பிலிப்பியருக்கு எழுதப்பட்ட கடிதம்


பிலிப்பியருக்கு எழுதப்பட்ட கடிதம் குறித்த பார்வை:

I. யார் எழுதியது? எழுதிய ஆசிரியர்
II. யாருக்கு எழுதப்பட்டது? எழுதப்பட்ட மக்கள்
III. எதற்காக எழுதப்பட்டது? எழுதப்பட்டதன் நோக்கம்

எழுதிய ஆசிரியர்: பவுல்

பிலி-1: 1 இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், எழுதுகிறதாவது.
ஊழியக்காரன் என்பதற்கு ஆங்கிலத்தில் (Bondservant) என்று உள்ளது. அதற்கு தன்னையே மனப்பூர்வமாக அடிமையாக்கிக்கொண்டவன் என்று அர்த்தமாகும். தேவனுடைய ஊழியத்திலிருந்த பவுலும், அவருக்கு உடன்ஊழியராக உருவாகிய தீமோத்தேயுவும் இயேசு கிறிஸ்துவுக்குத் தங்களை அடிமையாக்கி, அவருடைய அடிமைகளாகத்தான் வாழ்ந்தார்கள், ஊழியம்செய்தார்கள். பெருமைக்கோ, பட்டம்பதவிக்கோ, மேட்டிமைக்கோ அவர்கள் ஒருபோதும் இடம்கொடுக்கவில்லை. பவுல் ரோமாபுரியில் இருந்தபோது இதை எழுதியிருக்கவேண்டும் என்று வேதபண்டிதர்கள் கருதுகிறார்கள். அது சரியாக இருக்குமெனில் இந்தக் கடிதம் கி.பி.62 எழுதப்பட்டிருக்கும்.

எழுதப்பட்ட மக்கள்:

பிலி-1: 1 பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும்.
ஒரு சபையில் காணப்படவேண்டிய 3 விதமான குழுக்களை இந்தப் பகுதி தெளிவுபடுத்துகிறது.
1. பரிசுத்தவான்கள் (இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள்)
2. கண்காணிகள் (மேய்ப்பர்கள் அல்லது மூப்பர்கள்)
3. உதவிக்காரர்கள் (சபை மற்றும் ஊழியக்காரியங்களில் விசாரித்து, பணிவிடைசெய்பவர்கள்)
சபையில் விசுவாசிகள்தான் முதன்மையானவர்களாக இருக்கிறார்கள். ஒரு சபையில் ஒன்றுக்கும் மேற்பட்ட மேய்ப்பர்கள், ஆயர்கள் அல்லது கண்காணிகள் இருந்தார்கள் என்பதைக் கவனியுங்கள். Not oneman show! சபையின் ஊழியங்கள், மக்களின் தேவைகள் போன்றவற்றை பராமரித்து உதவுகிற உதவிக்காரர்களும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள். மூன்றுமே பன்மையில் இருப்பதைக் கவனியுங்கள். ஒரு தனிவிசுவாசி, ஒரேஒரு மேய்ப்பர், ஒரேஒரு உதவிக்காரர் என்ற அமைப்பு சரியான சபையாக இருக்காது.

பிலிப்பி பட்டணம்:

இது ஒரு மக்கெதோனியப் பட்டணமாகும். மகாஅலெக்கஸாண்டரின் தகப்பன் 2ஆம் பிலிப்பு என்பவருடைய பெயரால் பிலிப்பி என்று இந்தப் பட்டணம் அழைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் பெரியபெரிய சுரங்கங்கள் இருந்தபடியால், தங்கம் மற்றும் வெள்ளி அதிகம் உள்ள பணக்காரப் பட்டணமாக இருந்தது. கி.பி.50ல் பவுலுடைய முதலாவது மிஷனரிப் பயணத்தின்போது இந்தப் பட்டணத்தில் அநேகர் இரட்சிக்கப்பட்டு, இங்கே சபை உருவானது. இதைக்குறித்த விபரங்களை அப்போஸ்தர் நடபடிகள்-16: 6-40ல் வாசிக்கிறோம்.

எழுதப்பட்டதன் நோக்கம்:

இது சந்தோஷத்தின் புத்தகம் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் புத்தகத்தில் சந்தோஷம் அல்லது மகிழ்ச்சி என்ற வார்த்தை 19 முறை வந்திருக்கிறது. சந்தோஷத்தைக்குறித்து மாத்திரமல்ல, நாம் அதை எவ்வாறு பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதைக்குறித்தும் இந்தப் புத்தகம் அறிவிக்கிறது. பவுல் இந்தக் கடிதத்தை எழுதிய நாட்களில், சபை உபத்திரவத்தின் முதல் நிலையில் கடந்துபோய்க்கொண்டிருந்தது. சிறையிலிருந்துகொண்டு இந்தக் கடிதத்தை எழுதியனுப்பினார். கிறிஸ்துவுக்காக தான் சிறையிலிருந்தபோதும் தான் சந்தோஷமாக இருந்ததால், உபத்திரவத்தில் சென்றுகொண்டிருந்த சபையையும் சந்தோஷத்தை இழக்கவேண்டாம் என்று உற்சாகப்படுத்தினார். தேவனோடு உறவில் இருக்கும் சந்தோஷத்தை நாம் எப்போதும் அனுபவிக்கவேண்டும் என்று தேவன் விரும்புவதை இந்தப் புத்தகம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. கிறிஸ்துவின் சிந்தையைத் தரித்திருக்கவும், தேவனைக்குறித்த அறிவை உடையவர்களாக இருக்கவும் சபையாரைப் பவுல் ஊக்கப்படுத்துகிறார். சபை மக்களுக்கு தன்னுடைய வாழ்வை முன்மாதிரியாகக் காண்பிக்கிறார்.

பிலிப்பியருக்கு எழுதப்பட்ட கடிதத்தின் தொகுப்பு:

I. அதிகாரம்-1 ஒருமுகத்தோடு செயல்படுதலின் அவசியம்
அ. முகவுரை (1: 1-2)
ஆ. பவுலின் ஜெபமும், பிலிப்பியரைக் குறித்த நம்பிக்கையும் (1: 3-11)
1. அன்பு அதிமதிகமாகப் பெருவதற்கான ஜெபம்
2. உத்தமமானவைகளை ஒப்புக்கொள்வதற்கான ஜெபம்
3. துப்புரவானர்களும், இடறலற்றவர்களாகவும் வாழ்வதற்கான ஜெபம்
இ. பவுலின் சிறைஅனுபவம் சுவிசேஷம் பரவுதலுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது (1: 12-18)
சிறைச்சாலையையும் சுவிசேஷ அறிவிப்பின் இடமாக பவுல் பார்த்தார்.
ஈ. பவுல் மரணத்தையும், சாவையும் பார்த்தவிதம் (1: 19-26)
மரித்தால் இயேசுவோடு இருப்பது, உயிரோடிருந்தால். இயேசுவுக்காக வாழ்வது.
உ. பவுல் போராட்டங்களைப் பார்த்தவிதம் (1: 27-30)
பாடுகள் வந்தாலும் சுவிசேஷத்திற்குப் பாத்திரராக நடங்கள்
II. அதிகாரம்-2 கீழ்படிந்து வாழ்தலின் அவசியம்
1. தாழ்மையாக இருந்து கிறிஸ்துவைப் பிரதிபலித்தல் (2: 1-11)
பிலி-2: 5-8 கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. 6. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், 7. தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். 8. அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
2. குற்றமற்றவர்களும் கபடில்லாதவர்களுமாக வாழ்ந்து வெளிச்சத்தைப் பிரகாசித்தல் (2: 12-18)
3. கீழ்படிதலைப் பிரதிபலித்த தீமோத்தேயு (2: 19-24)
4. கீழ்படிதலைப் பிரதிபலித்த எப்பாப்பிரோ-தீத்து (2: 25-30)
III. அதிகாரம்-3 எளிமையான மனது
1. மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டாம் (3: 1-8)
2. தேவனை அறிவதற்கான ஆசை (3: 9-14)
பிலி-3: 10-11 இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மாரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், 11. அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன், குப்பையுமாக எண்ணுகிறேன். 14. கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
3. மாம்சத்தில் வாழ்தலுக்கான சோதனைகளைத் தவிர்க்கவும் (3: 15-21)
பிலி-3: 18-20 ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள் (மாம்த்தின்படி), அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். 19. அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவா;களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள். 20. நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

சிலுவைக்குப் பகைவர்களாக இருப்பவர்கள்:

வயிற்றுப்பிழைப்புக்காக வாழ்வார்கள்
தங்களுடைய சுயபுகழுக்காக வாழ்வார்கள்
பூமிக்குரிய காரியங்களையே சிந்திப்பார்கள்
IV. அதிகாரம்-4 உறுதியான மனது
1. பிரிவினைகளைத் தவிர்ப்போமாக (4: 1-2)
2. ஊழியம்செய்பவர்களுக்கு உதவுவோமாக (4: 3)
3. ஜெபத்தில் சரியான சிந்தையோடு வாழ்வோமாக (4: 4-9)
பிலி-4: 4,6,8 கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். 6. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தொரியப்படுத்துங்கள். 8. கடைசியாக சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவை களெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.
4. போதுமென்ற மனதின் இரகசியத்தைக் கற்றுக்கொள்வோமாக (4: 10-12)
பிலி-3: 13 என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. (பசியிலும் நிறைவிலும், தாழ்விலும் வாழ்விலும் என்னைப் பலப்படுத்துபவராலே என்னால் எல்லாவற்றையும் செய்யமுடியும் என்று பவுல் சொல்கிறார்).
5. பிலிப்பிய சபை கொடுக்கும் சபையாக இருந்தது (4: 14-20)
பிலி-4: 19 என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். (கொடுப்பவர்களுடைய பற்றாக்குறைகளை தேவன் சந்தித்து நடத்துவார்).
6. இறுதி வாழ்த்தும் ஆசீர்வாதங்களும் (4: 21-23)

Comments