எபேசியருக்கு எழுதப்பட்ட கடிதம்


எபேசியருக்கு எழுதப்பட்ட கடிதம் குறித்த பார்வை:

I. யார் எழுதியது? எழுதிய ஆசிரியர்
II. யாருக்கு எழுதப்பட்டது? எழுதப்பட்ட மக்கள்
III. எதற்காக எழுதப்பட்டது? எழுதப்பட்டதன் நோக்கம்

எழுதிய ஆசிரியர்: பவுல்

எபே-1: 1 தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், தன்னுடைய வாழ்வில் சம்பவிக்கிற யாவுமே, தேவனுடைய சித்தத்தினாலே நடைபெறுகிறது என்பதைக்குறித்து பவுல் நிச்சயமுடையவராக இருந்தார். தானாக எதையும் செய்யவில்லை, மற்ற மனிதர்கள் அவரைச் செய்யவைக்கவில்லை. தேவனுடைய சித்தத்தின்படிதான் தான் செயல்படுகிறேன் என்று பவுல் அறிவிக்கிறார். அவர் இயேசுகிறிஸ்துவால் முதன்முதலில் சந்திக்கப்பட்டபோது ஜெபித்த வார்த்தைகளை நினைத்துப் பாருங்கள்.
அப்-9: 6 அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.
கி.பி.60-62ல் இந்தக் கடிதம் எழுதப்பட்டது. பவுல் சிறையிலிருந்தபோது இதை எழுதியிருக்கிறார் எபேசியர்-3: 1லும், 4: 1லும் தான் கட்டுண்டவனாகிருக்கிறேன் என்று பவுல் குறிப்பிட்டிருக்கிறார். அது அவர் சிறையில் இருந்ததைக் குறிப்பிடுகிறது.
எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர், மற்றும் பிலேமோன்: இந்த நான்கு கடிதங்களும் பவுல் சிறையில் இருந்த நாட்களில் ஒரே காலக்கட்டத்தில் எழுதப்பட்டவைகளாகும். இந்த 4 கடிதங்களும் சிறைக்கடிதங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
எபே-3: 1 இதினிமித்தம், பவுலாகிய நான் புறஜாதியாராயிருக்கிற உங்கள்பொருட்டுக் கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டுண்டவனாயிருக்கிறேன்.
எபே-4: 1 ஆதலால், கர்த்தர்நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில்,

எழுதப்பட்ட மக்கள்:

எபே-1: 1 எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:
இந்த வசனம் சரியாக எப்படியிருக்கிறதென்றால், எபேசுவிலே இருக்கிற பரிசுத்தவான்களுக்கும், கிறிஸ்து இயேசுவுக்குள் உண்மையுள்ளவர்களுக்கும் (faithful) எழுதுகிறதாவது. இரட்சிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் உண்மையுள்ளவர்களாக வாழ்கிற அனைவருக்கும் இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். எனவே இந்தப் கடிதத்தில் நமக்கும் பங்கு இருக்கிறது.
தான் எபேசுவில் இருந்தபோது அதிகமான போராட்டங்களைச் சந்தித்தாக 2கொரிந்தியர; 15: 32ல் எழுதியிருக்கிறார். இது பொல்லாத மனிதர்களைக் குறிக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், இது தண்டிக்கப்படுவதற்கு ஏதுவாக பவுல் உண்மையிலேயே கொடிய மிருகங்கள் மத்தியில் போடப்பட்டிருக்லாம் என்றே தோன்றுகிறது.
2கொரி-15: 32 நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேனென்று மனுஷர் வழக்கமாய்ச் சொல்லுகிறேன்.
எபேசு பட்டணம் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மககள் தொகையுடைய ஒரு பட்டணமாக இருந்தது. இது பழங்காலத்துப் புனிதப்பட்டணமாகக் கருதப்பட்டது. இங்கே டயானா (தீனாள்) என்ற தேவதை பிரபல்யமானதாக வழிபடப்பட்டது. இதனுடைய கோவில் பழங்கால உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாகும்.
கி.பி.51ல் தன்னுடைய இரண்டாவது மிஷனரிப் பயணத்தின்போது, அதாவது இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, பவுல் முதன்முதலாக எபேசுவுக்கு சென்றார்.
அப்-18: 19 அவன் எபேசுபட்டணத்துக்கு வந்தபோது, அங்கே அவர்களை விட்டு நீங்கி (பிரிஸ்கில்லா, ஆக்கில்லா), ஜெபஆலயத்தில் பிரவேசித்து, யூதருடனே சம்பாஷணைபண்ணினான்.
பவுல் எபேசுவிலே 3 வருடங்கள் தங்கியிருந்து ஊழியம்செய்தார். பவுல் எபேசில் செய்த ஊழியத்தைக்குறித்த தொகுப்பை நாம் அப்போஸ்தலர் நடபடிகள் 19ஆவது அதிகாரத்தில் பார்க்கலாம். எபேசிலே பெரிதும், அநுகூலமுமான கதவு திறக்கப்பட்டிருக்கிறது என்று 1கொரிந்தியர் 16: 8-9ல் பவுல் குறிப்பிட்டிருக்கிறார். தீமோத்தேயுவை இங்குள்ள சபைக்கு கண்காணியாக (மேய்ப்பன்) நியமித்தார்.
1தீமோ-1: 4 நான் மக்கெதோனியாவுக்குப்போகும்போது உன்னை எபேசு பட்டணத்திலிருக்க வேண்டிக்கொண்டபடியே செய்வாயாக.
அப்-20: 17, 31 மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பரை வரவழைத்தான். 31. ஆனபடியால், நான் மூன்று வருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள்.
இயேசுவின் தாய் மரியாளும், யோவானோடு தன்னுடைய கடைசி நாட்களை இந்தப் பட்டணத்திலே வாழ்ந்தார்கள். யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட விசேஷத்தில், எபேசுவிலிருந்த சபை, தன்னுடைய ஆதி (முதல்) அன்பிற்குத் திரும்பவேண்டும் என்று இயேசு வலியுறுத்தியிருத்தியதைப் பார்க்கிறோம்.
வெளி-2: 1, 4 எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: 4. ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.

எபேசியருக்கு எழுதப்பட்ட கடிதத்தின் தொகுப்பு:

புதியஏற்பாட்டின் பர்வதங்கள் என்று அழைக்கப்படத்தக்க அளவுக்கு, எபேசியருக்கு எழுதப்பட்ட கடிதம் ஒரு ஆச்சரியமான புத்தகமாக இருக்கிறது. சிலர் இந்தப் புத்தகத்தை 3 பாகங்களாகப் பிரித்திருக்கிறார்கள்.
1. அமர்தல்: அதிகாரங்கள் 2-3 (முதலாவதாக, மறுபடிபிறந்த வாழ்வின் மேன்மையை நாம் அமர்ந்திருந்து தியானித்துப் பார்த்திடவேண்டும்.) மரியாள் இயேசுவின் பாதத்தல் அமர்ந்து அவருடைய வசனங்களைக் கேட்டுக்கொண்டிருந்தால். அதை நல்ல பங்கு என்று இயேசு சுட்டிக் காட்டியிருக்கிறார். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக நாம் எப்படிப்பட்டவர்களாக இருந்தோம், ஆனால் இப்பொழுது தேவன் நமக்கு என்ன செய்திருக்கிறார் என்பதை யோசித்துப் பாருங்கள்!
எபே-2: 1-3 அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். 2. அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். 3. அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும், மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.
எபே-2: 4-7 தேவனோ (But God) இரக்கத்தில் ஐசுவயரிமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, 5. அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார், கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள் 6. கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, 7. கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.
2. நடத்தல்: அதிகாரங்கள் 4-5 (அமர்தல், நமது வாழ்க்கையில் கிறிஸ்தவர்களாக நடப்பதற்கு நம்மை ஆயத்தமாக்கும். கிறிஸ்தவ வாழ்வில், நாம் அவசரஅவசரமாக ஓடுபவர்களாக அல்ல, நிதானமாக நடக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்)
எபே-4: 1 நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து.
3. நிற்றல்: அதிகாரம்-6 (நம்முடைய கிறிஸ்தவ நடத்தலில் நாம் அனுபவங்களைப் பெற்றபிறகு, சத்துருவோடு எதிர்த்து நிற்பதற்கு நாம் ஆயத்தமாக இருப்போம்).
எபே-6: 11 நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
I. அதிகாரம்-1: 1-2 முகவுரை
II. அதிகாரங்கள் 1: 3 முதல் 3 கிறிஸ்துவுக்குள் நம்முடைய நிலை-அமர்தல்
1. நமது ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் (1: 3-14)
இந்தப் பகுதியில் 11 வசனங்களில் குறைந்தது 10 ஆவிக்குரிய ஆசீர்வாதங்களின் பட்டியலை நாம் பார்க்கிறோம்
அ. குற்றமற்றவர்களாக இருப்பதற்குத் தெரிந்துகொள்ளப்பட்டது
ஆ. சுவிகாரப் புத்திரராக்கப்பட்டது
இ. பிரியமானவருக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டது
ஈ. இயேசுவின் இரத்தத்தால் பாவமன்னிப்பு
உ. தேவனின் கிருபையால் மீட்பு
ஊ. கிறிஸ்துவுக்குள் கூட்டிச்சேர்க்கப்படுதல் (2ஆம் வருகையின்போது)
எ. அவருடைய சித்தத்தின் இரகசியத்தை அறியும் அறிவு
ஏ. அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக இருக்கும் சுதந்தரம் வாக்களிக்கப்பட்டது
ஐ. பரிசுத்த ஆவியானவரால் முத்திரையிடப்பட்டது
ஒ. நம்முடைய சரீர மீட்பாகிய சுதந்திரம் (ரோம-8: 23)
2. ஞானத்தை வெளிப்பாட்டை அளிப்பதற்கான ஜெபம் (1: 15-23)
3. நற்கிரியைகள் செய்திட உயிர்ப்பிக்கப்பட்டது (2: 1-10)
4. யூதர்களும் புறஜாதியாரும் ஒரே சபையாக இருக்கிறோம் (2: 11 முதல் 3: 13)
5. உள்ளான மனிதனில் வல்லமையாகப் பெலப்படுத்தப்பட ஜெபம் (3: 14-21)
எபே-3: 20-21 நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, 21. சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
III. அதிகாரங்கள் 4 முதல் 6: 9 வரை: கிறிஸ்தவர்களாக நாம் வாழவேண்டிய முறை: நடத்தல்
1. எப்படி நடப்பது (4: 1-6)
எபே-4: 4-6 உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரரீரமும், ஒரே ஆவியும் உண்டு, 5. ஒரே கா;த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், 6. எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு, அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.
2. சபையின் 5 வகை ஊழியங்கள் (4: 7-13)
சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காக பரிசுத்தவான்களை உருவாக்குவதே ஊழியங்களின் நோக்கமாகும்
3. சத்தியத்தை அன்போடு பேசவேண்டும் (4: 14-16)
4. அவிசுவாசிகளைப்போல நடக்காமல் அன்போடு நடந்துகொள்ளவேண்டும் (4: 17-24)- புதிய மனிதனுக்குரிய வாழ்வு
5. நடத்தை விதிமுறைகள் (4: 25-32)
6. தேவனைப் பின்பற்றுதல் (5: 1-16)
அ. அன்பிலே நடத்தல் (5: 1-7)
ஆ. ஒளியிலே நடத்தல் (5: 8-14)
இ. நேர்த்தியாக நடத்தல் (5: 15-21)
ஈ. மனைவிக்குரிய ஆலோசனை (5: 22-24)
உ. கணவனுக்குரிய ஆலோசனை (5: 25-32)
ஊ. ஒரே வார்த்தையில் (5: 33): அன்பு
எ. பிள்ளைகளுக்குரிய ஆலோசனை (6: 1-3)
ஏ. பெற்றோருக்குரிய ஆலோசனை (6: 4)
ஐ. வேலைக்காரர்கள், முதலாளிகளுக்குரிய ஆலோசனை (6: 5-9)
IV. அதிகாரம் 6: 10-20: நிற்றல்
1. கர்த்தரிலே பலப்பட்டிருங்கள் (6: 10)
2. தேவனுடைய சகல ஆயுதங்களையும் தரித்து நில்லுங்கள் (6: 11-17)
ஆயுதங்களுக்கான காரணம் (6: 11-13)
ஆயுதங்களின் பட்டியல் (6: 14-17)
3. ஆவியிலே ஜெபம்பண்ணி விழித்திருங்கள் (6: 18)
V. அதிகாரம் 6: 21-24 முடிவுரை

எபேசியருக்கு எழுதப்பட்ட கடிதத்தில்:

அ. இரட்சிப்பு, பரிசுத்தம், ஆவிக்குரிய யுத்தம், மற்றும் இயேசுகிறிஸ்துவைக் குறித்த சிறந்த பாடங்கள் உள்ளன.
ஆ. இரண்டு சிறந்த ஜெபங்கள் உள்ளன (எபே-1: 15-23, எபே-3: 14-21)
இ. அன்பைக்குறித்த முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது (இதிலே அன்பைக்குறித்து 19 குறிப்பு வசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன). அன்பு என்ற வார்த்தை முதலாவதாக எபேசியர் 1: 4ல் ஆரம்பித்து ஒவ்வொரு அதிகாரத்திலும் அது குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.
எபே-6: 24 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்.

Comments