எபிரேயருக்கு எழுதப்பட்ட கடிதம்


எபிரேயருக்கு எழுதப்பட்ட கடிதம் குறித்த பார்வை:

I. யார் எழுதியது? எழுதிய ஆசிரியர்
II. யாருக்கு எழுதப்பட்டது? எழுதப்பட்ட நபர்
III. எதற்காக எழுதப்பட்டது? எழுதப்பட்டதன் நோக்கம்

எழுதிய ஆசிரியர்

இந்தக் கடிதத்தை எழுதிய ஆசிரியர் யார் என்று நமக்குத் தெரியவில்லை. இது பவுலால் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேநேரத்தில், 2ஆம் நூற்றாண்டின் கடைசிநாட்களில் தெர்துலியன் என்பவரின் கூற்றுப்படி, இது லேவியனாகிய பர்னபாவால் எழுதப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 2ஆம் நூற்றாண்டின் கடைசி மற்றும் 3ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த ஓரிகன் என்பவர், இதை எழுதிய ஆசிரியர் யாரென்பது தேவனுக்கே தெரியும்! என்று கூறியிருக்கிறார். இதில் உள்ள எழுத்துநடைகளும், முறைகளும் பவுலுடைய தன்மையை வெளிப்படுத்தக்கூடியவைகளாகத் தோன்றுகின்றன. மேலும் இந்தப் புத்தகம், பெரும்பாலும் தேவாலயம் இடிக்கப்பட்டதற்கு முன்பு (தேவாலயம் கி.பி.70ல் ரோமனாகிய தீத்து இராயனால் இடிக்கப்பட்டது), இத்தாலியிலிருந்து எழுதப்பட்டிருக்கவேண்டும். அதேபோல தீமோத்தேயு உயிரோடிருந்த நாட்களில் இது எழுதப்பட்டிருக்கிறது.
எபி-13: 23-24 சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டானென்று அறிவீர்களாக, அவன் சீக்கிரமாய் வந்தால், அவனோடேகூட நான் வந்து, உங்களைக் காண்பேன். 24. உங்களை நடத்துகிறவர்களையும், பரிசுத்தவான்கள் யாவரையும் வாழ்த்துங்கள். இத்தாலியா தேசத்தர் யாவரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

எழுதப்பட்ட நபர்கள்:

எபிரேயர் என்ற வார்த்தையே, இது யூதவிசுவாசிகளுக்கு எழுதப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. முதன்முதலில் ஆபிரகாம் எபிரேயன் என்று அழைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய வம்சத்தில் வந்தவர்கள் 12 கோத்திரங்களாகிய இஸ்ரவேலர்கள் ஆவார்கள். அவர்கள் அனைவருமே எபிரேயர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். யோசேப்பு எகிப்து தேசத்தில் வாழ்ந்தபோது எபிரேயன் என்று அடையாளப்படுத்தப்பட்டான்.
ஆதி-14: 13 தப்பியோடின ஒருவன் எபிரெயனாகிய ஆபிராமிடத்தில் வந்து அதை அறிவித்தான்.
ஆதி-39: 14 அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரெய மனுஷன் (யோசேப்பு) நம்மிடத்தில் சரசம்பண்ணும்படிக்கு அவனை நமக்குள் கொண்டுவந்தார்.
இரண்டு வேறுபட்ட யூதகுழுக்களுக்கு இது எழுதப்பட்டிருக்கிறது. யூதர்களில் அநேகர் இரட்சிக்கப்பட்டிருந்தார்கள்.
1. இயேசுகிறிஸ்துவை தங்கள் மேசியாவாக விசுவாசிக்காதிருந்த இரட்சிக்கப்படாத யூதர்களுக்கு.
2. இரட்சிக்கப்பட்டு, மீண்டும் யூததேவாலய ஆராதனைமுறைகளுக்குத் திரும்பும் சோதனைக்குட்பட்ட யூதவிசுவாசிகளுக்கு.
இது விசுவாசிகளுக்கு எழுதப்பட்டிருக்கிறபடியால், விசுவாசிகளாகிய நமக்கும் சொந்தமானதாக இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.
கலா-3: 29 நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீhர்கள்.
கிறிஸ்துவுக்குள் நாம் இருக்கிறபடியால், நாமும் ஆபிரகாமின் சந்ததியாராக இருக்கிறோம். எனவே நாமும் ஆவிக்குரிய எபிரேயர்களாவோம். எனவே எபிரேயருக்கு எழுதப்பட்ட கடிதம் நமக்குச் சொந்தமாக இருக்கிறது

எழுதப்பட்டதன் நோக்கம்:

எபிரேயருக்கு எழுதப்பட்ட கடிதம், இயேசுகிறிஸ்துவைக்குறித்த தலைப்பிற்கு, வேதாகமத்தின் மற்ற எல்லாப் புத்தகங்களையும்விட ஒரு தனித்தன்மை வாய்ந்த ஒன்றாக இருக்கிறது.
சுவிசேஷங்கள் இயேசுகிறிஸ்துவின் பூமிக்குரிய வாழ்வைக்குறித்து விவரிக்கின்றன.
அப்போஸ்தல நடபடிகள், இயேசுவின்கிறிஸ்துவின் ஊழியம் பூமியிலே பரவியதைக்குறித்து விவரிக்கின்றது.
பவுல், யாக்கோபு, பேதுரு, யோவான் மற்றும் யூதாவின் கடிதங்கள் விசுவாசிகளின் வாழ்வில் இயேசுகிறிஸ்துவின் ஜீவனைக்குறித்துச் சொல்கின்றன.
வெளிப்படுத்தின விசேஷம் இயேசுகிறிஸ்துவின் 2ஆம் வருகையைக்குறித்து விவரிக்கின்றது.
ஆனால், எபிரேயருக்கு எழுதப்பட்ட கடிதம்தான், இயேசுவின் மேன்மையைக்குறித்த தலைப்பை நமக்கு சிறப்பாகக் காட்டுகிறது.
பழையஏற்பாட்டோடு தொடர்புபடுத்தப்பட்ட விதத்தில், குறிப்பாக ஆசாரியத்துவத்தையும், லேவியராகமத்தையும் வலியுறுத்தி, கிறிஸ்துவைக்குறித்த ஒரு விவரித்தலாக இது இருக்கிறது. எபிரேயருக்கு எழுதப்பட்ட கடிதம், பழையஏற்பாட்டைக்குறித்த அதிகபட்ச புரிந்துகொள்ளுதலை நமக்குக் கொடுக்கிறது.

எபிரேய புத்தகத்தின் சில சிறப்புகள்:

இயேசு கிறிஸ்துவைக்குறித்த குறிப்புகள் குறைந்தபட்சம் 148, அதிகபட்சமாக 200 முதல் 303 முறை கொடுக்கப்பட்டிருக்கிறது.
1. அதிகாரங்கள் 1 முதல் 2ல்: தேதூதர்களைவிட விசேஷித்தவராக குமாரனாக
2. அதிகாரங்கள் 3 முதல் 4ல்: மோசேயைவிட விசேஷித்தவராக ஊழியனாக
3. அதிகாரங்கள் 5 முதல் 7ல்: ஆரோனைவிட விசேஷித்த ஆசாரியனாக
4. அதிகாரம் 8ல்: விசேஷித்த உடன்படிக்கையின் மத்தியஸ்தராக
5. அதிகாரங்கள் 9 முதல் 10ல்: விசேஷித்த ஆசாரிப்புக்கூடாரத்தின் ஊழியராக
6. அதிகாரங்கள் 11 முதல் 12ல் விசேஷித்த முன்மாதிரியாக
7. அதிகாரம் 13ல் விசேஷித்த மேய்ப்பராக
விசேஷித்த என்ற வார்த்தை 13 முறை குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பூரணம் என்பதைக்குறிக்கும் வார்த்தை 14 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

எபிரேயரில் இயேசுகிறிஸ்து:

1. குமாரன் (1: 2) தேவகுமாரன் (4: 14)
2. சகலவற்றிற்கும் சுதந்தரவாளி (1: 2)
3. உலகத்தைப் படைத்தவர் (1: 2)
4. தேவனுடைய மகிமையின் பிரகாசம் (1: 3)
5. தேவனுடைய தன்மையின் (சுபாவத்தின்) சொரூபம் (1: 3)
6. சகலத்தையும் தாங்குபவர் (1: 3)
7. பாவங்களை நீக்கி சுத்திகரிப்பவர் (1: 3)
8. தேவதூதரைப்பார்க்கிலும் விசேஷித்தவர் (1: 4)
9. முதற்பேரானவர்-முதன்மையானவர் (1: 6)
10. தேவன் (1: 8)
11. ராஜா (1: 8)
12. நீதியை விரும்புபவர் (1: 9)
13. அக்கிரமத்தை வெறுப்பவர் (1: 9)
14. என்றென்றைக்கும் நிலைத்திருப்பவர் (1: 11, 7: 3, 17, 25)
15. மாறாதவர் (1: 12, 13: 8)
16. தேவவசனத்தைக் கொடுத்தவர் (2: 3)
17. நமக்காக மரணத்தை ருசிபார்த்தவர் (2: 9)
18. இரட்சிப்பின் அதிபதி (2: 10, 5: 9)
19. பரிசுத்தம்செய்கிறவர் (2: 11, 13: 12)
20. நம்முடைய சகோதரர் (2: 11-12)
21. பாடகர் (2: 12)
22. தகப்பன் (2: 13)
23. மனிதனானவர் (2: 14)
24. மரணத்தை அழிப்பவர் (2: 14)
25. அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பர் (2: 15)
26. இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியர் (2: 17)
27. சோதிக்கப்பட்டவர் (2: 18, 5: 15)
28. பாடுபட்டவர் (2: 18)
29. சோதிக்கப்படுபவர்களுக்கு உதவிசெய்ய வல்லவர் (2: 18)
30. அப்போஸ்தலர் (3: 1)
31. பிரதான ஆசாரியர் (3: 1)
32. மகிமைக்குப் பாத்திரர் (3: 3)
33. பரலோகத்திற்குப் போனவர் (4: 14)
34. பாவமில்லாதவர் (4: 15)
35. ஜெபவீரன் (5: 7)
36. கீழ்படிதலைக் கற்றுக்கொண்ட மாணவர் (5: 8)
37. நமக்கு முன்னோடியவர் (6: 20)
38. நம்முடைய கர்த்தர் (7: 14, 13: 20)
39. மெல்கிசெதேக்குக்கு ஒப்பாக எழும்பிய ஆசாரியர் (7: 17)
40. விசேஷித்த உடன்படிக்கையின் பிணையாளி (7: 22)
41. தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்பவர் (7: 25)
42. பரிசுத்தர் (7: 26)
43. குற்றமற்றவர் (7: 26)
44. மாசில்லாவதவர் (7: 26)
45. பாவிகளுக்கு விலகினவர் (7: 26)
46. வானங்களில் உயர்ந்தவர் (7: 26)
47. நம்முடைய பாவங்களுக்காக தம்மையே பலியிட்டவார் (7: 27)
48. மெய்யான ஆசரிப்புக்கூடாரத்தில் ஊழியம்செய்பவர் (8: 2)
49. பழைய மற்றும் புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தர் (8: 6, 9: 15, 12: 24)
50. நித்தியமீட்பை உண்டுபண்ணினவர் (9: 12)
51. பாவங்களை நீக்குபவர் (9: 26)
52. பாவங்களைச் சுமப்பவர் (9: 28)
53. இரண்டாவதுமுறை வருபவர் (9: 28)
54. பரிசுத்தமாக்கப்படுபவர்களை பூரணப்படுத்துபவர் (10: 14)
55. புதிதும் ஜீவனுமான வழியாக இருப்பவர் (10: 19)
56. விசுவாசத்தைத் துவங்குபவர், முடிப்பவர் (12: 1)
57. நம்முடைய நோக்குதலுக்குரியவர் (12: 1)
58. பாவத்திற்கு விரோதமாகப் போராடிஜெயிப்பதற்கு நமக்கு முன்மாதிரியானவர் (12: 3)
59. நிந்தையை சுமப்பதற்கு நமக்கு முன்மாதிரியானவர் (13: 13)
60. பெரிய மேய்ப்பர் (13: 20)

எபிரேயரில் உள்ள 5 எச்சரிப்புகள்:

1. கேட்ட வசனங்களை விட்டுவிலகாதிருக்க எச்சரிப்பு. பெரிதான இரட்சிப்பைக்குறித்து கவலையற்றிருப்போமானால் தண்டனைக்குத் தப்பமுடியாது (2: 1-4).
2. அவிசுவாசம் மற்றும் கீழ்படியாமையைக்குறித்த எச்சரிப்பு (3: 12 முதல் 4: 13)
3. பின்வாங்கிப்போகுதலைக்குறித்த எச்சரிப்பு (5: 12 முதல் 6: 8)
4. மனப்பூர்வமாகப் பாவம்செய்தலைக்குறித்த எச்சரிப்பு (10: 26-31)
5. தேவனுடைய செயலைத் தீட்டுப்படுத்துதலைக்குறித்த எச்சரிப்பு (12: 14-29)
இந்த எச்ரிப்புகளைக்குறித்து பல விவாதங்கள் காணப்படுகின்றன. சிலர், இந்த எச்சரிப்புகள் அவிசுவாசிகளைக் குறிக்கிறது என்கிறார்கள். மற்றவர்களோ, இது விசுவாசிகளையே குறிக்கிறது என்கிறார்கள். இதில் கூறப்பட்டுள்ள தண்டனைகள், நித்திய நியாயத்தீர்ப்போடு தொடர்புடையது என்று சிலர் கருதுகிறார்கள். மற்றவர்களோ, இந்தத் தண்டனைகள் இப்பொழுதிருக்கிற பூமிக்குரிய வாழ்க்கையின் தற்காலிக நியாயத்தீர்ப்பைக் குறிக்கிறது என்று கருதுகிறார்கள். நாம் அறியவேண்டியது என்னவென்றால், தேவனின் எச்சரிப்பைக் உதாசீனப்படுத்துபவர்களாகவோ, அல்லது குறைத்து மதிப்பிடுபவர்களாகவோ நாம் இருக்கக்கூடாது.
இயேசுவின் பிரசன்னத்தைக்குறித்த நிச்சயத்தையும், தேவவசனத்தைக் குறித்த முக்கியத்துவத்தையும் இந்தப்புத்தகம் தெளிவுபடுத்துகிறது.
எபி-13: 5 நீங்கள் பணஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள், நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
எபி-4: 12 தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
எபி-6: 5 தேவனுடைய நல்வார்த்தையையும், இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்து.
எபி-6: 18 நமக்கு முன்வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச்செய்தார்.
எபி-13: 7 தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து, உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட கடிதத்தின் தொகுப்பு:

I. அதிகாரம்-1: 1-3 இயேசு தீர்க்கதரிசிகளிலும் மேலானவர்
எபி-1: 1-3 பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், 2. இந்தக் கடைசிநாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார், இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். 3. இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.
II. அதிகாரம்-1: 4 முதல் 2: 18 இயேசு தேவதூதர்களிலும் மேலானவர்:
1. வேதவசனங்களால் நிரூபிக்கப்பட்டவர் (1: 4-14)
எபி-1: 5-6 எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும், நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா? 6. மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர்கள் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.
எபி-1: 13 நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?
2. கேட்டவைகளை விட்டுவிலகாதிருக்க எச்சரிக்கை (2: 1-4)
அ. கீழ்படியாமைக்குத் தக்க தண்டனை வரும் என்ற உதாரணம் (2: 2)
ஆ. இரட்சிப்பைக்குறித்து கரிசனையாயிருக்க ஆலோசனை (2: 3-4)
3. இயேசு தேவனாக இருந்தும் நமக்காக, நம்மை மீட்டு, விடுவிப்பதற்காக நம்மைப்போல மனிதனானார் (2: 5-18)
அ. தேவதூதரிலும் சற்று சிறியவராக்கப்பட்டார் (2: 5-9)
ஆ. நம்மைப்போலானார் (2: 10-13)
இ. மரணத்துக் அதிபதியாகிய பிசாசானவனை மரணத்தாலே ஜெயிப்பதற்காக (2: 14-16)
எபி-2: 14-15 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார். மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், 15. ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.
ஈ. சோதிக்கப்படுகிற நமக்கு உதவி செய்யவல்லராயிருக்கிறார் (2: 16-18)
III. அதிகாரங்கள் 3-4: இயேசு மோசேயைவிட மேலானவர்
1. யூதர்கள் மோசேயை மிகவும் கனத்திற்குரியவராக மதித்தார்கள். அவரைவிட இயேசு கனத்துக்குரியவர் என்பதை விளக்கப்படுத்துதல் (3: 1-6)
2. அவிசுவாசம் மற்றும் கீழ்படியாமைக்கு எதிரான எச்சரிப்பு (3: 7- முதல் 4: 13)
அ. இஸ்ரவேல் மக்களின் உதாணரம் (3: 7-19)
எபி-3: 13-19 உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். 14. நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம். 15. இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே. 16. கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட யாவரும் அப்படிச் செய்தார்களல்லவா? 17. மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே. 18. பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக் குறித்தல்லவா? 19. ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற்போனார்களென்று பார்க்கிறோம்.
ஆ. இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதற்கான புத்திமதி (4: 1-11)
எபி-4: 1 ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்.
இ. தேவனுடைய வார்த்தையின் வல்லமை (4: 12-13)
ஈ. சிங்காசனத்திடம் தைரியமாக வருதற்கான அழைப்பு (4: 14-16)
IV. அதிகாரங்கள் 5 முதல் 7: இயேசு ஆசாரியனாகிய ஆரோனைவிட மேலானவர்
1. ஆணையினால் நிரூபிக்கப்பட்டது (5: 1-11)
அ. பிரதான ஆசாரியனின் வேலை (5: 1-4)
ஆ. கிறிஸ்துவின் அழைப்பு (5: 5-6)
இ. நம்மோடு கிறிஸ்துவின் அடையாளம் (5: 7-11)
எபி-5: 8-10 அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, 9. தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, 10. மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.
2. இரட்சிக்கப்பட்டும் மறுதலித்து, பின்வாங்குதலைக்குறித்த எச்சரிப்பு (5: 12 முதல் 6-12)
அ. பால் உணவு, பலமான ஆகாரம் (5: 12-14)
ஆ. பூரணராகும்படி முன்னேறிட ஆலோசனை (6: 1-3)
  (6 மூலஉபதேசங்கள்)
இ. ஒரேதரம் இரட்சிக்கப்படுதல் (6: 4-8)
ஈ. விசுவாசிகளைக்குறித்த நம்பிக்கை (6: 9-12)
3. தேவனுடைய வாக்குத்தத்தின் மாறாத தன்மை (6: 13-20)
4. மெல்கிசெதேக்கும் கிறிஸ்துவும் (7)
அ. மெல்கிசெதேக்கு ஆரோனைவிட மேலானவர் (7: 1-10)
ஆ. கிறிஸ்து மெல்கிசெதேக்கின் முறைமையில் ஆசாரியராக இருக்கிறார் (7: 11-19)
இ. கிறிஸ்துவின் மேலான செய்கை (7: 20-28)
எபி-7: 27 அவார் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை, ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார்.
V. அதிகாரங்கள் 8 முதல் 10: விசேஷித்த ஆசரிப்புக்கூடாரத்தின் ஆசாரியர்:
1. கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட கூடாரம் (8: 1-6)
2. விசேஷித்த உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டது (8: 7-13)
3. பழைய உடன்படிக்கையின் உதாரணம் (9: 1-10)
4. புதிய உடன்படிக்கையின் சிறந்த செய்கை (9: 11-15)
எபி-9: 12 வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகாபரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.
5. மரணத்தின் அவசியம் (9: 16-22)
6. பலியின் மேன்மை (9: 23-28)
7. பாவத்தை சரிசெய்யமுடியாதிருந்த பழைய உடன்படிக்கை (10: 1-4)
8. சரீரத்திற்கான அவசியம் (10: 5-10)
எபி-10: 10 இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.
9. இயேசுகிறிஸ்துவுடைய பலியின் பூரணப்படுத்துதல் (10: 11-18)
10. நம்முடைய பதிலளித்தல் (10: 19-25)
எபி-10: 22-25 துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். 23. அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம், வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. 24. மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து, 25. சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம், நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
11. மனப்பூர்வமாகப் பாவம்செய்தலுக்கு விரோதமான எச்சரிப்பு (10: 26-31)
எபி-10: 26-27 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், 27. நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
12. சகித்து வாழ்தலின் அவசியம் (10: 32-39)
எபி-10: 36-37 நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. 37. வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்.
VI. அதிகாரங்கள் 11-12: விசேஷித்த முன்மாதிரிகளுக்குக்கீழ், விசுவாசத்தால் வாழ்ந்திடுங்கள்
1. விசுவாசத்திற்கான முகவுரை (11: 1-3)
2. தேவனைப் பிரியப்படுத்திட விசுவாசம் தேவை (11: 4-7)
3. விசுவாசம் ஒரு பயணத்தில் நம்மை நடத்திச்செல்கிறது (11: 5-16)
4. விசுவாசம் எதிர்காலத்தைப் பார்க்கிறது (11: 17-22)
5. விசுவாசம் கிறிஸ்துவைப்பார்க்கிறது (11: 23-29)
6. விசுவாசம் உலகத்தைவிட நம்மை சிறந்தவர்களாக்குகிறது (11: 30-40)
7. கிறிஸ்துவை நினைத்துப் பார்ப்போமாக (12: 1-4)
8. சிட்சிக்கப்படும்போது சோர்ந்துபோகவேண்டாம் (12: 5-13)
9. தேவனுடைய செய்கையைத் தீட்டுப்படுத்துதலுக்கு விரோதமான எச்சரிப்பு (12: 14-29)
எபி-12: 28 ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
VII. அதிகாரம்-13: பெரிய மேய்ப்பருக்குக்கீழாக வாழ்ந்திடுங்கள்
1. அன்பிலே வாழுங்கள் (13: 1-6)
2. பெரிய மேய்ப்பரைப் பின்பற்றுங்கள் (13: 7-19)
அ. சபையில் உங்களை நடத்துபர்களை நினைத்துக்கொள்ளுங்கள் (13: 7-8)
எபி-13: 7 தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உஙரங்கள் 8 முதல் 10: விசேஷித்த ஆசரிப்புக்கூ்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள். 8. இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
3. வரவிருக்கும் நகரத்தை நாடித்தேடுங்கள் (13: 9-14)
4. தேவனைத் துதித்து நற்கிரியைசெய்து வாழுங்கள் (13: 15-16)
5. அதிகாரிகளுக்குக் கீழ்படியுங்கள் (13: 17)
6. ஜெபியுங்கள் (13: 18-19)
7. பெரிய மேய்ப்பரின் ஆசீர்வாதம் (13: 20-21)
எபி-13: 20-21 நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோhpலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், 21. இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்கு முன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக, அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
VIII. அதிகாரம் 13: 22-25 முடிவுரை
எபி-13: 25ரங்கள் 8 முதல் 10: விசேஷித்த ஆசரிப்புக்கூ கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

Comments