வேதாகமத்திற்குரிய பொது முகவுரை


    வேதாகமமானது 1600 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட வேறுபட்ட ஆண்டுகளில், பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலால் 40ற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களைக் கொண்டு எழுதப்பட்டு, வானத்தையும் புமியையும் படைத்த தெய்வத்தால் நமக்குக் கொடுக்கப்பட்ட ஒரு மகிமையான புத்தகமாகும். உயிருள்ள தேவன் உலகிலுள்ள மனிதனோடு தொடர்புகொள்வதற்கும், உலகிலுள்ள மனிதன் உயிருள்ள தேவனோடு தொடர்புகொள்வதற்கும் பாலமாக இருப்பது வேதாகமமாகும். இது பழையஏற்பாடு-புதியஏற்பாடு என இரண்டு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் 929 அதிகாரங்களுடன் 39 புத்தகங்களும், புதியஏற்பாட்டில் 260 அதிகாரங்களுடன் 27 புத்தகங்களும் இருக்கின்றன.
முழுவேதாகமத்தின் மையத்தலைப்பு (Central Theme) என்னவென்றால் மனுக்குலத்திற்கு தேவனுடைய இரக்கமும், அன்பும். இந்த மையத்தலைப்பை வைத்து, 66 புத்தகத்தின் ஒவ்வொரு புத்தகத்திலும் ஒரு தனிப்பட்ட முக்கியத் தலைப்பையும் (Main Theme) இருக்கிறது. ஒவ்வொரு புத்தகத்திலும் தேவனுடைய இரக்கத்தையும், அன்பையும் நாம் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு புத்தகமும் (Each Book of the Bible) பல்வேறு பாகங்களால் தொகுக்கப்பட்ட ஒரு வாகனத்தைப்போல (Many Parts make One Cycle) வேதாகமம் (One Bible) இருக்கிறது. இது ஒரு மதப்புத்தகமோ, அல்லது கிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் சொந்தமான புத்தகமோ இல்லை. மாறாக மனிதர்கள் அனைவருக்குமுரிய ஒரு வாழ்க்கைப் புத்தகமாக, வழிகாட்டும் கையேடாக இது இருக்கிறது. முழுவேதாகமமும் இயேசு கிறிஸ்துவைச் சுற்றுவதாகவும், அவரையே சுட்டிக்காட்டுவதாகவும் இருக்கிறது.
லூக்கா-24: 27 மோசே (முதல் 5 புத்தகங்கள்) முதலிய சகல தீர்க்கதரிசிகசிகளும் (மற்ற 34 புத்தகங்கள்) எழுதின வேதவாக்கியங்கள் எல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
லூக்கா-24: 44 அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப் பிரமாணத்திலும் (ஆதிகாகமம் முதல் உபாகமம் 5 புத்தகங்கள்), தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் (யோசுவா முதல் எஸ்தர் வரை 12, மற்றும் ஏசாயா முதல் மல்கியா வரை 17, மொத்தம் 29 புத்தகங்கள்), சங்கீதங்களிலும் (யோபு முதல் உன்னதப்பாட்டு 5 புத்தகங்கள்) என்னைக்குறித்து எழுதி இருக்கிறவைகளெல்லாம் நிறைவேற வேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.
இயேசு வருவதற்கு முன்பே அவரைக்குறித்து பழைய ஏற்பாடும், இயேசு வந்தபின்பு அவரைக்குறித்தும் புதிய ஏற்பாடும் வெளிப்படுத்தி விவரிக்கின்றன. உதாரணத்திற்கு ஆதியாகமம் 3: 15 உனக்கும் ஸ்திரிக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன், அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். யோவா-3: 16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

வேதாகமத்திலிருந்து…

நீண்ட அதிகாரம்: சங்-119.
வேதத்தின் மையவசனம் சங்-118: 8
மிகச்சிறிய அதிகாரம்: சங்-117.
பழைய ஏற்பாடு மையவசனம் 2நாள்-20: 17
பழைய ஏற்பாடு மைய அதிகாரம் யோபு-29.
புதிய ஏற்பாடு மையவச-அப்-17: 17
புதிய ஏற்பாடு மைய அதிகாரம் ரோம-13

     மூன்று காலங்களைக்குறித்தும் (கடந்தகாலம்-சரித்திரம், நிகழ்காலம்-உண்மை, வருங்காலம்-தீர்க்கதரிசனம்), மூன்று உலகங்களைக்குறித்தும் (பரலோகம், பூலோகம், பாதளம்) சரியாகவும், தெளிவாகவும் விவரிக்கிற ஒரே புத்தகம் வேதாகமமே. இந்தப் புத்தகத்திற்கு மாத்திரமே "பரிசுத்த வேதாகமம் "என்ற சிறப்புப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆதியாகமம் என்ற முதல் புத்தகம், முதல் மனிதனாகிய ஆதாமின் படைப்பையும் தோல்வியையும், வெளிப்படுத்தின விசேஷம் என்ற கடைசிப் புத்தகம் கடைசி ஆதாமாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் மறுபடைப்பையும் ஜெயத்தையும் அறிவிக்கின்றன.


Comments