம்சவரலாறு (3: 23-38)
IV. அதிகாரம்-4 முதல் 9: 50 வரை: தனது ஊழியத்தால் அதிகாரப்படுத்தப்பட்ட இயேசு
1. இயேசு சோதிக்கப்பட்டது (4: 1-13)
2. ஏசாயாவில் எழுதப்பட்டது நடைமுறைக்கு வருதல் (4: 16-30)
3. அசுத்த ஆவியைத் துரத்துதல் (4: 31-37)
4. இயேசுவின் ஊழியங்களும் போதனைகளும்
5. இயேசு சீடர்களை அழைத்தல்
6. 12 அப்போஸ்தலர்கள் அனுப்பப்படுதல் (9: 1-6)
V. அதிகாரம் 9: 50 முதல் 19: 27 தனது போதனைகளைத் தாங்கும் இயேசுவின் ஊழியங்கள்
1. புறக் கணிக்கப்படுதலைக் குறித்த போதனை (9: 51-56)
2. சீஷத்துவத்தைக் குறித்த போதனை (9: 57-62)
3. சுவிசேஷம் அறிவித்தலைக் குறித்த போதனை (10: 1-24)
4. நல்ல சமாரியனின் உவமை (10: 25-37)
5. மார்த்தாளும் மரியாளும் (10: 38-42) தேவையானது ஒன்றே!
6. ஜெபத்தைக் குறித்த போதனை (11: 1-13)
7. எதிர்ப்பைக் குறித்த போதனை (11: 14-23)
8. கீழ்படிதலைக் குறித்த போதனை (11: 27-28)
9. வெளிவேஷத்தைக் குறித்த போதனை (11: 29 முதல் 12: 3)
10. காணாமல் போனவைகளைக் குறித்த உவமை (15)
11. பரதீசு, நரகத்தைக் குறித்த உண்மை (16: 19-31)
12. சோர்ந்துபோகாமல் ஜெபித்தலைக் குறித்த போதனை (18: 1-14)
13. சகேயுவின் வீடு (19: 1-10)
VI. அதிகாரம் 19: 28 முதல் 23 இயேசுவின் பாடுகளின் வாரம்:
1. எருசலேமிற்குள் பவணிசெல்லுதல் (19: 28-44)
2. தேவாலயத்தைச் சுத்திகரித்தல் (19: 45-48)
3. கொடுத்தலைக் குறித்த போதனை (21: 1-4)
4. கடைசிக்காலத்தைக் குறித்த போதனை (21: 5-38)
5. இயேசு காட்டிக் கொடுக்கப் பட்டதிலிருந்து அடக்கம்வரை
VII. அதிகாரம்-24 இயேசுவின் உயிர்த்தெழுதல்:
1. உயிர்த் தெழுதலைக் குறித்து பெண்கள் அறிவித்த செய்தி (24: 1-12)
2. எம்மாவூஸுக்குச் செல்லும் வழியில் (24: 13-35)
3. சீடர்களுக்குத் தரிசனமாகுதல் (24: 36-49)
4. பரலோகத்திற்கு எழுந்தருளிச் செல்லுதல் (24: 50-53)

முக்கிய வசனங்கள்:

லூக்-2: 11 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
லூக்-9: 26 மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார்.
லூக்-19: 10 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

Comments