பிலேமோனுக்கு எழுதப்பட்ட கடிதம்
பிலேமோனுக்கு எழுதப்பட்ட கடிதம் குறித்த பார்வை:
I. யார் எழுதியது? எழுதிய ஆசிரியர்
II. யாருக்கு எழுதப்பட்டது? எழுதப்பட்ட நபர்
III. எதற்காக எழுதப்பட்டது? எழுதப்பட்டதன் நோக்கம்
எழுதிய ஆசிரியர்: பவுல், தீமோத்தேயு
↻பிலே-1: 1 கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டப்பட்டவனாயிருக்கிற பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும் எழுதுகிறதாவது.
↻பிலே 1: 8 பவுலாகிய நான் முதிர்வயதுள்ளவனாகவும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் இப்பொழுது கட்டப்பட்டவனாகவும் இருக்கிறபடியால்,
↻பிலே 1: 19 பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன்.
கட்டப்பட்டவனாகிய பவுல் என்பது, அவர் சிறையிலிருந்து இதை எழுதியிருக்கிறார் என்பதையும், தீமோத்தேயுவும் என்பது தீமோத்தேயுவும் பவுலோடு சிறையிலிருந்தார் என்பதையும் காட்டுகிறது. பவுலால் கொலோசேயருக்கு கடிதம் எழுதப்பட்ட அதேகாலத்தில்தான், இந்தக் கடிதமும் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. கொலோசேயருக்கு எழுதிய கடிதத்தை, பவுல் பிலேமோன் மூலமாகத்தான் கொடுத்தனுப்பியிருக்கிறார்.
எழுதப்பட்ட நபர்:
∗பிலே-1: 1-2 எங்களுக்குப் பிரியமுள்ளவனும் உடன்வேலையாளுமாயிருக்கிற பிலேமோனுக்கும், 2. பிரியமுள்ள அப்பியாளுக்கும், எங்கள் உடன் போர்ச்சேவகனாகிய அர்க்கிப்புவுக்கும், உம்முடைய வீட்டிலே கூடிவருகிற சபைக்கும் எழுதுகிறதாவது.
பிலேமோன்: கொலோசேய பட்டணத்ததைச் சேர்ந்தவர். இவருடைய வீட்டில் ஒரு சபைகூடுதல் நடைபெற்றது. தனக்குக்கீழ் வேலையாட்களை வைத்து வாழ்ந்த ஒரு செல்வந்தராவார். இவருடைய வீடு பெரியதாக இருந்தால் சபை நடத்தப்படுவதற்கு இடம்கொடுத்திருந்தார். ஆதிசபையின் ஆரம்பக் காலங்களில் வீடுகளில் சபைகூடுதல் என்பது வழக்கமான ஒன்றாக இருந்தது.
அப்பியாள்: பிலேமோனுடைய மனைவியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அர்க்கிப்பு: பிலேமோனுடைய மகனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எழுதப்பட்டதன் நோக்கம்:
பிலேமோனிடமிருந்து தப்பி ஓடியிருந்து, இரட்சிப்புக்குள் வந்திருந்த ஒநேசிமு என்று அடிமைக்காக குறிப்பாக இந்தக் கடிதத்தை பவுல் எழுதியுள்ளார். ஒரு அடிமை தப்பி ஓடிவிட்டால் அவனுக்குக் மரணதண்டனைதாக் கொடுக்கப்படும். பவுல் ரோமாபுரியில் சிறையிலிருந்தபோது ஒநேசிமுவைச் சந்தித்து இரட்சிப்பிற்குள் வழிநடத்தியிருந்தார். மரணதண்டனைக்குரியவனாகக் கருதப்பட்ட ஒநேசிமுவை மன்னித்து, மீண்டும் சேர்த்துக்கொள்ளுமாறு பவுல் பிலேமோனிடம் வேண்டுதல் செய்தார். தேவன், நம்மை எவ்வாறு மன்னித்து ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதை பிலேமோனுக்குப் பவுல் நினைப்பூட்டுகிறார். மன்னிப்பது மாத்திரமல், அவனுக்கு இரக்கம் காட்டுமாறும் கேட்டுக்கொள்கிறார்.
பிலே-1: 8-17 ஆகையால், பவுலாகிய நான் முதிர்வயதுள்ளவனாகவும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் இப்பொழுது கட்டப்பட்டவனாகவும் இருக்கிறபடியால், 9. நீர் செய்யத்தக்கதை உமக்குக் கட்டளையிடும்படிக்குக் கிறிஸ்துவுக்குள் நான் துணியத்தக்கவனாயிருந்தாலும், அப்படிச்செய்யாமல், அன்பினிமித்தம் மன்றாடுகிறேன். 10. என்னவென்றால், கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன். 11. முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன், இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன். 12. அவனை நான் உம்மிடத்திற்கு அனுப்புகிறேன், என் உள்ளம்போலிருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும். 13. சுவிசேஷத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியஞ்செய்யும்படி உமக்குப் பதிலாக அவனை என்னிடத்தில் வைத்துக்கொள்ள வேண்டுமென்றிருந்தேன். 14. ஆனாலும் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினாலல்ல, மனப்பூர்வமாய்ச் செய்யத்தக்கதாக, நான் உம்முடைய சம்மதியில்லாமல் ஒன்றும்செய்ய எனக்கு மனதில்லை. 15. அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாயிருக்கும்படிக்கும், இனிமேல் அவன் அடிமையானவனாகவல்ல, அடிமையானவனுக்கு மேலானவனாகவும், பிரியமுள்ள சகோதரனாகவுமிருக்கும்படிக்கும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனானாக்கும். 16. எனக்கு அவன் பிரியமான சகோதரனானால், உமக்குச் சரீரத்தின்படியேயும் கர்த்தருக்குள்ளும் எவ்வளவு பிரியமுள்ளவனாயிருக்கவேண்டும்! 17. ஆதலால், நீர் என்னை உம்மோடே ஐக்கியமானவனென்று எண்ணினால், என்னை ஏற்றுக்கொள்வதுபோல அவனையும் ஏற்றுக்கொள்ளும்.
பிலேமோனுக்கு எழுதப்பட்ட கடிதத்தின் தொகுப்பு:
இந்தப் புத்தகம், அடிமைத்தனத்தையும்-அன்பையும், மன்னிப்பையும்-மகிழ்ச்சியையும் குறித்ததாக இருக்கிறது. இது கி.பி.61ல் எழுதப்பட்டிருக்கவேண்டும்.
I. அதிகாரம்-1: 1-3 முகவுரை
II. அதிகாரம்-1: 4-7 பிலேமோனுக்காக பவுலின் நன்றி
1. இயேசுவின்மீதும் பரிசுத்தவான்கள்மீதும் அவருக்கிருந்த அன்பு
2. இயேசுவின்மீதும் பரிசுத்தவான்கள்மீதும் அவருக்கிருந்த விசுவாசம்
∗பிலே-1: 4-5 கர்த்தராகிய இயேசுவினிடத்திலும், எல்லாப் பரிசுத்தவான்களிடத்திலுமுள்ள உம்முடைய அன்பையும் உம்முடைய விசுவாசத்தையும் நான் கேள்விப்பட்டு, 5. என் ஜெபங்களில் உம்மை நினைத்து, எப்பொழுதும் என் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செய்கிறேன்.
3. பரிசுத்தவான்களுக்குப் பகிர்நதுகொடுக்கும் சுபாவம்
∗பிலே-1: 7 சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே இளைப்பாறினபடியால், உம்முடைய அன்பினாலே மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறோம்.
III. அதிகாரம்-1: 8-22 ஒநேசிமுக்காக பவுலின் மன்றாடுதல்:
1. கட்டளையிடும் தகுதி எனக்கிருந்தும், நான் அப்படிச்செய்யவில்லை. (வயதில் முதிர்ந்தவன், தேவனுடைய ஊழியன்)
2. அன்பின் நிமித்தம் மன்றாடுகிறேன். (அன்பு ஆளுகைசெய்யாது)
3. என் உள்ளம்போலிருக்கும் ஒநேசிமுவை ஏற்றுக்கொள்ளும் (இரட்சிக்கப்பட்டவன்)
4. அவனை என்னோடு வைத்துக்கொள்ளவேண்டும் என்று நான் விரும்பினாலும், உம்முடைய சம்மதமில்லாமல் நான் அப்படிச்செய்ய விரும்பவில்லை.
5. அவன் பிரியமுள்ள சகோதரன் (அடிமையானாலும், இரட்சிப்பு சகோதரன் என்ற உறவை உருவாக்கிறது)
6. என்னை ஏற்றுக்கொள்வதுபோல, அவனை ஏற்றுக்கொள்ளும் (1: 17): ஊழியருக்குரிய அதே மரியாதையும், அன்பும்.
7. அவனுடைய கடனை என் கணக்கில் வைத்துக்கொள்ளும் (1: 18): நம்முடைய பாவத்திற்குரிய கடனை இயேசு தன்மேல் ஏற்றுக்கொண்ட அடையாளம்.
8. பிலேமோனைக்குறித்த நிச்சயமும், எதிர்பார்ப்பும்
†பிலே-1: 20-21 ஆம், சகோதரனே, கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜனமுண்டாகட்டும், கர்த்தருக்குள் என் உள்ளத்தை இளைப்பாறப்பண்ணும். 21. நான் சொல்லுகிறதிலும் அதிகமாய்ச் செய்வீரென்று அறிந்து, இதற்கு நீர் இணங்குவீரென்று நிச்சயித்து, உமக்கு எழுதியிருக்கிறேன்,
IV. அதிகாரம்-1: 23-25 முடிவுரை
•பிலே-1: 25 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனே கூட இருப்பதாக. ஆமென்.
Comments
Post a Comment