மாற்கு சுவிசேஷம்


மாற்கு சுவிசேஷம் குறித்த பார்வை:

I. எழுதிய ஆசிரியர்
II. எழுதப்பட்ட மக்கள்
III. இயேசுவைக் குறித்த பார்வை
IV. எழுதப்பட்டுள்ள செய்தி

1. எழுதிய ஆசிரியர்: யோவான் மாற்கு.

அப்போஸ்தலர் நடபடிகளில் வரும் மாற்குதான் மாற்கு சுவிசேஷத்தின் ஆசிரியர். மாற்கு பேதுருவோடு ஊழியத்திற்குச் சென்றவராவார். மாற்கு பேதுருவோடு அதிக தொடர்புடையவராக இருந்தார். இயேசுவின் காரியங்களை நேரடியாகப் பார்த்து பேதுரு தன்னிடம் சொன்னவைகளை மாற்கு எழுதியிருக்கிறார். 1பேதுரு-5: 13ல் மாற்குவைக்குறித்து பேதுரு குறிப்பிட்டிருக்கிறார். 4 சுவிசேஷங்களில் முதலாவதாக எழுதப்பட்டது மாற்கு தான் என்று பல வேதபண்டிதர்கள் கருதுகிறார்கள்.
அப்-12: 12, 25 மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான், 25. பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள். (அப்-15: 37, 39)
1பேது-5: 13 உங்களுடனேகூடத் தெரிந்து கொள்ளப் பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறர்கள்.
கொலோ- 4: 10ல் மாற்கு பர்னபாவின் உறவுக்காரர் என்றும்,
பிலேமோன்-1: 24ல் என் உடன் வேலையாட்களாகிய மாற்கு என்றும் பவுல் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த சுவிசேஷத்தை எழுதியபிறகு, மாற்கு எகிப்திற்குச் சென்று, அங்கே சுவிஷேத்தை அறிவித்து, அலெச்ஸாண்ட்ரியாவில் சபையை நிறுவினார் என்று ஜொசேஃபஸ் என்று யூதசரித்திர ஆசிரியர் கூறுகிறார். வெனீஸ் நகரத்தின் வியாபாரிகள், அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்து மாற்குவின் சரீரத்தை திருடிச்சென்று வெனீஸில் அவருக்கு ஒரு புண்ணியஸ்தல்தை ஏற்படுத்தினார்கள் என்று 9ஆம் நுற்றாண்டின் பாரம்பரியம் ஒன்று தெரிவிக்கிறது.

2. எழுதப்பட்ட மக்கள்:

இது ரோமர்களுக்கு எழுதப்பட்டதாகும். மாற்கு யூதர்களல்லாத புறஜாதியாருக்கு இதை எழுதியதால், அவர்களுக்கு ஆர்வமற்றவைகளாக இருப்பதை அவர் அதிகம் முக்கியப் படுத்தவில்லை. அதேபோல அரமாயிக் வார்த்தைகளுக்குரிய விளக்கத்தையும் மாற்கு தம்முடைய புத்தகத்தில் அதிகமாகக் கொடுத்திருக்கிறார். காரணம் இந்த அரமாயிக் வார்த்தைகள் ரோமர்களுக்கு அதிகம் பழக்கப்பட்டதாக இருந்ததில்லை.

உதாரணத்திற்கு:

மாற்-3: 17 செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனர்கேஸ் என்கிற பெயரிடப்பட்டார்.
மாற்-5: 41 பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார், அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்.
மாற்-7: 34 வானத்தை அண்ணாந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார், அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம்.
மாற்-15: 22 கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடம்.
கிரேக்க வார்த்தைகளுக்கிய இடங்களில் அதிகமான லத்தீன் வார்த்தைகளையும் மாற்கு பயன்படுத்தி இருக்கிறார். அந்த நாட்களில் ரோமஉலகத்தின் சட்டப் பூர்வமாக்கப்பட்ட மொழியாக லத்தீன் இருந்ததால் அவர் அப்படிச் செய்திருக்கலாம்.
மாற்-4: 21 பின்னும் அவர் அவர்களை நோக்கி: விளக்கைத் தண்டின்மேல் வைக்கிறதற்கேயன்றி, மரக்காலின் கீழாகிலும், கட்டிலின் கீழாகிலும், வைக்கிறதற்குக் கொண்டு வருவார்களா?
மாற்-6: 27 உடனே அவனுடைய தலையைக் கொண்டுவரும்படி சேவகனுக்குக் கட்டளையிட்டு அனுப்பினான்.

3. இயேசுவைக்குறித்த பார்வை: "வேலைக்காரன்"

மாற்கு சுவிசேஷத்தில் இயேசு "வேலைக்காரனாக" வெளிப் படுத்தப் பட்டுள்ளார். இந்த முழுசுவிசேஷத்திலும் இதுவே முக்கியப் படுத்தப் பட்டிருக்கிறது. இயேசுவைத் தேவகுமாரனாக மத்தேயு காட்டுகிறார். ஆனால் மாற்கு இயேசுவை மனிதகுமாரனாகக் காட்டுகிறார். இயேசுவே தன்னை மனிதகுமாரன் என்று 14 முறை குறிப்பிட்டிருக்கிறார்.
மாற்கு-10: 45 அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங் கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்த்தார் என்றார்.

மாற்கு சுவிசேஷத்தின் சுருக்கம்

1. அதிகாரங்கள் 1 முதல் 10: வேலைக்காரன் இயேசு
செயல்பாட்டிலே மனுஷகுமாரன்
வாழ்ந்துகாட்டும் முன்மாதிரி
கலிலேயா மற்றும் பெராயா
1 முதல் 3 வேலைக் காரர்களின் வேலைக்காரன்
 4 முதல் 7 வேலைக்காரனின் வேலைகள்
 8 முதல் 10 வேலைக்காரனின் வார்த்தைகள்
2. அதிகாரங்கள் 11 முதல் 16 பலியாகும் இயேசு
சிலுவையிலே மனுஷகுமாரன்
மரிக்கும் இரட்சகர்
யூதேயா மற்றும் எருசலேம்
11 முதல் 13 வேலைக்காரனின் பிரசங்கங்கள்
14 முதல் 16 வேலைக்காரனின் பாடுகள்

4. எழுதப்பட்டுள்ள செய்தி:

இயேசுவின் வேலைக் காரனுக்குரிய இருதயத்தையும், செய்கையையும் இந்த சுவிசேஷம் அழகாகக் காண்பிக்கிறது. தன்னைக்குறித்து யூதர்கள் மத்தியில் பிரசித்தப்படுத்திட வேண்டாம் என்று இயேசுவே அடிக்கடி கூறுவதை நாம் இதிலே பார்க்கிறோம். பிரபல்யத்தையோ, புகழ் பாராட்டையோ அவர் விரும்பவில்லை. உடனே என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் மொத்தத்தில் 46 முறை வருகிறது, அதிலே, 42 முறை இந்த ஒரு புத்தகத்திலேயே வந்திருக்கிறது. தேவையை நிறைவேற்றுகிற காரியத்தில் இயேசு தாமதமாகச் செயல்பட விரும்பவில்லை என்பதை இது காட்டுகிறது.
இதிலிருந்து சபை கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், இயேசுவைப்போல நாமும் வேலைக்காரர்களாக, பணிவிடை செய்பவர்களாக வாழ்ந்திட வேண்டும்.

மாற்கு சுவிசேஷத்தின் தொகுப்பு:

(16 அதிகாரங்கள், 4 பகுதிகளாகப் பிரிக்கலாம்)
I. அதிகாரம்-1: 1-13 முகவுரை. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் ஆரம்பம்:
1. முன்னோடியாக வந்த யோவான் ஸ்நானகன் (1: 1-8)
2. ஞானஸ்நானம் (1: 9-11): இயேசுவைக்குறித்து பரலோகம் சாட்சி பகர்ந்தது.
3. சோதிக்கப்படுதல் (1: 12-13)
II. அதிகாரம்-1: 14 முதல் 9 வரை: இயேசுவின் கலிலேய ஊழியம்
1. தான் யாரென்பதை இயேசு வெளிப்படுத்திக் காட்டுதல் (1: 14 முதல் 2: 28)
அ. காலம் நிறைவேறிற்று (1: 14-15)
ஆ. தலைவர் (1: 16-20) - சீடர்களை அழைத்தல்
இ. அசுத்த ஆவிகள்மேல் அதிகாரம் உடையவர் (1: 21-28)
ஈ. வியாதியின்மேல் அதிகாரம் உடையவர் (1: 29-34)
உ. பிரதானமானது ஜெபமும் பிரசங்கித்தலும் (1: 35-39)
ஊ. குஷ்டரோகி சுத்தமாக்கப்படுதல் (1: 40-45)
எ. திமிர்வாதக்காரனை மன்னித்தலில் தனது தெய்வீகத்தை நிரூபித்தல் (2: 1-12)
ஏ. தன்னை மருத்துவராக, மணவாளனாக, ஓய்வுநாளின் ஆண்டராக அறிவித்தல் (2: 13-28)
2. எதிர்ப்புக்கள் எழும்புதல் (3 முதல் 6)
3. தன்னுடைய மரணத்திற்காக தனது சீடர்களை ஆயத்தப்படுத்துதல் (7 முதல் 9)
அ. சீஷத்துவத்திற்கான அழைப்பு (8: 34-38)
ஆ. ஜெபம் மற்றும் உபவாசத்தின் வலிமை முக்கியப் படுத்தப்படுதல் (9: 14-29)
இ. தாழ்மையைக் குறித்த போதனை (9: 33-37)
ஈ. இடறலைக்குறித்த போதனை (9: 42-50)
III. அதிகாரம்-10 முதல் 16: எருசலேம் நிகழ்வுகள்:
1. எருசலேமிற்குச் செல்லும் வழியில் (10)
2. எருசலேமில் எதிர்ப்பு (11-12)
3. கடைசிக் காலங்களைக் குறித்த போதனை (13)
4. இயேசுவின் இறுதி நாட்கள் (14-16)
காட்டிக் கொடுக்கப் பட்டதிலிருந்து உயிர்த்தெழுதல் வரை.
IV. அதிகாரம் 16: 19-20: இறுதிக் குறிப்புகள்:
இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார். அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள்.

Comments

Post a Comment