மத்தேயு


முகவுரை:

இயேசுவின் வாழ்க்கை, ஊழியம், போதனைகள், பாடுகள், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைக் குறித்து 4 சுவிசேஷங்களும் விவரிக்கின்றன. ஆனாலும் ஒவ்வொரு சுவிசேஷத்திலும் இயேவைக்குறித்த வெவ்வேறுபட்ட கண்ணோட்டங்கள் முக்கியப் படுத்தப் பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம். ஒவ்வொரு சுவிசேஷத்திலும் 4 காரியங்களை நாம் சுருக்கமாகப் பார்க்கவிருக்கிறோம்.
I. எழுதிய ஆசிரியர்
II. எழுதப்பட்ட மக்கள்
III. இயேசுவைக் குறித்த பார்வை
IV. எழுதப்பட்டுள்ள செய்தி

1. எழுதிய ஆசிரியர்: மத்தேயு

இவர் இயேசு கிறிஸ்துவால் தெரிந்தெடுக்கப் பட்டிருந்த 12 அப்போஸ்தலர்களில் ஒருவராவார். இவர் கப்பர்நகூமிலே ரோமருக்காக வரிவசூலிக்கும் வேலைசெய்தவர் (ஆயக்காரன்). பொதுவாக வரிவசூலிப்பவர்களை யூதர்கள் அதிகமாக நிந்திப்பார்கள். காரணம் அவர்கள் அநியாயமாக வரிவசூலித்து தங்களைக் கஷ்டப் படுத்துகிறார்கள் என்ற எண்ணம் யூதர்கள்களுக்கு இருந்தது. இந்த வரிவசூலிப்பவர்கள் ரோமஅரசுக்கு குறிப்பிட்ட வசூலை கொடுத்தாக வேண்டும். ஆனாலும் அவர்களுக்குப் போதுமான சம்பளம் கொடுக்கப் படமாட்டாது. எனவே வரிவசூலித்தலில் தங்களுக்குத் தேவையானதை எவ்வளவு வேண்டுமானாலும் அதிகமாக வைத்து வசூலித்துக்கொள்ள ரோமஅரசாங்கத்தால் இவர்கள் அங்கீகரிக்கப் பட்டிருந்தார்கள். மக்களால் வெறுக்கப்பட்டவராக இருந்த மத்தேயுவை இயேசு தன்னைப் பின்பற்றுமாறு அழைத்தார்.
மத்-9: 9 இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப் போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார், அவன் எழுந்து, அவருக்குப் பின்சென்றான்.
இதை மத்தேயுதான் எழுதினாரா, மத்தேயுதான் முதலாவது எழுதப்பட்ட சுவிசேஷமா, மத்தேயு எபிரேய மொழியில்தான் எழுதப்பட்டதா என்பவைகளைக் குறித்து பல்வேறுபட்ட கருத்துவேற்றுமைகள் இருக்கின்றன. இது கி.பி. 50களில் எழுதப் பட்டிருக்க வேண்டும் என்று பலர் கருதுகிறார்கள். பரிசுத்த ஆவியானவர்தான் எல்லாவற்றிற்கும் ஆசிரியர் என்பதை நாம் மறக்கவில்லை. வேதப்புதத்கங்களை மனிதர்கள் ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதினார்கள் என்பதையே நாம் விவரிக்கிறோம். எதுவாக இருந்தாலும் சரி, மத்தேயு சுவிசேஷத்தில் யூதவாசனை அதிகமாக இருப்பதை நாம் பார்க்கமுடிகிறது. மத்தேயு எத்தியோப்பாவிலே ஒரு இரத்தசாட்சியாக மரித்தார் என்று சில பாரம்பரியங்கள் சொல்கின்றன. சிலர் அப்படியில்லை என்றும் சொல்கிறார்கள். அவர் எப்படி மரித்தார் என்பதற்கான ஆதாரம் நமக்கு இல்லை.

2. எழுதப்பட்ட மக்கள்: யூதர்கள்

இஸ்ரவேலருக்குரிய வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக இயேசு வலியுறுத்தப்படுகிறார். பழைய ஏற்பாட்டிலிருந்து 61 வசனக்குறிப்புகளிலும், மொத்தத்தில் இதிலே சுமார் 130 பழைய ஏற்பாட்டு ஆதாரங்கள் சுட்டிக் காட்டப் பட்டுள்ளன. யூதர்கள் பழையஏற்பாட்டை ஏற்றுக் கொள்பவர்கள் ஆதலால், அதிலிருந்து அதிகமான கோடிட்டுக் காட்டுதலை மத்தேயு பயன்படுத்தி இருக்கிறார். 4 சுவிசேஷங்களில் மாற்கு 31 முறையும், லூக்கா 26 முறையும், யோவான் 16 முறையும் பழைய ஏற்பாட்டைச் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். மத்தேயுதான் பழைய ஏற்பாட்டை அதிகமாகப் பயன்படுத்தி இருக்கிறார். மத்தேயு சுவிசேஷத்தின் முக்கிய வசனமாக இருப்பது மத்தேயு-5: 17 ஆகும். நியாயப் பிரமாணத்தை ஆனாலும் தீர்க்க தரிசனங்களை ஆனாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள், அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.

3. இயேசுவைக்குறித்த பார்வை:

"இயேசு ராஜாதி ராஜா" யூதர்களுக்கு மாத்திரமல்ல, நமக்கும், சபைக்கும் அவரே ராஜாவாக இருக்கிறார். ஒருநாள் அவர் பூமியனைத்திற்கும் ராஜாவாக மீண்டும் வரவிருக்கிறார். அவர் நம்முடைய ராஜாவாக இருப்பாரெனில், நாம் அவருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்திடவேண்டும். அவரைக்குறித்தும், அவருடைய ராஜ்யத்தைக் குறித்தும் நாம் பிறருக்கு அறிவித்திடவேண்டும்.

4. எழுதப்பட்டுள்ள செய்தி: பரலோக ராஜ்யம் சமீபமாயிருக்கிறது

400 வருடங்களுக்கு மேலாக தேவசப்தம் கேட்காதவர்களாக வாழ்ந்துகொண்டிருந்த யூதமக்கள் தங்களுக்கு ஒரு ராஜா வருவார், அவர் வந்து ரோமஅரசாங்கத்தின் பிடியிலிருந்து தங்களை விடுவிப்பார் என்று நம்பிக் காத்திருந்தார்கள். அப்பொழுது, இதோ நீங்கள் நம்பி எதிர்பார்த்திருந்த ராஜா வந்திருக்கிறார் என்பதை மத்தேயு அவர்களுக்குச் சொன்னார். அதற்குரிய ஆதாரம் அவருடைய உயிர்த்தெழுதலில் காட்டப்பட்டுள்ளது.

மத்தேயு சுவிசேஷத்தின் தொகுப்பு:

இதிலே 3 முக்கிய உரைகள் (பாடங்கள்) இருக்கின்றன.
1. மலைப்பிரசங்கம் (5 முதல் 7 அதிகாரங்கள்)
இது கிறிஸ்தவ வாழ்க்கை முறைக்கான சிறந்த போதனையாகும்
2. ராஜ்யத்தின் உவமைகள் (அதிகாரம்-13)
இது தேவனுடைய ராஜ்யத்தின் தன்மையைக்குறித்த வெளிச்சத்தைக் கொடுக்கிறது
3. ஒலிவமலை உரை (அதிகாரங்கள் 24-25)
இது கிறிஸ்துவின் இண்டாம் வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறது.
மொத்தம் 28 அதிகாரங்கள் உள்ளன. (7 பகுதிகளாக நாம் பிரிக்கலாம்):
I. அதிகாரங்கள் 1-2: இயேசுவின் பிறப்பைக்குறித்த விவரித்தல்:
1. ஆபிரகாம் முதல் கிறிஸ்துவரை வம்ச அட்டவணை (1: 1-17)
2. இயேசுவின் பிறப்பைக்குறித்த அறிவிப்பு (1: 18-25)
3. ஞானிகள் இயேசுவைப் பார்க்கவருதல் (2: 1-12)
4. எகிப்திற்குச் செல்லுதல் (2: 13-23)
II. அதிகாரங்கள் 3 முதல் 7: இயேசுவின் ஊழியங்கள்:
1. ஊழியத்தின் ஆரம்பம் (3-4)
அ. இயேசு ஞானஸ்நானம் எடுத்தல் (3)
ஆ. இயேசு சாத்தானால் சோதிக்கப்படுதல் (4: 1-11)
இ. இயேசுவின் பிரசங்கம் மற்றும் சுகமாக்கும் ஊழியம் (4: 12-25)
2. மலைப்பிரசங்கம் (5-7)
முக்கிய வசனங்கள்:
மத்-5: 20 வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்-6: 33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.
மத்-7: 21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானே அல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
III. அதிகாரங்கள் 8 முதல் 11: 1 வரை: பணிவிடைக்குரிய அழைப்பு
1. இயற்கையின் எஜமானன், போதனை (8 முதல் 9: 35)
2. ஊழியம் மற்றும் பணிவிடை செய்தலைக் குறித்த உரை (9: 36 முதல் 10: 42)
IV. அதிகாரங்கள் 11: 2 முதல் 13: 53 வரை இயேசுவின் உவமைகள்
1. பரிசேயர்களுக்கு (12)
2. பரலோக ராஜ்யத்தின் 7 உவமைகள் (13)
V. அதிகாரங்கள் 13: 54 முதல் 19: 1 வரை: பாதிப்புகளும் மன்னித்தலும்
1. இயேசுவை அற்பமாகப் பார்த்தல் (13: 54-58)
2. 5000 பேர் போஷிக்கப்படுதல் (14: 1-21)
3. இயேசு தண்ணீரின்மேல் நடத்தல் (14: 22-36)
4. இடறல் மற்றும் மன்னிப்பைக்குறித்த போதனை (17: 1 முதல் 18: 35)
VI. அதிகாரங்கள் 19: 2 முதல் 26: 2 கடைசிக் காலத்தைக் குறித்த சத்தியங்கள்:
1. விவாகமும் விவாகரத்தும் (19: 1-10)
2. சிறுபிள்ளைகளை ஆசீர்வதித்தல் (19: 13-15)
3. ஐசுவரியத்தின் ஆபத்து (19: 16-30)
4. பொருளாசையின் ஆபத்து (20: 1-16)
5. அத்திமரத்தின் உவமை (21: 13-22)
6. கடைசிக் காலத்தைக் குறித்த உரை (23 முதல் 25)
மத்தேயு 24ஆம் அதிகாரம் கடைசிக் காலத்தைக் குறித்த சத்தியத்தின் முதுகெலும்பு என்று அழைக்கப்படுகிறது. இயேசுவின் 2ஆம் வருகையைக் குறித்தும், உபத்திரவ காலத்தைக்குறித்தும், பரிசுத்தவான்களின் எடுத்துக் கொள்ளப் படுதலைக் குறித்தும் விபரமான குறிப்புகள் இதிலே கொடுக்கப் பட்டுள்ளன.
VII. அதிகாரங்கள் 26 முதல் 28 இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும்:
1. பஸ்கா உணவு (26: 17-35)
2. கெத்சமெனே தோட்டம் (26: 36-56)
3. யூதர்களுக்கு முன் விசாரிக்கப்படுதல் (26: 57-75)
4. பிலாத்துவுக்கு முன் (27: 1-26)
5. சிலுவையில் அறையப்படுதல் (27: 27-56)
6. அடக்கம் (27: 57-66)
7. உயிர்ப்பு (28: 1-15)
8. இறுதிக்கட்டளை (28: 16-20)

Comments

Post a Comment