வெளிப்படுத்தின விசேஷம்
முகவுரை:
வேதாகமத்திலே மிகவும் ஆச்சரியமான புத்தகத்தைக்குறித்துப் பார்க்கவிருக்கிறோம். ஆங்கிலத்தில் Revelation of Jesus Christ என்று உள்ளது. இயேசு கிறிஸ்துவைக்குறித்த வெளிப்பாடு என்றும், இயேசு கிறிஸ்துவினுடைய வெளிப்பாடு என்றும் இதற்கு அர்த்தமிருக்கிறது. தமிழில் திவ்விய வாசகனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் என்று தலைப்பிடப் பட்டிருக்கிறது. இதற்கு வெளிப்பாடு என்றும், திரையை விலக்குதல் என்றும் அர்த்தமாகும். வெளிப்படுத்துதல் என்றால், மறைவாக இருப்பதை வெளிப்டையாகக் காட்டுதல் என்று அர்த்தமாகும். இயேசு கிறிஸ்துவைக்குறித்த தேவதிட்டத்தை இது வெளிப்படுத்திக் காட்டுகிறது. முதலாவதாக இயேசுவைக்குறித்து வெளிப்படுத்துவதன் மூலமாக, கடைசிக் காலங்களுக்குரிய தமது திட்டத்தை தேவன் வெளிப்படுத்துகிறார். முழுவேதாகமத்திலும்:
↻மிகவும் உற்சாகமான புத்தகமாக,
↻மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட புத்தகமாக,
↻மிகவும் குறைவாகப் படிக்கப்படுகிற புத்தகமாக, இருக்கிறது.
புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமான புத்தகமாக இது இருக்கிறது என சிலர் முறையிடுகிறார்கள். ஆனால் இதைப்படிக்கும்போது, இது புரிந்துகொள்வதற்கு ஒரு கடினமான புத்தகம் இல்லை என்பதை நாம் பார்க்கவிருக்கிறோம். இது குழப்புவதற்காக எழுதப்பட்ட புத்தகமல்ல, மாறாக தெளிவைக் கொடுப்பதற்காக எழுதப்பட்டதாகும். வேறு எந்தப் புத்தகத்திற்கும் இல்லாத சிறப்பு, இந்தப் புத்தகத்தின் 1ஆவது அதிகாரம் 3ஆவது வசனத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வாக்குறுதியாகும்.
†வெளி-1: 3 இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதி இருக்கிறவைகளைக் கைக் கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.
1. வாசித்தல்
2. கேட்டல்
3. கைக்கொள்ளுதல்
†வெளி-1: 1 சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும் பொருட்டு, தேவன், இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப் படுத்தினதுமான விசேஷம்.
இந்த வசனத்தில் வரும் 5 ஆள்தன்மைகள்:
1. தேவன்
2. இயேசுகிறிஸ்து
3. தூதன்
4. ஊழியக்காரனாகிய யோவான்
5. ஊழியக்காரர்கள் (சபைகளை நடத்துபவர்கள்)
இயேசுகிறிஸ்து ராஜாதிராஜாவாக இருக்கிறார் என்பது இந்தப் புத்தகத்திலே வெளிப் படுத்தப் பட்டிருக்கிறது. இது மீட்கப்படுதலைக் குறித்த புத்தகமாகும். உங்களுடைய, என்னுடைய, இந்த முழுஉலகத்தினுடைய மீட்பைக்குறித்தும் கற்றுக்கொடுக்கிறது. யோவான் பத்மூ என்ற தீவில் இருந்தபோது இந்த வெளிப்பாட்டைப் பெற்றார்.
∗வெளி-1: 9-10 உங்கள் சகோதரனும், இயேசு கிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும், அவருடைய ராஜ்யத்திற்கும், அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன் பங்காளனுமாய் இருக்கிற யோவானாகிய நான் தேவ வசனத்தின் நிமித்தமும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மூ என்னும் தீவிலே இருந்தேன். 10. கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன், அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காள சத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். 11. அது: நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாய் இருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.
ஊழியம் செய்ததற்காக யோவான் பத்மூ தீவில் சிறையிலிருந்தார். கர்தருடைய நாள் என்பது, ஓய்வுநாளையோ அல்லது வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக் கிழமையையோ குறிப்பதில்லை. நீரோ மன்னன் தன்னைக் கர்த்தர் என்று அழைத்துக்கொண்டு, கிறிஸ்தவர்களைத் தண்டித்து, அவர்களை மிருங்களுக்கு இறையாகவும், கொதிக்கும் எண்ணெயில் போடவும், வருடத்தில் ஒருநாளை அதற்கென்று குறித்துவைத்தான். அந்தநாளைக் கர்த்தருடைய நாள் என்று அழைத்தார்கள். எனவே இது நீரோவாகிய கர்த்தருடைய நாளாகும். இந்தக் குறிப்பிட்ட நாள் வரும்போது என்னவிதமான தண்டனை வருமோ உபத்திரவங்களைக் குறித்து சபைகளும், கிறிஸ்தவர்களும், மிகவும் கலங்கிக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் சபைகளைப் பெலப்படுத்திட இயேசுகிறிஸ்துவால் இந்த வெளிப்பாடு யோவானுக்குக் கொடுக்கப்பட்டு எழுதி அனுப்புமாறு கட்டளையிடப்பட்டது.
நீ காண்கிறதை எழுதி சபைகளுக்கு அனுப்பு:
வெளிப்பாடு-1: 12 முதல் 18ல் இயேசுவைக்குறித்த முற்றிலும் மாறுபட்ட புதிய கோணத்தை யோவான் காண்கிறார். பூமியிலே வாழ்ந்தபோதும், அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகும் யோவான் ஏற்கெனவே இயேசுவைப் பார்த்திருந்தார். ஆனால் இப்பொழுது பரலோகத்தில் இயேசு இருப்பதைக்குறித்த வெளிப்பாடு அவருடைய உண்மையான தன்மையை வெளிப்படுத்துகிறது. இயேசுவைக்குறித்து தான் பார்த்த தரிசனத்தை முதல் அதிகாரத்தில் யோவான் விவரிக்கிறார்.
∗1:12-18 அப்பொழுது என்னுடனே பேசினசத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன், திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், 13. அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக் கொப்பானவரையும் கண்டேன். 14. அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப் போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது, அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தது, 15. அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது, அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப் போலிருந்தது. 16. தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார், அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது, அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது. 17. நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன், அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாய் இருக்கிறேன், 18. மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென், நான் மரணத்திற்கும் பாதாளத்திற்கும் உரிய திறவுகோல்களை உடையவராய் இருக்கிறேன்.
வெளிப்படுத்தின விசேஷத்தின் வடிவமைப்பை விவரிக்கும் வசனம்:
∗வெளி-1: 19 நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது.
கண்டவைகள்: 1: 12-20- இயேசுவைக்குறித்த தரிசனம்
இருக்கிறவைகள்: அதிகாரங்கள்-2, 3 (சபைகளில் நடை பெற்றுக் கொண்டிருப்பவைகள்)
இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகள்: (அதிகாரங்கள் 4 முதல் 21)
அதிகாரங்கள் 4ம் 5ம் பரலோகத்தில் சிங்காசனத்தின் இடத்தையும், அங்குள்ள காரியங்களையும் விவரிக்கிற தரிசனங்களாகும்.
அதிகாரங்கள்6 முதல் 21 வரை இனிமேல் நடக்கவிருக்கும் சம்பவங்களைக்குறித்த தரிசனங்களாகும்.
வெளிப்படுத்தின விசேஷத்தின் 4 பிரிவுகள்: (மொத்தம் 22 அதிகாரங்கள்)
அ. பிரிவு ஒன்று: கடைசிக்காலத்தைக் குறித்த தீர்க்கதரிசனம் உரைத்திட யோவான் அழைக்கப்படுதல் (வெளி-1)
ஆ. பிரிவு இரண்டு: 7 சபைகளுக்கு அனுப்பும்படி 7 கடிதங்ளை இயேசு கொடுத்தல் (வெளி. 2-3)
இ. பிரிவு மூன்று: யுத்தத்திட்டத்தை விவரிக்கிற புஸ்தகச்சுருளை இயேசு வாங்குதல் (வெளி. 4-5)
ஈ. பிரிவு நான்கு: பூமியைச் சொந்தமாக்குவதற்குரிய இயேசுவின் யுத்தத்திட்டம் (வெளி. 6-22)
I. பிரிவு ஒன்று: கடைசிக் காலத்தைக் குறித்த தீர்க்கதரிசனத்தை உரைத்திட யோவான் அழைக்கப்பட்டு கட்டளையிடப்படுதல் (அதிகாரம்-1):
மணவாளனாக, ராஜாதிராஜாவாக, நியாயாதிபதியாக வெளிப்படுத்தப்படுகிற மனுஷகுமாரனாகிய இயேசு யாராக இருக்கிறார் என்ற தெளிவான படத்தை வெளி-1 நமக்குக் கொடுக்கிறது. இந்த அதிகாரத்தில்:
†இயேசுவின் ஒப்பற்ற அழகு,
†நித்திய மகத்துவம்,
†தேவனுடைய மகிமைக்காக தேசங்களை ஆயத்தப் படுத்துவதில் அவருடைய இருதயம், வல்லமை மற்றும் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும்படி வெளிப்படையாகத் திறக்கப்படும் அவரது யுத்தத்திட்டத்தின் அறிவாற்றல்,
போன்றவைகளை வெளியரங்கமாக்குமாறு பிதா இயேசுவுக்குக் கட்டளை கொடுக்கிறார்.
II. பிரிவு இரண்டு: 7 சபைகளுக்கு இயேசு 7 கடிதங்களைக் கொடுக்கிறார் (அதிகாரங்கள் 2-3) அதிகாரங்கள் 2ம், 3ம் இயேசு தமது சபையில் தாம் விரும்புவதைக்குறித்த தெளிவான படத்தை நமக்குக் கொடுக்கின்றன. தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற சபையைக்குறித்த வரைபடத்தை அவர் வெளிப்படுத்துகிறார். சபை:
1. தேவனுடைய வல்லமையைக் கட்டவிழ்ப்பது,
2. ஒருங்கிணைக்கப் பட்ட பாதுகாப்பில் வாசம்செய்வது (தேவை சந்திக்கப்படுதல், பாதுகாப்பு, வழிநடத்துதல்),
3. தேவையற்ற காயப்படுதல் இல்லாமல். நீண்ட காலத்திற்கு அவருடைய பிரசன்னத்தை நிலைக்கச் செய்வது
III. பிரிவு மூன்று: புஸ்தகச்சுருளை இயேசு பெறுதல் (அதிகாரங்கள் 4-5)
அதிகாரங்கள்-4ம் 5ம் இயேசுவின் மட்டற்ற தகுதி மற்றும் ஆதாரங்களுக்குரிய பிறப்பிடங்களின் தெளிவான படத்தை நமக்குக் கொடுக்கிறது.
∗அதிகாரம்-4ல், பிதாவின் சிங்காசனத்தில் காட்டப்பட்டுள்ள நித்திய சிருஷ்டிகருடைய சர்வ ஆளுகையையும், வல்லமையையும் பார்த்திட யோவான் பரலோகத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறார். இது தேவனுடைய அழகு மண்டலம் என்று அழைக்கப்படுகிற பிதாவின் ஆள்தன்மையையும், சூழல்களின் மேன்மையான வெளிப்பாட்டையும் நமக்குக் கொடுக்கிறது. பிதா இயேசுவைக்குறித்து எப்படி உணருகிறார் என்பதை பரிசுத்த ஆவியானவர் யோவானுக்கு வெளிப்படுத்துகிறார். இயேசுவை சகல தேசங்கள்மீதும் என்றென்றைக்கும் ஒரு மனித-ராஜாவாக உயர்த்துவதில் பிதாவின் மேலான திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு ஏற்படுத்தப் பட்ட மட்டற்ற ஆதாரங்களுடன் அவருடைய முழுமையான தாங்குதலையும், கட்டளை இடுதலையும் இது உள்ளடக்கி இருக்கிறது.
∗அதிகாரம்-5ல் பிதாவின் கையிலிருந்து இயேசு புஸ்தகச்சுருளை வாங்குகிறார். அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியானவராக, அவர் ஒருவரே பாத்திரராக இருக்கிறார். பாத்திரர் என்றால் முத்திரையை உடைத்து, சுருளைத் திறப்பதற்குத் தகுதியானவர், உறுதிப் படுத்தப்பட்டவர், அங்கீகரிக்கப்பட்டவர் என்று அர்த்தமாகும்.
புஸ்தகச்சுருளானது:
அ. பூமிக்கான கிரயப்பத்திரமாகவும்
1. முதிர்ச்சியான சபையை ஆயத்தப்படுத்திடவும்
2. சகல தேசங்களிலிருந்தும் பெரிய அறுவடையைக் கொண்டுவந்திடவும்,
3. அந்திக்கிறிஸ்துவின் உலகளாவிய சாம்ராஜ்யத்திற்கு எதிராக மகாஉபத்திரவத்தை (நியாயத்தீர்ப்பும் எழுப்புதலும்) கட்டவிழ்த்துவிடவும்
ஆ. தேவையான யுத்தத்திட்டத்தின் பதிப்பாகவும் இருக்கிறது.
↻வெளி-4: 2 உடனே ஆவிக்குள்ளானேன், அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின் மேல் ஒருவர் (பிதா) வீற்றிருந்தார்.
↻வெளி-5: 2,7 ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப் பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன். அந்த ஆட்டுக்குட்டியானவர் (இயேசு) வந்து, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்
IV. பிரிவு நான்கு: இயேசுவின் யுத்தத்திட்டம் (அதிகாரங்கள் 6 முதல் 22)
6 முதல் 22 வரையுள்ள அதிகாரங்கள், இயேசு என்ன செய்வார் என்பதையும், சகலத்தையும் புதுப்பித்திட அன்பின் தன்மையில் அவஎந்த அளவுக்கு செல்வார் என்பதையும், வானத்தையு பூமியையும் பிதாவின் அதிகாரத்திற்குக்கீழாக ஒருங்கிணைத்துக் கொண்டுவருவதையும் நமக்குக் காண்பிக்கின்றன. தேவ ஆட்டுக் குட்டியானவராக வெளி 4-5ல் அறிமுகப்படுத்தப்பட்டு, கொடுக்கப்பட்ட புஸ்தகச்சுருளைத் திறப்பதற்காக அதிலுள்ள முத்திரைகளை உடைக்கிறார்.
Ψஇந்த அதிகாரங்கள், அன்பைத் தடைசெய்கிற அனைத்தையும் அகற்றுவதற்காக, அவரால் திறக்கப்படும் யுத்ததிட்டத்தை வெளிப் படுத்துகின்றன.
Ψஇப்புத்தகத்தின் அதிகப் பகுதியை உள்ளடக்கியிருக்கிற, மகாஉபத்திரவ காலத்தின்போது நடைபெறவுள்ள:
1. 7 முத்திரைகள் உடைக்கப்படுதல்
2. 7 எக்காளங்கள் ஊதப்படுதல்
3. 7 கோபக்கலசங்கள் ஊற்றப்படுதல்
போன்றவற்றை விவரிக்கிற முக்கிய பகுதியாக இது இருக்கிறது. இந்த 3 நியாயத்தீர்ப்பின் தொடர்களும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த யுகத்தின் முடிவிற்கு நம்மைக் கொண்டுசெல்கிற, இயற்கை சரித்திரத்தின் இறுதி மூன்றரை வருடங்களை உள்ளடக்கி இருக்கின்றன.
வெளிப்படுத்தின விசேஷத்தில் இயேசுகிறிஸ்து:
1. உண்மையுள்ளவர், சத்தியமுள்ளவர் (1: 5, 3: 7,14)
2. மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவர் (1: 5)
3. பூமியின் ராஜாக்களுக்கு அதிபதி (1: 5, 11: 15)
4. நம்மிடத்தில் அன்புகூர்பவர் (1: 6)
5. தம்முடைய இரத்தத்தால் நம்முடைய பாவங்களைக் கழுவியவர் (1: 6)
6. தம்முடைய இரத்தத்தால் தேவனுக்கென்று நம்மை மீட்டுக்கொண்டவர் (5: 9)
7. நம்மை ராஜாக்களாக்கியவர் (1: 6)
8. நம்மை ஆசாரியர்களாக்கியவர் (1: 6)
9. மேகங்களுடனே வருகிறவர் (1: 7)
10. சர்வவல்மையுள்ள கர்த்தர் (1: 8)
11. அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறவர் (1: 11)
12. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவர்-நித்தியமானவர் (1: 8)
13. ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலிருப்பவர்-சபைகள் (1: 13)
14. ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருப்பவர்-சபை ஊழியர்கள் (1: 16)
15. மரித்தார் ஆனாலும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவர் (1: 18)
16. மரணத்திற்குரிய திறவுகோலை உடையவர் (1: 18)
17. பாதாளத்திற்குரிய திறவுகோலை உடையவர் (1: 18)
18. பரிசுத்தமுள்ளவர் (3: 7)
19. தாவீதின் திறவுகோலை உடையவர் (3: 7)
20. ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவர் (3: 7)
21. ஒருவரும் திறக்கக் கூடாதபடிக்குப் பூட்டுகிறவர் (3: 7)
22. யூதா கோத்திரத்துச் சிங்கம் (5: 5)
23. தாவீதின் வேர் (5: 5, 22: 16)
24. அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஆட்டுக்குட்டி (5: 6)
25. புஸ்தகத்தை வாங்கவும், அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரர் (5: 9)
26. மேய்ப்பவர் (7: 17)
27. ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துபவர் (7: 17)
28. கண்ணீர் யாவையும் துடைப்பவர் (7: 17)
29. பரமஎருசலேமின் விளக்கு (21: 23) பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரம் (22: 16)
30. அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு பலனளிப்பவர் (22: 12)
அதிகாரங்கள் 1 முதல் 3ல், இயேசு, சபைகள் மத்தியில் மகிமைப் படுத்தப்பட்டவராகக் காட்டப் பட்டுள்ளார்.
அதிகாரம் 12ல், இயேசு, ஆண்பிள்ளையாகக் காட்டப்பட்டுள்ளார்.
அதிகாரம் 14ல், இயேசு, பெரிய அறுவடையாளராகக் காட்டப்பட்டுள்ளார்.
அதிகாரம் 19ல், இயேசு, ஜெயத்தோடு திரும்பவருபவராகக் காட்டப்பட்டுள்ளார்.
அதிகாரங்கள் 5 முதல் 22ல், இயேசு, அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியானவராகக் காட்டப்பட்டுள்ளார்.
வெளிப்படுத்தின் விசேஷத்தின் தொகுப்பு:
I. அதிகாரம்-1: 1-8 முகவுரை
II. அதிகாரம்-1: 9-20 யோவான் கண்டவைகள் (இயேசுவைக்குறித்த தரிசனம்)
III. அதிகாரங்கள் 2-3 இருப்பவைகள் (7 சபைகளுக்கு இயேசுவின் கடிதங்கள்)
1. எபேசு சபைக்கு (2: 1-7)
2. சிமிர்னா சபைக்கு (2: 8-11)
3. பெர்கமு சபைக்கு (2: 12-17)
4. தியாத்தீர சபைக்கு (2: 18-29)
5. சர்தை சபைக்கு (3: 1-6)
6. பிலதெல்பியா சபைக்கு (3: 7-13)
7. லவோதிக்கேயா சபைக்கு (3: 14-22)
IV. அதிகாரங்கள் 4-5 பரலோக சிங்காசன மாளிகையின் விவரித்தல்
1. பிதாவைக்குறித்த காட்சி (4)
2. இயேசுவைக்குறித்த காட்சி (5) ஆட்டுக்குட்டியானவர்
V. அதிகாரங்கள் 6 முதல் 22: 5 இனிமேல் சம்பவிக்க இருப்பவைகள்.
இந்தப் பகுதியில் 5 சம்பவங்களும், ஒவ்வொரு சம்பவத்திற்கு அருகிலும் அதைக்குறித்த விளக்கமளித்தளும் கொடுக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கலாம். (5 சம்பவங்கள், 5 விளக்கமளித்தல்கள்)
ஐந்து சம்பவங்களும் தேவதூதனின் விளக்கமளித்தல்களும்: (கடைசி ஏழுவருடங்களும், கிறிஸ்துவின் ஆயிரவருட அரசாட்சி ஸ்தாபிக்கப்படுதலும்)
1. சம்பவம்-1 அதிகாரம்-6: முத்திரை நியாயத்தீர்ப்புகள்
அ. முதலாம் முத்திரை உடைக்கப்படுதல் (6: 1-2) அந்திக்கிறிஸ்து வெளிப்படுதல் (முதல் மூன்றரை வருடங்கள்)
ஆ. 2ஆவது முத்திரை உடைக்கப்படுதல் (6: 3-4) பூமியிலே சமாதானம் எடுக்கப்படுதல் (மகாஉபத்திரவம்)
இ. 3ஆவது முத்திரை உடைக்கப்படுதல் (6: 5-6) பஞ்சம்
ஈ. 4ஆவது முத்திரை உடைக்கப்படுதல் (6: 7-8) பூமியில் 4ல் ஒரு பங்கு மக்கள் மரித்தல்
உ. 5ஆவது முத்திரை உடைக்கப்படுதல் (6: 9-11) பரலோகத்திலே இரத்தசாட்சிகளாக மரித்த ஆத்துமாக்களின் வேண்டுதல்
ஊ. 6ஆவது முத்திரை உடைக்கப்படுதல் (6: 12-17) மக்களைக் கலங்க வைக்கும் இயற்கைச் சீற்றங்கள்
விளக்கம்: அதிகாரம்-7 இரண்டு பெரிய கூட்டங்களைக்குறித்து விளக்குதல்:
1. இஸ்ரவேலரில் முத்திரையிடப்படுகிற 1,44,000 பேர் (7: 1-8)
2. சகல தேசங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டு வந்தது, பரலோகத்திலே சிங்காசனத்திற்கு முன்பாக நின்ற திரளான மக்கள் (7: 9-17)
7: 9 இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக் குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.
7: 13-14 அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். 14. அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கெ தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள், இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக் குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
2. சம்பவம்-2 அதிகாரங்கள் 8: 7 முதல் 9: 21. அந்திக்கிறிஸ்துவின் ராஜ்யத்திற்கு விரோதமாக எக்காள நியாயத்தீர்ப்புகள்: 7ஆவது முத்திரை உடைக்கப்படுதல் (8: 1)
அ. பரலோகத்தில் அரை மணிநேர அமைதி
ஆ. எக்காள நியாயத்தீர்ப்புக்கள் ஆரம்பித்து வைக்கப்படுதல் (8: 2-6)
•முதலாவது எக்காளம் ஊதப்படுதல் (8: 7) மரங்களில் மூன்றில் ஒரு பங்கு அழிக்கப்படுதல்
•2ஆவது எக்காளம் ஊதப்படுதல் (8: 8-9) சமுத்திரத்தில் மூன்றில் ஒரு பங்கு இரத்தமாகுதல்
•3ஆவது எக்காளம் ஊதப்படுதல் (8: 10-11) தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கு கசப்பாகுதல்
•4ஆவது எக்காளம் ஊதப்படுதல் (8: 12) நாளின் மூன்றில் ஒரு பங்கு இருளடைதல்
(அடுத்த 3 எக்காளம் ஊதப்படுதலும் அந்திக்கிறிஸ்துவின் மக்கள்மீது ஆபத்தை வருவிக்கும் நியாயத்தீர்ப்புகள்- 8: 13)
•5ஆவது எக்காளம் ஊதப்படுதல் (9: 1-12) 5 மாதங்களுக்கு தேளைப்போல வேதனைப்படுத்தும் வெட்டுக்கிளிகள்.
•6ஆவது எக்காளம் ஊதப்படுதல் (9: 13-21) முன்றிலொரு பங்கு மனிதரைக் கொல்லும் குதிரை இராணுவங்கள்.
†விளக்கம்: அதிகாரங்கள் 10 முதல் 11: 14 வரை- மகா உபத்திரவத்தின் போது தமது மக்களுக்கு தேவன்கொடுக்கும் வழி நடத்துதலைக் குறித்து விளக்குதல்:
அ. 7 இடிமுழக்கங்கள் (10: 1-7)
ஆ. சிறிய புத்தகம் (10: 8-11) தேவனுடைய வார்த்தை
இ. இரண்டு சாட்சிகள் (11: 1-14) தேவனுடைய தீர்க்கதரிசிகள்
3. சம்பவம்-3 மூன்றரைவருட மகாஉபத்திரவத்தின் முடிவு, இயேசுவின் இரண்டாம் வருகையின் ஆரம்பமும் சபையின் எடுத்துக் கொள்ளப்படுதலும். 7ஆவது எக்காளம் ஊதப்படுதல் (11: 15-19),
↻மத்-24: 29-31 அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். 30. அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். 31. வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார், அவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களை வானத்தின் ஒருமுனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்.
↻கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் உயிர்த்தெழுதல்
↻கிறிஸ்துவுக்குள் உயிரோடிருப்பவர்கள் மறுரூபமாக்கப்படுதல்
Ψவிளக்கம்: அதிகாரங்கள் 12 முதல் 14: பரிசுத்தவான்களுக்கு விரோதமாக சாத்தானுடைய எதிர்த்தலைக்குறித்து விளக்குதல்:
அ. சாத்தான் பூமியிலே தள்ளப்படுதல் (12)
1. ஆண்பிள்ளையாகிய இயேசுவைப்பெற்ற இஸ்ரவேல் தேசத்தின்மீது சாத்தானின் தாக்குதல் (12: 1-6)
2. வானத்திலிருந்து சாத்தான் பூமியிலே தள்ளப்படுதல் (12: 7-12)
3. பூமியின்மேல் சாத்தானுடைய ஆக்ரோஷம் (12: 12-13) இஸ்ரவேலர் துன்புறுத்தப்படுதல்.
∗12: 12-13 பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக் காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன். 13. வலுசர்ப்பமானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண் பிள்ளையைப் பெற்ற ஸ்திரியைத் துன்பப்படுத்தினது.
4. மகாஉபத்திரவக் காலத்தில், தேவன் தம்முடைய பரிசுத்தவான்களைக் காத்து நடத்தும் விதம் (12: 14-17
12: 14 ஸ்திரியானவள் அந்தப் பாம்பின் முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாக (மூன்றரை வருடங்கள்) போஷிக்கப் படத்தக்கதாய், வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.
ஆ. அந்திக்கிறிஸ்துவும், கள்ளத்தீர்க்கதரிசியும் (13)
1. அந்திக்கிறிஸ்துவாகிய மிருகம் எழும்புதல் (13: 1-10)
2. கள்ளத் தீர்க்கதரிசியாகிய மிருகம் எழும்புதல் (13: 11-18)
இ. தேவனுடைய கண்ணோட்டத்திலிருந்து (14)
1. 7ஆவது அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள 1,44,000 பேரின் குணாதிசயங்கள் (14: 15)
2. மூன்று தேவதூதர்களின் அறிவித்தல்கள் (14: 6-13)
i. நித்திய சுவிசேஷம் (14: 6-7)
14: 6-7 பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன், அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, 7. மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள், அவர் நியாயத் தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது: வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள் என்று கூறினான்.
ii. பாபிலோனின் அழிவைக்குறித்த அறிவித்தல் (14: 8)
iii. அந்திக்கிறிஸ்துவை ஆராதிப்பவர்களின் முடிவு (14: 9-11)
iv. பரிசுத்தவான்களுக்குரிய ஊக்கப்படுத்துல் (14: 12-13)
14: 12-13 தேவனுடைய கற்பனைகளையும், இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக் கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான். 13. பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன், அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது, அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள், அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம், ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று.
v. பெரிய அறுவடை-அந்திக்கிறிஸ்துவின் ஆட்கள் கொல்லப்படுதல் (14: 14-20)
4. சம்பவம்-4 அதிகாரங்கள் 15-16: கடைசியான, 7 கோபக்கலசங்கள் ஊற்றப்படுதலின் நியாயத்தீர்ப்புகள்:
↻15: 1 பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது
↻இந்த நியாயத்தீர்ப்பு, மகாஉபத்திரவம் முடிந்து, இயேசுவின் வருகை ஆரம்பித்தபிறகு சம்பவிக்கும்.
↻இந்த நியாயத் தீர்ப்பின்போது, பரிசுத்தவான்கள் யாவரும் எடுத்துக் கொள்ளப்பட்டு மத்திய ஆகாயத்தில் இயேசுவோடு இருப்போம் (15: 2-4)
↻பூமியிலிருக்கும் தீமையான அமைப்புக்களை தேவன் அழிப்பதற்கு ஆயத்தமாகுதல் (15: 5 முதல் 16: 1)
1. முதலாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை பூமியின்மேல் ஊற்றுதல் (16: 2) பொல்லாத கொடிய புண் உண்டாகுதல்
2. 2ஆம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை சமுத்திரத்தின்மேல் ஊற்றுதல் (16: 3) சமுத்திரத்திலுள்ள யாவும் மரித்தல்
3. 3ஆம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை நதிகள், நீரூற்றுகள்மேல் ஊற்றுதல் (16: 4-7) தண்ணீர்கள் இரத்தமாக மாறுதல்
4. 4ஆம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை சூரியன்மேல் ஊற்றுதல் (16: 8-9) கொதிக்கும் உஷ்ணம்.
5. 5ஆம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை அந்திக்கிறிஸ்துவின் அரண்மனைமேல் ஊற்றுதல் (16: 10-11) இருளும் வருத்தமும்
6. 6ஆம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை யூப்ரடீஸ் நதியின்மேல் ஊற்றுதல் (16: 12-16) நதி வற்றி, அர்மெகதோன் யுத்தத்திற்காக பூமியின் ராஜாக்கள் ஒன்றுபட்டு வருவதற்கு வழி உருவாக்குப்படுதல்.
(குறிப்பு: அந்திக்கிறிஸ்துவோடு இணையாமல் இருப்பதற்குரிய எச்சரிப்பை 16: 15ல் பார்க்கிறோம். இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக் கொள்ளுகிறவன் பாக்கியவான்).
7. 7ஆம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஊற்றுதல் (16: 17-21) உலக அளவில் மகாபூமியதிர்ச்சியும், உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியும்.
அதிகாரங்கள் 17 முதல் 19: 10 வரை
தேவதூதனின் விளக்கமளித்தல் நான்கு: மகாபாபிலோனின் வேசித்தனத்தைக் குறித்து விளக்குதல்: இந்த விளக்கமளித்தல், இவ்வளவு வன்மையான நியாயத்தீர்ப்புக்குரிய காரணத்தை விவரிக்கிறது. சமுதாயத்தின் சகல கட்டமைப்பிற்குள்ளும் பாபிலோன் மதவேசித்தனம்; ஊடுருவிக் கலந்துவிட்டிருப்பதால், அது அழிக்கப்பட்டாகவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. கெட்ட தலைவர்களால் ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்புகளை அழிப்பதற்கு கோபக்கலசங்களின் நியாயத்தீர்ப்பு அவசியமானதாக இருக்கும்.
அ. மகாவேசியாகிய பாபிலோன் மதஅமைப்பு நியாந்தீர்க்கப்படுதல் (17)
ஆ. பாபிலோன் பொருளாதர அமைப்பின் வீழ்ச்சி (18) இவை இரண்டும் இருளின் கட்டமைப்பிற்கு ஆதரவாக இருக்கிற பல ஆதாரங்களை அழிக்கும்.
இ. கர்த்தருடைய நீதியான நியாயத்தீர்ப்பிற்காக துதி வெளிப்படுதலும், ஆட்டுக்குட்டியானவரின் கல்யாணமும் நடைபெறுதல் (19: 1-10)
பூமியிலே பாபிலோனின் விழுதல் நடைபெறுகிற அதேநேரத்தில், மத்திய வானிலே ஆட்டுக்குட்டியானவரின் கல்யாணமும், பரிசுத்தவான்களுக்கு அவர்கள் பூமியில் வாழ்ந்தபோது செய்த கிரியைகளுக்குத் தக்க பலனளித்தலும் நடைபெறும்.
(வெளி-19: 7–8, 11: 18, 22: 12, 2தீமோ-4: 1, 8, ஏசா-40: 10, 62: 11).
•வெளி-19: 1 இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் (மத்திய வானில்) திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா. இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது, அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
•வெளி-19: 7 நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.
வரிசைக்கிரம சம்பவங்கள் ஐந்து:
அதிகாரங்கள் 19: 11 முதல் 20: 8 எருசலேமிற்குள் இயேசுவின் வெற்றிப் பிரவேசம்:
1. அதிகாரம்-19: 11-21
இயேசுகிறிஸ்து பூமியின்மேல் வெள்ளைக்குதிரையில் இறங்கிவருதல் (19: 11-21)
↻வெளி-19: 11 பின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன், இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ள வரென்னப்பட்டவர், அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.
↻வெளி-19: 14 பின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன், இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவ ரென்னப்பட்டவர், அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.
2. அதிகாரம்-20
இயேசுவின் 1000 வருட அரசாட்சி (20: 1-6)
இயேசுவின் மூலம் பூமியில் நடைபெறவிருக்கிற 1000 வருட அரசாட்சி என்பது உருவக எண் இல்லை, மாறாக உண்மையாக அது 1000 வருடங்கள்தான். அந்த நாட்களில் இயேசு எருசலேமிலிருந்து முழு உலகத்தையும் நீதியோடும், சமாதானத்தோடும் அரசாளுவார். ஆயிர வருடம் என்பதற்கு ஆங்கிலத்தில், Millenium (மில்லெனியம்) என்று உள்ளது. அதற்குரிய லத்தீன் வார்த்தை mille (மில்லே) ஆகும். அதற்கு "ஆயிரம்" என்று அர்த்தமாகும். இந்த ஆயிர வருடத்தின் நாட்களில், தேவனுடைய ராஜ்யம் உலக அளவில் வெளிப்படையாக இருக்கும். அரசியல், சமூகம், விவசாயம், பொருளாதாரம், ஆவிக்குரியவைகள், கல்வி, சட்டம் நிலைநாட்டப்படுதல், குடும்பம், தொலைத் தொடர்புகள், தொழில்நுட்பங்கள், கலை, விளையாட்டு, சுற்றுச்சூழல், சமூக நிறுவனங்கள் போன்ற யாவற்றிலும் தேவனுடைய ராஜ்யத்தின் தாக்கம் இருக்கும்). அதன் விளைவாக, முழுபூமியிலும் சமாதானத்தையும், செழுமையையும் இயேசு நிலைநாட்டவிருப்பதால், விவசாயம், சுற்றுச்சூழல், மிருகஜீவன்களின் வாழ்க்கைத் தன்மைகள், அதிகபட்சமாக ஏதேன் தோட்டத்திலிருந்ததுபோன்ற நிலைக்குப் புதுப்பிக்கப்படும். (வெளி-20: 1–6, ஏசா-2: 1-4, 9: 6-9, 11: 1–16, 51: 1–8, 60–62, 65: 17–25, சங்-2: 6–12, 110: 1–7, உபா. 8, 28, மத்-5: 5, 6: 10, 17: 11, 19: 28, 28: 19, அப்-1: 6, 3: 21).
•சாத்தான் கட்டப்பட்டு 1000 வருடம் பாதாளத்தின் தள்ளியடைக்கப்படுதல் (20: 1-3)
•கிறிஸ்துவும் அவருடைய பரிசுத்தவான்களும் 1000 வருடம் அரசாளுதல் (20: 4-6)
3. இறுதி முரட்டாட்டமும் (20: 7-10), சாத்தானுடைய முடிவும்:
•1000 வருட முடிவில் சாத்தான் விடுவிக்கப்படுதல் (20: 7)
•பூமியில் கடற்கரை மணலத்தனை மக்களை சாத்தான் மோசம்போக்குதல் (20: 8-10)
4. பெரிய வெள்ளைசிங்காசன நியாயத்தீர்ப்பு (20: 11-15)
Ψஆயிரவருட அரசாட்சிக்குப் பிறகு, அவிசுவாசிகள் அனைவரும் வெள்ளைசிங்காசனத்திற்கு முன்பாக நியாயந்தீர்க்கப்படுவார்கள்.
↻வெளி-20: 11-12 பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன், அவருடைய சமுகத்திலிருந்து பூமியும், வானமும் அகன்றுபோயின, அவைகளுக்கு இடங்காணப்படவில்லை. 12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன், அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன, ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது, அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் (ஆவியில் இரட்சிக்கப்படாதவர்கள்) தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
↻வெளி-22: 15 நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே (பரம எருசலேமிற்கு வெளியே) இருப்பார்கள்.
5. புதிய வானம், புதிய பூமியின் வாழ்வு (21: 1-8)
Ψவெளி-21: 1 பின்பு, நான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் கண்டேன், முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின, சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.
பூமி அக்கினியினால் சுத்திகரிக்கப்படும் (2பேது-3: 10-13)
Ψ2பேது-3: 13 அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும், புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.
Ψஏசா-65: 17 இதோ, நான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன், முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.
Ψஏசா-66: 22 நான் படைக்கப்போகிற புதிய வானமும், புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல.
பூமி சதாகாலங்களிலும் நிலைத்திருக்கும் (சங்-37: 29, 78: 69, 104: 5, 105: 10–11, 125: 1–2, 1நாள்-23: 25, 28: 8, ஏசா-60: 21, எசே-37: 2, யோவே-3: 20).
தேவதூதனின் விளக்கம்:
அதிகாரங்கள் 21: 9 முதல் 22: 5 வரை: சகலமும் புதுப்பிக்கப்படுதலைக் குறித்து விளக்குதல்:
1. அதிகாரம்-21
புதிய எருசலேம் (21: 9 முதல் 22: 5)
†வெளி-21: 9-10 பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி, 10. பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டுத் தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
2. அதிகாரம்-22: 1-4 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் (பரம எருசலேமிற்குள்) பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
முடிவுரை
அதிகாரம்-22: 6-21
1. "சீக்கிரமாக வருகிறேன்" என்ற வாக்குத்தத்தம் (22: 6-12)
அ. வெளி-22: 7 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.
ஆ. வெளி-22: 10 பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரைபோடவேண்டாம், காலம் சமீபமாயிருக்கிறது.
இ. வெளி-22: 12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
2. கடைசி வரவேற்பு (22: 13-17)
வெளி-22: 17 ஆவியும் மணவாட்டியும் வா (இயேசுவே வாரும்) என்கிறார்கள், கேட்கிறவனும் வா (இயேசுவிடம் வா) என்பானாக, தாகமாயிருக்கிறவன் வரக்கடவன், விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
3. கடைசி எச்சரிப்புகள் (22: 18-19)
வெளி-22: 18-19 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். 19. ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
4. கடைசி வார்த்தைகள் (22: 20-21)
வெளி-22: 20-21 இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்றார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். 21. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
MAY GOD BLESS YOU!
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவெளிப்படுத்தின விசேஷம் விளக்கவுரை!
ReplyDeleteபரிசுத்த வேதாகமத்தின் கடைசி புத்தகமாகிய அப். யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷமானது, புதிய ஏற்பாட்டு சபையின் அநேக ஆழ்ந்த உபதேச ரீதியான சத்தியங்களுக்கு முதன்மையான ஓன்றாயிருக்கிறது. இப்புத்தகத்தை ஒருவர் எந்த அளவிற்கு சரியாக விளங்கிக்கொள்ளுகிறாரோ அந்த அளவிற்கே அவரின் மோட்ச பிராயணத்திற்கான உபதேச தெளிவு உண்டாக முடியும். ஆகவே தான் இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவர்களும், கேட்கிறவர்களும், கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள் (வெளி 1:3; 22:7) என கூறப்பட்டிருக்கிறது. சபையின் காலம் முழுவதும் இப்புத்தகத்தின் தீர்க்கதரிசன சத்தியங்களானது, தங்கள் நெற்றிகளில் பிதாவின் நாமம் எழுதப்பட்டவர்களாகிய தேவ ஊழியர்களுக்கு (வெளி 14:1; 22:4) காண்பிக்கப்பட்டு (வெளி 1:1; 22:6) அவர்கள் மூலமாக சபைக்கு சாட்சியாக அறிவிக்கப்பட்டு வருகிறது (வெளி 22:16). அவ்விதமாக சபைக்கு சாட்சியாக அறிவிக்கப்பட்ட சத்தியங்கள் சேகரிக்கப்பட்டு ஆக்கியோனின் கிருபையின் அளவுக்குத்தக்க விதத்தில் விளக்கவுரை புத்தகமாக தொகுக்கப்பட்டிருக்கிறது. பின்வரும் இணைப்பின் மூலம் அதை பதிவிறக்கம் செய்து வாசித்து பயனடையுங்கள்.
https://cutt.ly/zv8WZAM
...காலம் சமீபமாயிருக்கிறது (வெளி 22:10).