சங்கீதங்கள்
முகவுரை:
சங்கீதங்கள் ஒரு பாடல் புத்தகமாக இருக்கிறது. இந்தப் பாடல்களை எழுதிய 7 நபர்களின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளன, யார் எழுதியது என்று, எழுதியவர்களின் பெயர் கொடுக்கப்படாத சங்கீதங்களும் உள்ளன. தாவீது எழுதியது 77, ஆசாப் எழுதியது 12, கோராகின் புத்திரர்கள் எழுதியது 9, சாலோமோன் எழுதியது 2 (72, 127), மோசே எழுதியது 1 (90), ஏமான் எழுதியது 1 (88), ஏத்தான் எழுதியது 1 (89). 47 சங்கீதங்களை எழுதியவர்களின் பெயர் கொடுக்கப்படவில்லை. சங்கீதங்களின் புத்தகம் தேவனை மையக்கருத்தாகக் கொண்டிருக்கிறது. அனைத்து சங்கீதங்களிலும், 1220 முறை தேவன் நாமத்தால் பயன்படுத்தப்பட்டுள்ளார். யாவே=கர்த்தர் என்ற நாமம் 132 சங்கீதங்களிலும், ஏலோகீம்=தேவன் என்ற நாமம் 109 சங்கீதங்களிலும் வருகிறது. உதாரணம்: சங்கீதம் 68ல் தேவன், கர்த்தர், ஆண்டவர், யெகோவா, சர்வவல்லவர் என்பது 42முறை வருகிறது. எண்ணற்ற முறை தேவனுடைய நாமம் பயன்படுத்தப்பட்டிருப்பது நம்முடைய துதியிலும், ஆராதனையிலும் அவரே முக்கியமானவராக, கவனத்திற்குரியவராக, கனத்திற்குரியவராக இருக்கிறார் என்பதை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
புதிய ஏற்பாட்டிலே சங்கீதங்கள் 81 முறை சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. யாக்கோபு மற்றும் யூதா வைத் தவிர மற்ற புதியஏற்பாட்டு ஆசிரியர்கள் அனைவருமே சங்கீதங்களிலிருந்து வசனங்களைப் பயன்படுத்தி எழுதியிருக்கிறார்கள். 150 சங்கீதங்களுக்கும் உரிய தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கான தலைப்பை சங்கீதம் 1ம், நாம் தேவனைத் துதிக்கவேண்டும் என்ற முடிவுரையை சங்கீதம் 150ம் உள்ளடக்கியிருக்கிறது. சங்கீதம்-1 மனிதன் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதையும், சங்கீதம்-150 தேவன் மனிதனால் துதிக்கப்படுவதையும் முக்கியப்படுத்துகிறது.
19ஆவது புத்தகமாக வருகிற சங்கீதங்களின் புத்தகத்தில் 19ஆவது சங்கீதமும், 119ஆவது சங்கீதமும் தேவனுடைய வார்த்தையின் மகத்துவத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவதைக் கவனியுங்கள்!
சங்-19: 7-11 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறது மாயிருக்கிறது, கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறது மாயிருக்கிறது. 8. கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறது மாயிருக்கிறது, கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறது மாயிருக்கிறது. 9. கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறது மாயிருக்கிறது, கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது. 10. அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப் படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது. 11. அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன், அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.
சங்-119: 1, 9, 18, 92, 105, கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். 9. வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுவதினால்தானே. 18. உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும். 92. உமது வேதம் என் மனமகிழ்ச்சி யாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். 105. உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
சங்கீதங்களின் தொகுப்பு
(மொத்தம் 150 அதிகாரங்கள் உள்ளன. இது 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது)
ஐந்து பிரிவுகளும் வேதாகமத்தின் முதல் 5 புத்தகங்களின் நிழலாட்டமாக இருக்கின்றன. ஒவ்வொரு பிரிவின் கடைசி சங்கீதத்திலும் முடிவைக்குறிக்கிற வார்த்தையாக, ஆமென், முடிந்தது, அல்லேலூயா என்ற வார்த்தை எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். (சங்-41: ஆமென், சங்-72: முடிந்தது, சங்-89: ஆமென், சங்-106: ஆமென், சங்-150: அல்லேலூயா.
I. சங்கீதம் 1 முதல் 41 (முதலாம் பாகம்)
மேசியாவின் புத்தகம் என்று இது அழைக்கப்படுகிறது. இது ஆதியாகமத்தைப் பிரதிபலிக்கிறது. ஆபிராகம், ஈசாக்கு, யாக்கோபுடனான உடன்படிக்கையின் ஆரம்பத்திற்காக தேவனைத் துதித்தல். தேவன் இயேசு கிறிஸ்துவுக்குள் நமக்காக புதிய உடன்படிக்கையை ஆரம்பித்து வைத்திருக்கிறார். இந்த சங்கீதங்களில், ஞானம், ஆராதனை மற்றும் வார்த்தையின் ஆரம்பத்தை நாம் பர்க்கிறோம்.
சங்கீதம்-1, 2, 10, 33 இந்த நான்கு சங்கீதங்கள் தவிர மற்ற அனைத்தும் தாவீதால் எழுதப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கீதங்கள் 2, 8, 16, 20-24, 31, 34, 35, 40, 41 மேசியாவைக் குறித்து நேரடியாகப் பேசுகின்றன. அவருடைய முதலாம் வருகையின் செயல்பாடுகளும், அவருடைய இரண்டாம் வருகையின் செயல்பாடுகளும் துல்லியமாக முன்னறிவிக்கப் பட்டுள்ளன. சங்கீதங்கள் 20-21 மேசியாவின் ஜெபத்தையும், சங்கீதங்கள் 22 முதல் 24 மேசியாவுடைய கடந்தகால, நிகழ்கால மற்றும் வருங்கால வேலைகளை விவரிக்கின்றன.
II. சங்கீதங்கள் 42 முதல் 72 (இரண்டாம் பாகம்)
விருப்பத்தின் புத்தகம் என்று இது அழைக்கப்படுகிறது. இது யாத்திராகமத்தைப் பிரதபலிக்கிறது. எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை ஆக்கியதற்காக கர்த்தரைத் துதித்தல். நம்மை இருளின் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை ஆக்கியிருக்கிறார். மொத்தமுள்ள 5 புத்தகங்களில் இது மிகவும் தனிப்பட்ட தன்மையானதாக இருக்கிறது. ஒரு நபருக்குள் தேவனுடைய பிரசன்னத்தின்மீது தாகத்தையும், வாஞ்சையையும் வெளிப்படுத்துகிறது.
∗சங்-42 தேவன்மீது வாஞ்சை. மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சிழத்துக் கதறுகிறது.
∗சங்-45 மணவாளன் மணவாட்டியை சித்தரிக்கும் பாடல்
∗சங்-46 நம்பிக்கையை வெளிப்படுத்தும் பாடல்
∗சங்-51 பாவ அறிக்கையையும் மன்னிப்பையும் காட்டுகிற பாடல்
∗சங்-72 ராஜாவின் ஆளுகையை விவரிக்கும் பாடல்
III. சங்கீதங்கள் 73 முதல் 89 (மூன்றாம் பாகம்)
இதை இஸ்ரவேலின் புத்தகம் என்று அழைக்கலாம். இது லேவியராகமத்தைப் பிரதிபலிக்கிறது. இது குறிப்பாக தம்முடைய உடன்படிக்கையின் மக்களாகிய இஸ்ரவேலரோடு தொடர்புடையதாக இருக்கிறது. பிரமாணங்களின் முக்கியத்துவத்தையும், தேவன் தம்முடைய மக்களிடம் எதை எதிர்பார்க்கிறார் என்பதையும் இந்தப் பகுதியிலே நாம் பார்க்கிறோம். தேவன் நியாயப் பிரமாணத்தைக் கொடுத்து, மக்களைத் தமக்கு அருகில் சேர்த்துக் கொள்வதற்காக அவரைத் துதித்தல். துன்மார்க்கரைக் குறித்து எரிச்சலடைவது தவறு என்பதைக்குறித்த ஒரு மேலான பாடலாக சங்கீதம் 73 இருக்கிறது. தேவனோடு இருப்பதற்காக ஏங்குகிற ஒரு இருதயத்தை சங்கீதம் 84 விவரிக்கிறது.
IV. சங்கீதங்கள் 90 முதல் 106 (நான்காம் பாகம்)
இது தேவனுடைய ஆளுகையின் புத்தகம் என்று இது அழைக்கப்படுகிறது. இது எண்ணாகமத்தைப் பிரதிபலிக்கிறது. இந்த வாழ்வில் நாம் கடந்துசெல்லும் வனாந்திர அனுபவங்களை இது சுட்டிக்காட்டுகிறது. இஸ்ரவேல் தேவனுக்கு விரோதமாகக் கலகம்செய்தபோதும், தேவன் அவர்களை அழிக்காமல், அவர்களுடைய கன்மலையாக இருந்து நடத்தியதற்காக அவரைத் துதித்தல். சங்கீதம் 90 நம்முடைய தனிப்பட்ட வாழ்வில் தேவனுடைய ஆளுகையை விவரிக்கிறது. சங்கீதங்கள் 93, 95 முதல் 99 சிங்காசன சங்கீதங்களாக இருக்கின்றன. இயற்கையின்மீதும், நம்முடைய பெலவீனமான உடைந்த தன்மையின்மீதும் தேவன் இரக்கம்காட்டி, ஆளுகைசெய்வதை இந்தப் பகுதியின் சங்கீதங்கள் விவரிக்கின்றன.
V. சங்கீதங்கள் 107 முதல் 150 (ஐந்தாம் பாகம்)
இது துதியின் புத்தகமாகும். இது உபாகமத்தைப் பிரதிபலிக்கிறது. இந்த இறுதிப் பகுதியில் நாம் அறிய வேண்டியவைகளின் தொகுப்பைப் பார்க்கிறோம். சங்கீதம் 119 வேதவசனத்தின் முக்கியத்துவத்தை வலிறுயுத்துகிறது. சங்கீதம் 150 துதியின் முக்கியத்துவத்தோடு நிறைவுசெய்கிறது. துதியை விவரிக்க 2 எபிரேயப் பதங்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன. 1. ஹல்லெல் (hallel) என்பதற்கு பெருமைபாராட்டுதல் என்றும் 2. யாடா (yadah) என்றால் தேவனுக்கு நம்முடைய நன்றியை முன்வைத்தல் என்றும் அர்த்தமாகும்.
↻சங்கீதங்கள் 113 முதல் 118 ஹல்லெல் சங்கீதங்கள் (துதியின் சங்கீதங்கள்) என்று அழைக்கப் படுகின்றன. பஸ்கா பண்டிகையின் போது இவைகள் பாடப்படும்.
↻சங்கீதங்கள் 120 முதல் 134 ஆரோகன சங்கீதங்கள் என்று அழைக்கப் படுகின்றன. எருசலேமிற்கு திருயாத்திரை செல்லும்போது இவைகள் பாடப்படும்.
↻சங்கீதங்கள் 146 முதல் 150 துதிப்பதற்கான அழைப்பைக் கொடுத்தலோடு நிறைவடைகிறது.
சங்கீதங்களின் பல இடங்களில் மேசியாவாகிய இயேசுவைக்குறித்தும், தேவனுடைய இரக்கத்தையும், அன்பையும்குறித்தும் நாம் பார்க்கமுடிகிறது. தாவீது ஒரு தீர்க்கதரிசி என்று அப்-2: 29-31ல் வாசிக்கிறோம். தாவீது தன்னுடைய வாழ்வின் இயற்கை அனுபவித்திலிருந்து பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்குப் பிறகு நடைபெறவிருந்த நித்திய நிகழ்வுகளை முன்னறிவித்துப் பாடியிருக்கிறார்.
அப்-2: 29-31 சகோதரரே, கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள், அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான், அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது. 30. அவன் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியால், 31. அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லை யென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக் குறித்து இப்படிச் சொன்னான்.
துதிகள், புலம்பல்கள். பாரங்களை இறக்கிவைத்தல், பாவத்தை அறிக்கைசெய்தல், பயத்தை ஒத்துக்கொண்டு தேவனிடம் உதவியை நாடுதல், இருதயத்தை ஊற்றுதல், மன்றாட்டு, ஜெபம் போன்ற பல தன்மைகளை சங்கீதங்களில் நாம் பார்க்கிறோம்.
வேதாகமத்தின் மிகச்சிறிய அதிகாரத்தை வாசித்து முடிக்கலாம்: (சங்-117: 1-2)
1. ஜாதிகளே, எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள், ஜனங்களே, எல்லாரும் அவரைப் போற்றுங்கள். 2. அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது, கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.
இந்த அதிகாரம் மிகச்சிறியது, ஆனால் அது கொடுக்கும் சத்தியம் மிகவும் பெரியதாக இருக்கிறது! ஆமென், அல்லேலூயா!
Glory
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல். பதிவிட்டவருக்கு நன்றி, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
ReplyDelete