எஸ்றா


முகவுரை:

எஸ்றா, நெகேமியா, மற்றும் எஸ்தரின் புத்தகங்கள் சிறையிருப்பிற்குப் பிந்திய புத்தகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. யூதா தேசம் நெபுகாத்நேச்சாரால் பாபிலோனுக்குள் சிறைபிடிக்கப்பட்டுப் போவதோடு நாளாகமம் நிறைவடைகிறது.
2நாள்-36: 17-20 ஆதலால் அவர் அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரப்பண்ணினார், அவன் அவர்கள் வாலிபரை அவர்களுடைய பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தினால் கொன்று, வாலிபரையும் கன்னியாஸ்திரிகளையும் முதியோரையும் விருத்தாப்பியரையும் தப்பவிடவில்லை, எல்லாரையும் தேவன் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார். 18. அவன் தேவனுடைய ஆலயத்தின் பெரிதும் சிறிதுமான பணிமுட்டுகள் அனைத்தையும், கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களும் ராஜாவுக்கும் அவன் பிரபுக்களுக்கும் இருந்த பொக்கிஷங்களுமாகிய அனைத்தையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். 19. அவர்கள் தேவனுடைய ஆலயத்தைத் தீக்கொளுத்தி, எருசலேமின் அலங்கத்தை இடித்து, அதின் மாளிகைகளையெல்லாம் அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த திவ்வியமான பணி முட்டுகளையெல்லாம் அழித்தார்கள். 20. பட்டயத்திற்குத் தப்பின மீதியானவர்களை அவன் பாபிலோனுக்குச் சிறை பிடித்துப்போனான், பெர்சியா ராஜ்யபாரம் ஸ்தாபிக்கப்படுமட்டும் அங்கே அவர்கள் அவனுக்கும் அவன் குமாரருக்கும் அடிமைகளாய் இருந்தார்கள்.
ராஜாவும், ஆசாரியர்களும், ஜனங்களும் தேவனுடைய வார்த்தைக்குச் செவிகொடுத்து, கீழ்படியத் தவறியதால் விடுதலையோடு வாழ்ந்த மக்கள் சத்துருவினால் அடிமைகளாக்கப் பட்டார்கள்.
2நாள்-36: 11-12,14,16 சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டு, 12. தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான், அவன் கர்த்தருடைய வாக்கை உரைத்த எரேமியா என்கிற தீர்க்கதரிசிக்குமுன்பாகத் தன்னைத் தாழ்த்தவில்லை. 14. ஆசாரியரில் பிரதானமானவார்கள் யாவரும் ஜனங்களும் கூடிப் புறஜாதிகளுடைய சகல அருவருப்புகளின்படியும் மிகவும் துரோகம்பண்ணி, கர்த்தர் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணின அவருடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள். 16. ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது, சகாயமில்லாமல் போயிற்று.
சிறையிருப்பு வரும் என்பதைக்குறித்தும், அது 70 ஆண்டுகள் நீடிக்கும் என்பதைக்குறித்தும் எரேமியாவின்மூலம் தேவன் பலமுறை முன்னறிவித்து யூதா ஜனத்தை எச்சரித்திருந்தார். சிறையிருப்பிற்கு முன்பாகவும், சிறையிருப்பின்போதும் எரேமியாவும் தானியேலும் வாழ்ந்தார்கள். எனவே எரேமியாவின் புத்தகத்தை நாளாகமத்தைத் தொடர்ந்து அடுத்ததாக வைத்துப் பார்க்கப்படுதல் நல்லது.
எரே-25: 11-13 இந்தத் தேசமெல்லாம் வனாந்தரமும் பாழுமாகும், இந்த ஜாதிகளோ, எழுபது வருஷமாகப் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள். 12. எழுபது வருஷம் நிறைவேறினபின்பு, நான் பாபிலோன் ராஜாவினிடத்திலும், அந்த ஜாதியினிடத்திலும், கல்தேயருடைய தேசத்தினிடத்திலும், அவர்களுடைய அக்கிரமத்தை விசாரித்து, அதை நித்திய பாழிடமாக்கி, 13. நான் அந்தத் தேசத்துக்கு விரோதமாய் உரைத்த என் வார்த்தைகளையெல்லாம், எரேமியா சகல ஜாதிகளுக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொன்னதும், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதுமான யாவையும் அதின்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரே-29: 10 பாபிலோனிலே எழுபது வருஷம் நிறைவேறினபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப் பண்ணும்படிக்கு உங்கள் மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சிறையிருப்பின் நாட்களில் பாபிலோனில் இருந்து உபவாசித்துக் கொண்டிருந்தபோது எரேமியாவின் இந்தப் பகுதியைத்தான் தானியேல் வாசித்துக் கொண்டிருந்தார்.
தானி-9: 1-2 கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே, 2. தானியேலாகிய நான் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபது வருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்துகொண்டேன்.
எஸ்றாவின் புத்தகமானது 70 வருட சிறையிருப்பிற்குப்பின், தம்முடைய தீர்க்கதரிசியாகிய எரேமியாவைக்கொண்டு தேவன் முன்னறிவித்திருந்தபடியே, எருசலேமின் தேவாலயத்தைக் கட்டுவதற்காக சிறையிருப்பிலிருந்து யூதர்கள் திரும்பிவந்தபிறகு நடைபெற்றவைகளை விவரிக்கிறது. தாம் சொன்னதை நிறைவேற்றுகிறவர்! நம்முடைய தேவன், அவர் சொல்தவறாதவர்!

சிறையிருப்பிலிருந்து திரும்புதலின் சிறப்பு:

கோரேஸ் ராஜா அரசாண்ட முதலாம் வருஷத்தில் இது நடைபெற்றது என்று பார்க்கிறோம். அதாவது, பாபிலோனின் சாம்ராஜ்யம் முடிவடைந்து மேதியா-பெர்சியா சாம்ராஜ்யத்தின் நாட்களில் இது நடைபெற்றது.
எஸ்றா-1: 1-3 எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே அவன்: 2. பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். 3. அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவனோடே அவனுடைய தேவன் இருப்பாராக, அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன், எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே தேவன்.

எஸ்றா:

7ஆவது அதிகாரம் 28ஆம் வசனம் முதல் 9ஆவது அதிகாரம் 15ஆம் வசனம் வரையில் எனக்கு, என்னுடைய, என், நான் என்று எஸ்றா தன்னை நேரடியாகக் கூறுவதால், இந்தப் புத்தகத்தை எஸ்றாதான் எழுதியிருக்கவேண்டும் என்று கருதுகிறோம். நாளாகமமும், எஸ்றாவின் புத்தகமும் எழுதப்பட்டிருக்கிற நடையையும் விதத்தையும் பார்க்கும்போது. இந்த இரண்டு புத்தகங்களும் எஸ்றாவால்தான் எழுதப் பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. யூதர்கள் இரண்டு குழுக்களாக எருசலேமிற்குத் திரும்பியதைக்குறித்து எஸ்றா எழுதியிருக்கிறார்.
முதலாவதாக, கி.மு. 538ல் கோரேஸின் கட்டளையில் ஆரம்பித்தது கி.மு.537ல் 7337 வேலையாட்கள், 200 பாடகர்கள், 736 குதிரைகள், 245 கோவேறு கழுதைகள், 435 ஒட்டகங்கள் மற்றும் 6720 கழுதைகளுடன் 42,360 யூதர்கள் எருசலேமிற்குச் சென்றார்கள். கி.மு.536ல் தேவாலயத்தைச் கட்டும் செயல் ஆரம்பிக்கப்பட்டது, ஆனாலும் அர்தசஷ்டாவின் கட்டளையால் அது நிறுத்தப்பட்டது. இந்த நாட்களில் கி.மு.520ல் ஆகாய் மற்றும் சகரியா தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்து வேலைசெய்பவர்களைத் திடப்படுத்தினார்கள். ஆகாய் மற்றும் சகரியாவின் புத்தகங்கள் எஸ்றாவின் புத்தகத்திற்கு மத்தியில் வரவேண்டும்.
எஸ்றா-5: 1 அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
கி.மு.458ல் இரண்டாவதாக வந்த மக்கள் கூட்டத்துடன் எஸ்றா எருசலேமிற்கு வந்தார். எஸ்றாவின் புத்தகமும் நெகேமியாவின் புத்தகமும் மிகவும் ஆச்சரியமான புத்தகங்களாக இருக்கின்றன. ஆதியாகமத்திற்கு அடுத்து, கர்த்தர் என்பதைவிட தேவன் என்ற பதம், அதிகமாக முக்கியப் படுத்தப்பட்டுள்ளதை இந்த இரண்டு புத்தகங்களிலும் நாம் பார்கிறோம். தேவன் என்பது தகப்பனின் தன்மையையும், கர்த்தர் என்பது ஆளுகையின் தன்மையயையும் பிரதிபலிக்கிறது. எஸ்றாவில் தேவன் என்பது 97 முறையும், கர்த்தர் என்பது 38 முறையும், நெகேமியாவில் கர்த்தர் என்பது 18 முறையும், தேவன் என்பதோ 74 முறையும் வருவதை நாம் பார்க்கிறோம். ஆனால் எஸ்தரின் புத்தகம் கர்த்தர் அல்லது தேவன் என்பதை ஒருமுறைகூடப் பயன்படுத்தவில்லை.

எஸ்றாவின் தொகுப்பு:

(மொத்தம் 10 அதிகாரங்கள் உள்ளன, இரண்டு பிரிவாக தொகுக்கலாம்)
I. அதிகாரங்கள் 1 முதல் 6: முதல் குழுவின் திரும்பிவருதல்
1. கோரேஸ் ராஜாவின் கட்டளை (1)
2. திரும்பி வந்தவர்களின் பெயர்ப் பட்டியல் (2)
3. ஆவிக்குரிய ஊழியம் (3)
4. ஆலயத்தின் வேலை நிறுத்தப்படுதல் (4)
5. புதுப்பிக்கப் படுதலுக்குத் திரும்புதல் (5)
6. தரியு ராஜாவின் கட்டளை (6)
எஸ்றா-6: 6-9 அப்பொழுது தரியுராஜா எழுதியனுப்பினதாவது: இப்பொழுதும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதியாகிய தத்னாயும் சேத்தார் பொஸ்னாயுமாகிய நீங்களும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான உங்கள் வகையரா யாவரும் அவ்விடத்தைவிட்டு விலகியிருங்கள். 7. தேவனுடைய ஆலயத்தின் வேலையை அவர்கள் செய்யட்டும், யூதருடைய அதிபதியும், யூதரின் மூப்பரும், தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே கட்டக்கடவார்கள். 8. தேவனுடைய ஆலயத்தை யூதரின் மூப்பர் கட்டும் விஷயத்தில் நீங்கள் அவர்களுக்குச் செய்யத்தக்கதாய், நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால், அந்த மனிதருக்குத் தடை உண்டாகாதபடிக்கு, நதிக்கு அப்புறத்தில் வாங்கப்படும் பகுதியாகிய ராஜாவின் திரவியத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் செல்லும் செலவு கொடுக்கவேண்டும். 9. பரலோகத்தின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளையிடத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சரசம், எண்ணெய் முதலானவை தினந்தினம் அவர்கள் சொற்படி தாழ்ச்சியில்லாமல் கொடுக்கப்படக்கடவது.
II. அதிகாரங்கள் 7 முதல் 10: இரண்டாவது குழுவின் திரும்பிவருதல்
1. அர்தசஷ்டா ராஜாவின் கட்டளை (7)
2. எருசலேமிற்குப் பயணம் (8)
3. புறஜாதிகளுடன் சம்பந்தங்கலத்தல் (9)
4. தவறான திருமணபந்தங்களை சீர்படுத்துதல் (10)
எஸ்றா-7: 10 கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப் படுத்தியிருந்தான்.
தேவன் தம்முடைய ஜனங்களுக்கு உண்மையாயிருப் பதையும், எதிர்ப்புகள் மத்தியில் புறஜாதி ராஜாக்களையும் பயன்படுத்தி தம்முடைய வேலையை நடத்துவதற்கும், முடிப்பதற்கும் தேவன் துணைசெய்வதையும் இந்தப் புத்தகத்திலே நாம் பார்க்கிறோம்.

Comments