தேவனைத் தேடுவது ஆசீர்வாதத்திற்காகவா அன்பிற்காகாவா?
எபே-1: 3 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம், அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.
ஏசா-55: 6 கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள், அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.
நாம் எதற்காக சபைக்கு வருகிறோம், ஜெபிக்கிறோம், ஆராதிக்கிறோம், வேதம் வாசிக்கிறோம், உபவாசிக்கிறோம், ஊழியம்செய்கிறோம்? பிரச்சினைகள் தீர்ந்திட, வியாதி சுகமாகிட, தேவைகள் சந்திக்கப்பட போன்ற ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக நாம் இவைகளைச் செய்வோமானால், அது சுயநலமானதாக இருக்கிறது. இவைகள் தேவனைத் தேடுதல் என்று அழைக்கப்படலாம்.
இயேசுவின் ஊழியநாட்களில்:
திரளான மக்கள் இயேசுவிடம் வந்தார்கள், எதற்காக? அற்புதங்களைப் பெற்றுச்செல்ல, அப்பத்தால் உணவூட்டப்பட, ஆச்சரியமானவைளைப் பார்த்திட, ஆசீர்வதிக்கப்பட . . .சீடர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள். பவுல் கர்த்தருக்கு ஊழியம் செய்தார், அப்போஸ்தலர்கள் இயேசு கிறிஸ்துவக்காக பாடுபட்டார்கள், அடிக்கப்பட்டார்கள், அவமானத்தை சகித்தார்கள், சிறையிலே அடைக்கப்பட்டார்கள், கொல்லப்படும்படி ஒப்புக்கொடுத்தார்கள், எதற்காக?
முதலாவது நாம் அவரைத் தேடவில்லை, அவர்தான் நம்மைத் தேடிவந்தார். அவர்தான் நம்மைத் தெரிந்துகொண்டார், அழைத்தார், அபிஷேகித்தார், ஊழியத்திற்கு ஏற்படுத்தினார், கிருபைகளைத் தந்திருக்கிறார். (யோவான்-15: 16 நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்)
தேவன் நமக்குச் செய்தவைகளும் செய்பவைகளும் செய்யவிருப்பவைகளும்:
அவர் எதையுமே ஆதாயத்திற்காகவோ, ஆதாய நோக்கத்தோடோ அல்லது சுயநலத்திற்காகவோ செயவது இல்லை. எல்லாவற்றையும் அன்பினிமித்தமே செய்கிறார். அவருக்கு நம்முடையவைகள் அல்ல, மாறாக நாம்தான் தேவை. நாம் அவருக்காகச் செய்பவைகளைக் குறித்து இப்படிச் சொல்ல முடியுமா? நமக்கு அவருடையவைகள் தேவையா அல்லது அவரே தேவையா?தேவனைத் தேடுதல்:
- அவருக்குக் கீழ்படிதல்
- அவருக்குப் பிரியமானதைச் செய்தல்
- அவருடைய வழிகளில் நடத்தல்
- ஜெபித்தல், துதித்தல், ஆராதித்தல், கொடுத்தல், ஆத்தும ஆதாயம் செய்தல்
- வேதத்தை வாசித்தல், தியானித்தல், பிரசங்கித்தல், போதித்தல்
இவை அனைத்தையும் நாம் எதற்காக செய்கிறோம்? பலன்கள் கிடைக்கும் என்பதற்காகவா? அப்படிச் செய்தால் ஆசீர்வாதத்திற்காகத் தேடுவதாகும். தேவன் எதை விரும்புகிறார்? நம்முடைய பாசத்தை, நேசத்தை, அன்பை, நம்முடைய உறவை, நாம் அவரோடு இருப்பதையே அவர் விரும்புகிறார்.
மரியாளின் மாதிரி: (லூக்கா-10: 38, 39, 42 பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள், அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்).
தாவீதின் நாடுதல்: (சங்-27: 4 கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன், நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்).
அவரைப் பார்க்கணும், அவர் அன்பை ருசிக்கணும், அவர் அழகை இரசிக்கணும், அவரோடு இருக்கணும்- இதுவே நாம் ஆசைப்படும் ஆசீர்வாதமாக இருக்கட்டும். மற்றவைகளi அவர் பார்த்துக்கொள்வார்.
Comments
Post a Comment