தானியேல்


முகவுரை:

வேதாகமத்திலே அதிகமாக நேசிக்கப்படுகிற புத்தகங்களில் ஒன்றாக தானியேலின் புத்தகம் இருக்கிறது. அதேபோல பழையஏற்பாட்டிலே, தானியேல் மிகவும் நேசிக்கப்படுகிற நபர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இந்தப் புத்தகத்தில் ஆச்சரியமான தீர்க்கதரிசன வெளிப்பாடுகள் கொடுக்கப் பட்டுள்ளன. ஒருநபர் தானியேலின் புத்தகத்தைப் புரிந்திருத்தல், வெளிப்படுத்தின விசேஷத்தைப் புரிந்துகொள்வதற்குரிய திறவுகோலாக இருக்கிறது. பழையஏற்பாட்டில் தானியேலின் புத்தகம் 27ஆவது புத்தகமாகவும், புதிய ஏற்பாட்டில் வெளிப்படுத்தின விசேஷம் 27ஆவது புத்தகமாகவும் இருக்கிறது. தானியேல் இஸ்ரவேல் தேசமாகிய தெரிந்துகொள்ளப் பட்டவர்களைக் குறித்த அதிகமான குறிப்புக்களையும், வெளிப்படுத்தின விசேஷம் சபையாகிய தெரிந்து கொள்ளப் பட்டவர்களையும் சேர்த்து அதிகமான வெளிப்பாடுகளையும் கொடுக்கிறது. தானியேலின் புத்தகத்தில் முத்திரை போடப்பட்டது, வெளிப்படுத்தின விசேஷத்தில் முத்திரைகள் உடைக்கப்படுகிறது.
தானி-12: 9 அதற்கு அவன்: தானியேலே, போகலாம், இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்.
வெளி-6: 1 ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன்.
கடைசிக்காலம், முடிவு, மரணம், நியாயத்தீர்ப்பு, வருங்காலத்தின் நிலை, நித்தியம் போன்ற சத்தியத்தை சரியாகப் புரிந்துகொள்வதற்கு, தானியேலின் புத்தகத்தை நன்கு கவனமுடன் கற்றுக்கொள்ளுதல் அவசியமானதாகக இருக்கிறது. தானியேலில் கொடுக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்கள் மிகவும் துல்லியமாகவும், தெளிவாகவும் இருக்கின்றன. தானியேலின் புத்தகத்தின் மூலமாக, இயேசு தமது இரண்டாம் வருகையின்போது, எப்பொழுது எருசலேமிற்குள் வெற்றிப்பவணியோடு பிரவேசிப்பார் என்பதைக்குறித்த சரியான நாளையும் நாம் அறியமுடிகிறது. கடைசிநாட்களில் உலகராஜ்யங்களுக்கு என்ன நடக்கும் என்பதைக்குறித்தும் இதிலே அறிவிக்கப்பட்டுள்ளது.

தானியேலின் வாழ்க்கை:

தானியேல் என்ற பெயருக்கு தேவன் எனது நியாயாதிபதி என்று அர்த்தமாகும். தானியேல் ராஜகுடும்பத்தில் பிறந்திருந்த ஒரு யூதனாவார். கி.மு.605ல் வாலிபனாக (சுமார் 13 முதல் 15 வயது) இருந்தபோது இவர் பாபிலோனுக்கு சிறைபிடித்துக் கொண்டுசெல்லப்பட்டார்.
தானி-1: 4, 6 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமை உள்ளவர்களுமாகிய சில வாலிபரைக் கொண்டுவரவும், கட்டளையிட்டான். 6. அவர்களுக்குள் யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவார்கள் இருந்தார்கள்.
தானியேல் பெர்சியாவின் தரியு ராஜாவின் நாட்கள் வரையில் (கி.மு.538) சுமார் 84 வயதுவரை உயிர்வாழ்ந்தார். இவர் தேவனால் மிகவும் நேசிக்கப்பட்ட, அவருக்குப் பிரியமான நபராக வாழ்ந்தார். சூழ்நிலைகள் சாதகமாக இருந்தாலும் பாதகமாக இருந்தாலும், ஆதரவானதாக இருந்தாலும், எதிரானாக இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், ஒருநபர் தேவனுக்காக வாழ்தலின் உறுதியையும் ஆசீர்வாதத்தையும் தானியேலின் புத்தகம் நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. தானியேல் 17 வயது வாலிபனாக இருந்தபோதே, பாபிலோனின் ராஜா அவனுக்கு முன்பாகப் அவனைப் பணிந்து வணங்கினான். பாபிலோன் மாகாணம் முழுமைக்கும் அவனை அதிகாரியாகவும் உயர்த்தினான்.
தானி-2: 46, 48 அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முகங்குப்புற விழுந்து, தானியேலை வணங்கி, அவனுக்குக் காணிக்கை செலுத்தவும் தூபங்காட்டவும் கட்டளையிட்டான். 48. பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனைப் பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின்மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான்.
எசேக்கியேல் பாபிலோனுக்கு வந்தபோது, தானியேல் ஏற்கெனவே 6 வருடங்களுக்குமேலாக பாபிலோனிலே அதிகாரியாக இருந்துகொண்டிருந்தான். ஆனாலும், அவருக்கு 81 வயதானபோது பாபிலோனின் ஆட்சியாளர்களால் அவர் மறக்கப்பட்டுப் போயிருந்தார். மீண்டும் மேதிய ராஜாவாகிய தரியுவின் நாட்களில் பிரதான ஆளுநராக உயர்த்தப்பட்டார். இதற்குப்பிறகு, அவர் சிங்கக்கெபிக்குள் போடப்பட்டார், பிறகு மீண்டும் உயர்த்தப்பட்டார். இப்படிப்பட்ட பலவிதமான ஏற்றத்தாழ்வின் சூழல்கள் மத்தியிலும் தேவனோடு தனக்கிருந்த ஆவிக்குரிய வாழ்வை தானியேல் சரியான நிலையில் நடத்திவந்தார். ஜெபம், ஆராதனை, தேவனைப் பிரியப்படுத்துதல் போன்றவற்றில் அவர் தொய்வடையவோ, குறைவுபடவோ, மந்தமடையவோ, அவைகளைவிட்டுத் திசைமாறவோ இல்லை.

தானியேலின் ஜெபவாழ்வு:

தானியேல் ஜெபத்திற்கு முன்னுரிமை கொடுத்து வாழ்ந்ததை அவருடைய சரித்திரத்தில் நாம் பார்க்க முடிகிறது. தேவனை அறிந்த பிண்ணனியில் தனது பெற்றோரோடு வாழ்ந்தபோது மாத்திரமல்ல, பெற்றோரைவிட்டு 13 முதல் 15 வயதிலே அந்நிய தெய்வங்களை ஆராதிக்கிற தேசத்திற்கு அகதியாகவந்து அங்கே வாழ்ந்தபோதும், அரசாங்க வேலையில் அமர்த்துவிக்கப்பட்ட போதும், தடைகளும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் வந்தபோதும் தன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கைத்தன்மையை எப்போதும் கடைப்பிடித்துவந்தார். நீதிமான்களின் பட்டியலில் தானியேல் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
தானி-1: 8 தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப் படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.
தானி-2: 11,18 பின்பு தானியேல் தன் வீட்டுக்குப்போய், தானும் தன் தோழரும் பாபிலோனின் மற்ற ஞானிகளோடேகூட அழியாதபடிக்கு இந்த மறைபொருளைக்குறித்துப் பரலோகத்தின் தேவனை நோக்கி இரக்கம் கேட்கிறதற்காக, 18. அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் தன்னுடைய தோழருக்கு இந்தக் காரியத்தை அறிவித்தான்.
தானி-6: 10-11 தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல்அறையிலே எருசலேமுக்கு நேராகப் பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன்செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான். 11. அப்பொழுது அந்த மனுஷர் கூட்டங்கூடி, தானியேல் தன் தேவனுக்கு முன்பாக ஜெபம்பண்ணி விண்ணப்பம் செய்கிறதைக் கண்டார்கள்.
தானி-9: 3, 20 நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என் முகத்தை அவருக்கு நேராக்கி, 20. இப்படி நான் சொல்லி, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக் கொண்டிருந்தேன்.
தானி-10: 2,12 அந்த நாட்களில் தானியேலாகிய நான் மூன்று வாரமுழுவதும் துக்கித்துக் கொண்டிருந்தேன். 12. அப்பொழுது அவன் என்னை நோக்கி: தானியேலே, பயப்படாதே, நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப் படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது, உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன்.

தானியேலின் ஞானம்:

தானியேலுக்குள் விசேஷித்த ஆவியும், விசேஷித்த ஞானமும் இருந்தது. சொப்பனங்களைக் குறித்தும் தரிசனங்களைக் குறித்தும் விளக்கம்கொடுக்கிற கிருபையை தேவன் அவருக்குக் கொடுத்திருந்தார்.
தானி-5: 14 உனக்குள்ளே தேவர்களின் ஆவி உண்டென்றும், வெளிச்சமும் புத்தியும் விசேஷித்த ஞானமும் உன்னிடத்தில் காணப்பட்டதென்றும் உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்.
தானி-6: 3 இப்படியிருக்கையில் தானியேல் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாயிருந்தான், தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால் அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான்.
தானியேலின் ஞானத்தைக்குறித்த சில சம்பவங்கள், தானியேலைக்குறித்த தள்ளுபடி ஆகமத்தில் காணப்படுகிறது. ஒருமுறை ராஜாவின் மனைவி, இரண்டு வேலைக்காரர்களால் தகாத விபச்சாரஉறவுக்கு முயன்றதாகப் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டபோது, தானியேல் அவர்களைத் தனித்தனியே வரவைத்து, எந்த மரத்தின்கீழ் அவள் அவ்வாறு நடக்கமுயன்றாள் என்று விசாரிக்கையில், இருவரும் மாறுபட்ட மரத்தைக் குறிப்பிட்டதால், அவள் குற்றவாளி இல்லை என்பதை வெளியரங்கப் படுத்தினார். மற்றொருமுறை, வலுசர்ப்பக்கோவிலின் பூசாரிகள், மக்கள் படைக்கும் உணவை தங்களுடைய வலுசர்ப்பமாகிய தெய்வம்தான் இரவில் புசிக்கிறது என்று பலவருடங்களாக ராஜாவையும் மக்களையும் நம்பவைத்துக் கொண்டிருந்தார்கள். அது உண்மையில்லை என்பதை, கோவில் தளத்தில் பூசாரிகளுக்குத் தெரியாமல் சாம்பலைத் தூவிவைத்து, மறுநாளில் அதில் படிந்திருந்த தடங்கள் அந்தப் பூசாரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தாருடைய கால்த்தடங்கள்தான் என்பதை அளந்துகாண்பித்து, தன்னுடைய ஞானத்தால் அவர்களுடைய பொய்யை அனைவருக்கும் வெளியரங்கமாக்கினார்.
தானி-1: 10 ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியாிலும் அவர்களைப் பத்து மடங்கு சமர்த்தராகக் கண்டான்.
தானியேலின் புத்தகம் மேசியாவின் மரணத்தைக் குறித்தும், மனிதர்களின் உயிர்த்தெழுதலைக் குறித்தும் கற்றுக்கொடுக்கிறது.
தானி-9: 26 அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்.
தானி-12: 2, 13 பூமியின் தூளிலே நித்திரை பண்ணுகிறவர் களாகிய அநேகரில் சிலா் நித்தியஜீவனுக்கும், சிலா் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். 13; நீயோவென்றால் முடிவுவருமட்டும் போயிரு, நீ இளைப்பாறிக் கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய் என்றான்.

கபிரியேலும் மிகாவேலும்:

இரண்டு துதர்கள் பெயரோடு குறிப்பிடப்படிருப்பதை நாம் இந்தப் புத்தகத்தில் பார்க்கிறோம். ஒன்று கபிரியேல், மற்றொன்று மிகாவேல். வேதாகமத்திலே மற்றபகுதியில் இந்த இரண்டுதூதர்களின் பெயர்கள் இரண்டு இடங்களில் மாத்திரம் குறிப்பிடப் பட்டிருப்பதையும் நாம் பார்க்கிறோம். கபிரியேல் செய்தியைக் கொண்டுவரும் தூதன், மிகாவேல் யுத்தம்செய்யும் தூதன்.
தானி-8: 16 அன்றியும் காபிரியேலே, இவனுக்குத் தரிசனத்தை விளங்கப்பண்ணென்று ஊலாயின் மத்தியிலே கூப்பிட்டுச் சொல்லுகிற ஒரு மனுஷ சத்தத்தையும் கேட்டேன்.
தானி-9: 21 அப்படி நான் ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கும் போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான்.
தானி-10: 13, 21 பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள்மட்டும் என்னோடு எதிர்த்து நின்றான், ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான். 21. சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை நான் உனக்குத் தெரிவிப்பேன், உங்கள் அதிபதியாகிய மிகாவேலைத் தவிர என்னோடேகூட அவர்களுக்கு விரோதமாய்ப் பலங்கொள்ளுகிற வேறொருவரும் இல்லை.
தானி-12: 1 உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான்.
லூக்-1: 19, 26 தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன், உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன். 26. ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன்.
யூதா -1: 9 பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப் பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னான்.
வெளி-12: 7 வானத்திலே யுத்தமுண்டாயிற்று, மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள், வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை.

தானியேல் புத்தகத்தின் வரிசைக்கிரமம்:

அதிகாரம்-1 (கி.மு.605): முதலாம் சிறைபிடிப்பு
அதிகாரம்-2 (கி.மு.603, 597) நெபுகாத்நேச்சாரின் 2ஆவது வருடம்
அதிகாரம்-3 (கி.மு.594ஃ593 (தோராயம்)) சிலை உருவாக்கப்பட்டது
அதிகாரம்-4 (கி.மு.570, 562) நெபுகாத்நேச்சார் பைத்தியமானது, அவனுடைய மரணம்
அதிகாரம்-7 (கி.மு.553) பெல்சாத்ஷாரின் முதலாம் வருடம்
அதிகாரம்-8 (கி.மு.551) பெல்சாத்ஷாரின் 3ஆம் வருடம்
அதிகாரம்-5 (கி.மு.539) கோரேஸ் பாபிலோனைக் கைப்பற்றுதல்
அதிகாரம்-6 (கி.மு.538-537) சிங்கக்கெபி
அதிகாரம்-9 (கி.மு.538) தரியுவின் முதலாம் வருடம்
அதிகாரம் 10-12 (கி.மு.536) தரியுவின் 3ஆம் வருடம்

தானியேல் புத்தகத்தின் தொகுப்பு

(மொத்தம் 12 அதிகாரங்கள் உள்ளன என்று பார்த்தோம்)
இந்தப் புத்தகம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
I. அதிகாரம்- 1:
எபிரேய மொழியில் எழுதப்பட்டு முகவுரையாக இருக்கிறது.
II. அதிகாரங்கள் 2 முதல் 7:
அரமாயிக் மொழியில் எழுதப்பட்டடுள்ளது (பாபிலோனின் சம்பவங்களை உள்ளடக்கியிருக்கிறது.
1. 2 மற்றும் 7ஆவது அதிகாரங்கள்: 6 உலக சாம்ராஜ்யங்களைக் குறித்த தரிசனங்களைக் காட்டுகிறது.
1. பாபிலோன் சாம்ராஜ்யம் (பொன் தலை, சிங்கம்)
2. மேதியா-பெர்சியா சாம்ராஜ்யம் (வெள்ளி மார்பு, கரடி)
3. கிரேக்க சாம்ராஜ்யம் (வெண்கலத் தொடை, சிறுத்தை)
4. ரோமசாம்ராஜ்யம் (இரும்புக் கால்கள், கெடியும் பயங்கரமுமமான மிருகம்)
5. அந்திக்கிறிஸ்துவின் சாம்ராஜ்யம் (இரும்பும் களிமண்ணுமான சேர்ந்த பாதங்கள்)
6. இயேசு கிறிஸ்துவின் ராஜ்யம் (கையால் பெயர்க்கப்படாத கல்)
2. 3 மற்றும் 6ஆவது அதிகாரங்கள்: யூதநபர்கள் (தேவனுடைய மக்கள்) சோதிக்கப்பட்டு, ஜெயமெடுத்ததைக் காட்டுகிறது.
3. 4 மற்றும் 5ஆவது அதிகாரங்கள்: பாபிலோன் ராஜாக்களின் பெருமையையும் வீழ்ச்சியையும் காட்டுகிறது.
அதிகாரம்-2 நெபுகாத் நேச்சாரின் முதல் சொப்பனம்: பெரிய சிலை
அதிகாரம்-3 அக்கினிசூளையில் போடப்படுதல்
அதிகாரம்-4 நெபுகாத் நேச்சாரின் பெருமை
அதிகாரம்-5 சுவரில் ஒரு கை எழுதுதல்
அதிகாரம்-6 சிங்கங்களின் குகை
அதிகாரம்-7 நான்கு மிருகங்களின் தரிசனம்
III. அதிகாரங்கள் 8 முதல் 12:
இந்தப் பகுதியும் எபிரேய மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. இது முதல்நபர் தன்மையில் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பகுதி இஸ்ரவேலைக் குறித்தும், வருங்கால புறஜாதி ராஜ்யங்களைக் குறித்தும் (உலகம்) தரிசனங்களையும், தீர்க்க தரிசனங்களையும் உள்ளடக்கியிருக்கிறது. அதிகாரம் 9ல் மிகச்சிறந்த மன்றாட்டு ஜெபத்தை நாம் பார்க்கிறோம். அதிகாரம் 10ல் வானமண்டலத்தில் நடக்கும் ஆவிக்குரிய யுத்தத்தைக்குறித்த சத்தியம் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.
Ψஅதிகாரம்-8 ஆட்டுக்கடா, வெள்ளாட்டுக் கடாவின் தரிசனம்
Ψஅதிகாரம்-9 மன்றாட்டு ஜெபமும். கபிரியேல் பதில் கொண்டு வருதலும் (70 வாரங்கள், தானி-9: 24-27)
Ψஅதிகாரம்-10-12 கடைசிக் காலங்களைக் குறித்து வெளிப் படுத்தப்படுதல் (வடராஜாக்கள், தென் ராஜாக்கள்)
Ψ70 வாரங்களைக் குறித்த வெளிப்பாடு.
Ψகடைசி 7 வருடங்களைக் குறித்த வெளிப்பாடு
Ψஅந்திக் கிறிஸ்துவைக் குறித்த வெளிப்பாடு
Ψமகா உபத்திவர காலத்தைக் குறித்த வெளிப்பாடு
Ψஇயேசுவின் வருகை, அவருடைய ராஜ்யம், உயிர்த் தெழுதல் குறித்த வெளிப்பாடுகள்.
தானி-4: 25,32,35 உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்த மாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள். 32. உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்த மாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் என்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும். 35. அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.

Comments